search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் வழக்கம் போல் சம்பளம் வழங்கப்படும்: நாராயணசாமி
    X

    அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் வழக்கம் போல் சம்பளம் வழங்கப்படும்: நாராயணசாமி

    யூனியன் பிரதேசமான புதுவையில் நிதி நெருக்கடி இல்லையென்றும், வழக்கம்போல அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் சம்பளம் வழங்கப்படும் என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசமான புதுவைக்கு 70 சதவீத மானியத்தை மத்திய அரசு வழங்கி வந்தது. 2007-ம் ஆண்டு புதுவைக்கென தனி கணக்கு தொடங்கிய பின்பு மத்திய அரசு அளிக்கும் நிதி குறைந்தது. 30 சதவீத மானியம் மட்டுமே புதுவைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    சமீபகாலமாக 27 சதவீத நிதி மட்டுமே மத்திய அரசு வழங்கி வருகிறது. குறுகிய நிலப்பரப்பு கொண்ட புதுவையில் கனிமவளம் கிடையாது. இதனால் அரசின் வருவாய் குறைவானதாகும். இருப்பினும் ரிசர்வ் வங்கி, வெளி மார்க்கெட்டில் கடன் வாங்குவதன் மூலம் அரசின் நிதி செலவுகளை சமாளித்து வந்தனர்.

    இந்த நிலையில் 2007-ம் ஆண்டு வாங்கிய கடனுக்கு 10 ஆண்டுகள் கழித்து அசலுடன் வட்டி கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு வழக்கமாக கட்ட வேண்டிய கடன் சுமைக்கான வட்டியையும் செலுத்த வேண்டியுள்ளது.

    இதனால் புதுவை அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் ஜனவரி மாதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியுமா? என்ற நிலை எழுந்துள்து. இந்த நிதி நெருக்கடியை சமாளிக்க ரிசர்வ் வங்கியில் ரூ.350 கோடி கடன்பெற புதுவை அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அனைத்து மாநிலங்களையும் போல புதுவையிலும் நிதி நிலை உள்ளது. இதை நிதி நெருக்கடி என்று கூறுவதை ஏற்க மாட்டோம் என்று கூறியுள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-



    அண்டை மாநிலமான தமிழக அரசுக்கு ரூ. 2½ லட்சம் கோடி கடன் உள்ளது. உத்தரபிரதேச அரசுக்கு ரூ.4 லட்சம் கோடியும், மேற்கு வங்க அரசுக்கு ரூ.3 லட்சம் கோடியும், மராட்டிய அரசுக்கு ரூ.3 லட்சம் கோடியும், கர்நாடக அரசுக்கு ரூ.2 லட்சம் கோடியும் கடன் உள்ளது.

    இதேபோல் புதுவை அரசுக்கு ரூ.6 ஆயிரம் கோடி கடன் உள்ளது. இதற்கான வட்டியை ஏற்கனவே நாம் செலுத்தி வருகிறோம். நிர்வாக தேவைக்காக வெளிமார்க்கெட்டில் இருந்து நாம் கடன் பெறுகிறோம்.

    தற்போது 10 ஆண்டுகளுக்கு முன் பெற்ற கடனை அசலுடன் வட்டி செலுத்த வேண்டியுள்ளது. கடந்த காலங்களில் வாட் வரி விதிப்பு அமலில் இருந்தபோது புதுவைக்கு மாதத்துக்கு ரூ.145 கோடி வருவாய் இருந்தது.

    ஆனால், ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்திய பிறகு வருவாயில் ஸ்திரமற்ற தன்மை நிலவுகிறது. இதுமட்டுமின்றி கலால், பெட்ரோல், போக்குவரத்து, பத்திரப்பதிவு, மின்சாரம் ஆகியவற்றின் மூலம் வருவாய் கிடைக்கிறது. அனைத்து மாநிலங்களுமே கூடுதல் கடனில்தான் இயங்குகிறது. அனைத்து மாநிலங்களும் இந்த கடன்களை தள்ளுபடி செய்து தர மத்திய அரசை கேட்டுள்ளனர். புதுவையிலும் இந்த கடனை தள்ளுபடி செய்ய கோரியுள்ளோம்.

    மத்திய அரசு புதுவைக்கு 6-வது சம்பள கமி‌ஷன் நிலுவை பாக்கியாக ரூ.120 கோடியும், 7-வது சம்பள கமி‌ஷனுக்கு ரூ.550 கோடியும் தர வேண்டியுள்ளது. இது மட்டுமின்றி திட்டமில்லா செலவினங்களுக்கு ரூ.1650 கோடி மத்திய அரசிடம் இருந்து வர வேண்டியுள்ளது.

    தற்போது மத்திய நிதி கமி‌ஷனில் புதுவை சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் பிற மாநிலங்களுக்கு கிடைக்கும் மத்திய அரசு புதுவைக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு நிலுவை தொகையை வழங்கினால் எந்த சிரமும் இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.



    முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம், கவர்னர் கிரண்பேடி அமைச்சரவையை கூட்டி மத்திய அரசிடம் நிதி கோரியிருக்க வேண்டும் என கூறியுள்ளாரே? என கேட்டபோது, அமைச்சரவைக்கும், நிதியை கோருவதற்கும் என்ன சம்பந்தம்? மத்திய மந்திரி அருண்ஜெட்லி அமைச்சரவையை கூட்டியா நிதி கேட்கிறார். மத்திய அரசும் நிதி சிக்கலில் தான் உள்ளது.

    இதுவரை புதுவை அரசின் சார்பில் நிதி மந்திரியை 20 முறை சந்தித்துள்ளேன். மத்திய அரசிடம் நிதி பெற அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

    மேலும் அவரிடம், ஜனவரி மாதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைப்பது சந்தேகம்? என அமைச்சர் கந்தசாமி கூறியுள்ளாரே? என கேட்டபோது, அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டியது அரசின் தலையாய கடமை.

    ஜனவரி மாதம் வழக்கம் போல அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்கும். கூடுதல் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசிடம் தொடர்ந்து நிதி கேட்டு வருகிறோம். நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை, கூட்டுறவுத் துறை நிறுவனங்கள் தொடர்பாகவும் அரசு செயலர் தலைமையில் ஆய்வும் நடத்தி வருகிறோம் என்று கூறினார்.
    Next Story
    ×