search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்போன் கோபுரத்தில் ஏறி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி போராட்டம்
    X

    செல்போன் கோபுரத்தில் ஏறி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி போராட்டம்

    மாதம் முழுவதும் வேலை வழங்க கோரி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

    நெய்வேலி:

    நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்துக்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு முதல் கட்டமாக மாதம் முழுவதும் வேலை வழங்கப்பட்டது. ஆண்டுகள் செல்லசெல்ல வேலை வழங்கும் நாட்களை என்.எல்.சி. நிர்வாகம் குறைத்து விட்டது. தற்போது ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டு வருகிறது.

    நெய்வேலி மந்தாரக்குப்பம் அருகே உள்ள கீழ்பாதி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 52). இவர் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் 2-வது சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முதல் கட்ட பணிக்கு சென்றார்.

    பணி முடிந்ததும் வெளியே வந்த அவர், அந்த பகுதியில் இருந்த 60 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி, அதன் உச்சிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், என்.எல்.சி.யில் மாதம் முழுவதும் வேலை வழங்கினால்தான் போராட்டத்தை கைவிடுவேன் என்று கூறினார். இது பற்றி தகவல் அறிந்த மந்தாரக்குப்பம் போலீசார் விரைந்து வந்து, ராஜேந்திரனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர் கீழே இறங்கி வந்தார். அவரை, என்.எல்.சி. மனிதவளத்துறை பொது மேலாளர் நாராயணனிடம் அழைத்துச்சென்றனர். அங்கு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொது மேலாளர் நாராயணன், இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து அவர் அங்கிருந்து சென்று விட்டார்.

    Next Story
    ×