search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் 18-ந் தேதி பா.ம.க. கண்டன ஆர்ப்பாட்டம்: ராமதாஸ் அறிவிப்பு
    X

    சென்னையில் 18-ந் தேதி பா.ம.க. கண்டன ஆர்ப்பாட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

    கியாஸ் சிலிண்டர் வினியோகத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து, சென்னையில் 18-ந் தேதி (திங்கட்கிழமை) பா.ம.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சமையல் கியாஸ் சிலிண்டர்களை வினியோகிக்க கூடுதல் கட்டணம் கேட்டு கியாஸ் சிலிண்டர் முகமைகளின் பணியாளர்கள் கொடுக்கும் தொல்லை அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

    மானிய விலையிலான கியாஸ் சிலிண்டர்களை இல்லங்களுக்கு கொண்டு சென்று வினியோகிக்க, அதிகபட்ச விற்பனை விலையுடன் ரூ.50 முதல் ரூ.70 வரை கூடுதலாக வழங்க வேண்டும் என்று முகமைகளின் பணியாளர்கள் கட்டாயப்படுத்துகின்றனர்.

    எரிவாயு ரசீதில் குறிப்பிட்டப்பட்டுள்ள தொகையை மட்டுமே வழங்க முடியும் என்றால், அதை பணியாளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. கூடுதல் கட்டணம் தர மறுக்கும் இல்லத்தரசிகளை கடுமையான வார்த்தைகளில் பேசுவதுடன், கொண்டு வந்த கியாஸ் சிலிண்டரை வினியோகிக்காமல் திருப்பி எடுத்துச் செல்கின்றனர்.

    இது தொடர்பாக, கியாஸ் சிலிண்டர் நிறுவனங்களிடம் புகார் அளித்தாலும் அதன் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கியாஸ் சிலிண்டர் விலை ஒருபுறம் உயர்த்தப்படும் நிலையில், மறுபுறம் கூடுதல் கட்டணமாக ரூ.70 வரை வசூலிப்பது இரட்டைக் கொள்ளை ஆகும். இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

    சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்தவும், இதுபற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வலியுறுத்தி பா.ம.க. சார்பில் 18-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.



    பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்தில் நான் பங்கேற்று கண்டன உரையாற்றுகிறேன். பா.ம.க. துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி ஏற்பாட்டில் நடைபெறும் இந்த போராட்டத்தில் பா.ம.க.வினரும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×