search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியபாண்டியன் தானமாக வழங்கிய நிலத்தில் செயல்பட்டு வரும் பள்ளியை படத்தில் காணலாம்.
    X
    பெரியபாண்டியன் தானமாக வழங்கிய நிலத்தில் செயல்பட்டு வரும் பள்ளியை படத்தில் காணலாம்.

    பள்ளி கட்ட சொந்த நிலத்தை இலவசமாக வழங்கிய இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன்

    ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன், தனது சொந்த ஊரில் பள்ளி கட்டுவதற்காக 20 செண்ட் நிலத்தை இலவசமாக வழங்கி இருக்கிறார்.
    சங்கரன்கோவில்:

    சென்னை குளத்தூரில் நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிப்பதற்காக ராஜஸ்தான் சென்ற சென்னை மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கொள்ளையர்களுடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இது தமிழகம் முழவதும் காவல்துறையினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. பெரிய பாண்டியனின் மறைவு அவரது சொந்தஊரான நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மூவிருந்தாளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சாலைப்புதூர் கிராம மக்கள் அனைவரையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    பெரியபாண்டியன் 4.3.1969அன்று பிறந்தார். இவரது பெற்றோர் செல்வராஜ்- ராமாத்தாள். பெரிய பாண்டியனுக்கு ஜோசப், அந்தோணிராஜ் என 2 சகோதரர்களும், சுந்தரத்தாய், சீனித்தாய், சகுந்தலா என 3 சகோதரிகளும் உள்ளனர்.

    பெரியபாண்டியன் தனது ஆரம்ப கல்வியை சொந்த கிராமத்தில் உள்ள பள்ளியில் படித்தார். 6 முதல் 12-ம் வகுப்பு வரை வன்னிக்கோனேந்தலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியிலும் படித்த அவர், பி.எஸ்.சி. விலங்கியல் பட்டப்படிப்பை மேலநீலிதநல்லூர் கல்லூரியில் முடித்தார்.

    படிக்கும்போதே போலீசில் பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த பெரியபாண்டியன், கல்லூரி படிப்பை முடித்ததும், காவல்துறை தேர்வில் கலந்துகொண்டார். அதில் வெற்றி பெற்று 1993-ம் ஆண்டு திருச்சி சிறப்பு போலீஸ் படை பட்டாலியனில் பயிற்சியில் சேர்ந்தார். அங்கு பயிற்சியை முடித்த அவர் மணிமுத்தாறு பட்டாலியனில் போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார்.

    பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று சப்-இன்ஸ்பெக்டரானார். 2014-ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார். சென்னை மதுரவாயல் இன்ஸ்பெக்டராக கடந்த அக்டோபர் 10-ந்தேதி நியமிக்கப்பட்டார்.

    இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனின் தந்தை பெரும் நிலக்கிழார். இதனால் சிறுவயதிலேயே பெரிய பாண்டியனுக்கு விவசாயத்தில் ஆர்வம் அதிகம் இருந்துள்ளது. தனக்கு சொந்தமான 10 ஏக்கர் தோட்டத்தில் காய்கறி, தோட்டபயிர்கள் பயிரிட்டு வந்துள்ளார். தோட்டத்தில் ஒரு பகுதியில் வீடு கட்டியுள்ளார். அதில் அவரது பெற்றோர், 2 சகோதரர்கள் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர்.

    பெரியபாண்டியனின் தந்தை செல்வராஜ் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். அப்போது அவர், தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தனது பணி ஓய்வுக்கு பின் கிராமத்திற்கு வந்து விவசாயம் செய்யப் போவதாக கூறியிருக்கிறார்.

    கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் பெரியபாண்டியன் தனது கிராமத்தையும், கிராம மக்களையும் மிகவும் நேசித்தார். மூவிருந்தாளி கிராமத்தில் பள்ளிகள் இல்லாததால் இங்குள்ள குழந்தைகள் சுமார் 6 கிலோமீட்டர் தூரமுள்ள தேவர்குளத்திற்கு சென்று படிக்கவேண்டிய நிலை இருந்தது.


    இதனால் மூவிருந்தாளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி அமைக்க பெரிய பாண்டியன் தனது நிலத்தில் இருந்து 20 சென்ட் நிலம் வழங்கியுள்ளார். அதில்தான் தற்போது பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு குழந்தைகள் படித்து வருகின்றனர்.

    அதே போல் தான் சொந்த ஊருக்கு வரும்போதெல்லாம் தனது ஊரில் உள்ள மாணவ-மாணவிகளை நன்கு படிக்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார். இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் குறித்து அவரது கிராமமக்கள் கண்ணீர் மல்க கூறியதாவது:-

    பெரியபாண்டியன் எங்கள் பகுதி மாணவ-மாணவிகளுக்காக 20 சென்ட் நிலம் தானமாக வழங்கினார். இதனை நாங்கள் வாழ்நாளிலும் மறக்க மாட்டோம். மேலும் பெரியபாண்டியன் விடுமுறையில் கிராமத்திற்கு வரும்போதெல்லாம் இளைஞர்களுடன் பேசி அவர்களை அதிகம் படிக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார்.

    தினமும் காலையில் வாக்கிங் செல்லும்போது இளைஞர்களையும் உடன் அழைத்து சென்று உற்சாகப்படுத்துவார். தன்னால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்வார். தற்போது அவரை இழந்திருப்பது எங்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பெரியபாண்டியனின் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையன்று விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பெரியபாண்டியன் தனது சார்பில் பரிசுகள் வழங்கி குழந்தைகள் மற்றும் இளைஞர்களை ஊக்கப்படுத்தியுள்ளார். மேலும் ஏழ்மையான பலருக்கு பல்வேறு உதவிகளை செய்து கொடுத்துள்ளார்.

    ஆண்டுதோறும் கிறிஸ்துமசையொட்டி 10நாட்கள் விடுமுறையில் அவர் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வருவாராம். அதே போல் இந்தாண்டும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வருவதாக தனது சகோதரர் ஜோசப்பிடம் கடந்த சில நாட்களுக்கு முன் போனில் பேசும் போது கூறியிருக்கிறார். ஆனால் இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை என அவரது சகோதரர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
    Next Story
    ×