
சென்னை:
தமிழக காங்கிரஸ் சார்பில் சத்திய மூர்த்தி பவனில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி தலைமை தாங்கினார்.
அதைதொடர்ந்து சுமதி அன்பரசு ஏற்பாட்டில் 100 எழை பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டன. பொங்கல் விழாவை தொடங்கி வைத்து இலவச சேலைகளையும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் பேசியதாவது:-
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீட்டில் பா.ஜனதா அரசு உள்நோக்கத்துடன் அடிக்கடி சோதனை நடத்துகிறது. அது கண்டிக்கத்தக்கது இன்று நடந்த சோதனையிலும் எனக்கு கிடைத்த தகவல் படி எந்தவிதமான ஆவணங்களும் கைப்பற்ற படவில்லை.
சுப்ரீம் கோர்ட்டில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் பற்றி மூத்த நீதிபதிகள் மக்கள் மன்றத்தில் தகவல் தெரிவித்திருப்பது. மிகுந்த கவலை அளிக்கிறது. இதன்மூலம் சுப்ரீம் கோர்ட்டு மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் சூழ்நிலை உருவாகிவிடக் கூடாது. எனவே உடனடியாக பிரதமர், சட்ட மந்திரி தேவைப்பட்டால் மற்ற எதிர்கட்சி தலைவர்கள் அனைவரையும் கலந்து நீதிபதிகளுடனும் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராகுல் காந்தியின் உத்தரவுபடி தமிழக காங்கிரஸ் தலைவராக நான் தான் இருந்துகொண்டு இருக்கிறேன். என்னை நீக்கப் போவதாக இளங்கோவன் கூறியிருப்பதற்கு நான் எந்த பதிலும் சொல்ல விரும்பவில்லை. அவர் மன உளைச்சலிலும், விரக்தியிலும் இவ்வாறு அவர் பேசுகிறார். அவரை நினைத்து பரிதாபப்படுறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.