
புதுச்சேரி:
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி புதுவையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர்.
இன்று காலை முதல் கடற்கரை சாலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இன்று மாலை அதிகளவில் சுற்றுலா பயணிகள் கூடுவார்கள். இதற்காக அரசு பல ஏற்பாடுகளை செய்துள்ளது.
இதை கவர்னர் கிரண்பேடி பார்வையிட்டு ஆய்வு செய்தார். கவர்னர் மாளிகையில் இருந்து கவர்னர் கிரண்பேடி காரில் புறப்பட்டார். அப்போது சுற்றுலா பயணிகள் சிலர் கவர்னர் மாளிகையை போட்டோ எடுத்து கொண்டிருந்தனர்.
அவர்களை பார்த்தவுடன் காரில் இருந்து கீழே இறங்கிய கவர்னர் கிரண்பேடி அவர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர் அவர்களோடு போட்டோ எடுத்து கொண்டார். பின்னர் அங்கிருந்து கடற்கரை சாலைக்கு சென்றார்.
லே கபே ஓட்டல் முன்பு இறங்கி பார்வையிட்டார். அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டார். பின்னர் பறந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கேமரா பணிகளை பார்வையிட்டார். கடற்கரை சாலை முழுவதும் சென்று பார்த்த பின் வாகனம் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்ட உப்பளம் விளையாட்டு திடல், துறைமுக வளாகம் ஆகியவற்றையும் பார்வையிட்டார். பின்னர் புல்வார் பகுதிகளில் சுற்றிப்பார்த்தார்.
அங்கிருந்து நோணாங்குப்பத்தில் உள்ள படகு குழாமிற்கு சென்று பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். கவர்னருடன் சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு ராஜீவ்ரஞ்சன் மற்றும் போலீசார் உடன் சென்றனர். காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அவர்கள் கவர்னரிடம் விளக்கி கூறினர்.