search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்கா ஊழல்: சி.பி.ஐ. விசாரணை கோரி தி.மு.க. தொடர்ந்த வழக்கு 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
    X

    குட்கா ஊழல்: சி.பி.ஐ. விசாரணை கோரி தி.மு.க. தொடர்ந்த வழக்கு 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

    குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. தொடர்ந்த வழக்கு 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    குட்கா ஊழல் புகார் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோரி தி.மு.க. எம்.எல்.ஏ அன்பழகன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதற்காக சி.பி.ஐ விசாரணைக்கு அவசியமில்லை என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் இதுபற்றி கருத்து தெரிவித்த நீதிபதிகள், சி.பி.ஐ. விசாரணை நடத்த தமிழக அரசு எதிர்ப்பதை பார்த்தால், இந்த வழக்கை ஆழ்ந்து விசாரிக்க வேண்டியுள்ளது என்று கூறினர். மேலும் சி.பி.ஐ. விசாரணைக்கு ஒத்துக்கொண்டு ஏன் போதிய ஒத்துழைப்பை வழங்கக்கூடாது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    ‘குட்கா விவகாரத்தில் முறைகேடுக்கு துணைபுரிந்த அதிகாரிகளை பாதுகாக்க ஊழல் கண்காணிப்பு ஆணையம் முயற்சிக்கிறது. ஹவாலா பணபரிமாற்றம் நடந்துள்ளதால் இந்த வழக்கு சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வரும்’ என உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

    தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இரு தரப்பினரும் எழுத்துப்பூர்வமான வாதங்களை வரும் 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கு விசாரணையையும் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
    Next Story
    ×