search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிரியர்களை இடைநீக்கம் செய்ததை மறு பரிசீலனை செய்யலாம்: தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
    X

    ஆசிரியர்களை இடைநீக்கம் செய்ததை மறு பரிசீலனை செய்யலாம்: தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

    போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை பணி இடைநீக்கம் செய்ததை தமிழக அரசு மறு பரிசீலனை செய்யலாம் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    ஊதிய முரண்பாடுகளை களைதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் நடத்தின. இதுதொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ஆசிரியர்கள் குறித்து பல்வேறு கேள்விகளை தமிழக அரசிடம் கேட்டு, அதற்கு பதிலளிக்கும்படி உத்தரவிட்டார்.



    இதையடுத்து நீதிபதி என்.கிருபாகரனை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர். இதுகுறித்து நீதிபதியின் கவனத்துக்கு வக்கீல்கள் சிலர் கொண்டு வந்தனர். இதையடுத்து, நீதிபதிகளையும், நீதித்துறையையும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து, இந்த வழக்கு கடந்த நவம்பர் மாதம் நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆஜராகி, நீதிபதியை விமர்சித்தது தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டனர். அதேபோல, நீதிபதியை விமர்சித்த ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், அந்த ஆசிரியர்கள் மீது தனியாக குற்ற வழக்குகளும் பதிவு செய்துள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    போராட்டத்துக்கு எதிராக ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, நீதிபதி மீது பலர் பல்வேறு விதமாக கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்.



    இதையடுத்து அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும், குற்ற நடவடிக்கையும் தனித்தனியே எடுக்கப்பட்டது. சங்க நிர்வாகிகளும் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டனர். பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அவர்கள் கூறினார்கள். எனவே, ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்களை பணி இடைநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு மறு பரிசீலனை செய்யலாம். இந்த வழக்கை வருகிற ஜனவரி 4-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 
    Next Story
    ×