search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமாவளவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: எச்.ராஜா
    X

    திருமாவளவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: எச்.ராஜா

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
    புதுச்சேரி:

    பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா புதுவையில் நிருபர்களிடம் கூறியதாவது:

    புதுவை மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கவர்னர் நேரடியாக சந்தித்து வருகிறார். கவர்னரின் நடவடிக்கையால் புதுவையின் நீர் நிலைகள் மீட்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் படர்ந்திருந்த ஆகாய தாமரைகள் அகற்றப்பட்டுள்ளது. இதனால் மாநில மக்கள் கவர்னர் மீது நல்மதிப்பு கொண்டுள்ளனர். ஆனால் வேண்டுமென்றே காங்கிரசார் திட்டமிட்டு கவர்னர் செல்லும் இடங்களில் கலாட்டா செய்து வருகின்றனர்.

    இது 125 ஆண்டுகால காங்கிரஸ் கட்சிக்கு அழகல்ல. இத்தகைய செயல்பாடுகளை நாராயணசாமி கைவிட வேண்டும். இதை பா.ஜனதா எதிர்கொண்டால் காங்கிரஸ் அரசால் சமாளிக்க முடியுமா? ஏற்கனவே மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் மீது ஏதாவது ஒரு வழக்கை பதிவு செய்துவிட வேண்டும் என காங்கிரஸ் அரசு கங்கனம் கட்டி செயல்படுகிறது. பா.ஜனதா தலைவர்கள் மீது கை வைப்பது மோடி மீது கை வைப்பதற்கு சமம். எனவே அரசு இத்தகைய செயல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புயல் வீசிய அன்றே மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அங்கேயே தங்கி நிவாரண பணிகளை தொடங்கி வைத்தார். மக்களுக்கான சேவைகளை செய்த இயக்கம் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மட்டும்தான். புயல் அடித்த 2-ம் நாள் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் குமரிக்கு வந்து ஒரு நாள் முழுமையாக தங்கியிருந்தார். தொடர்ந்து மீனவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 2 ஆயிரத்து 426 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

    மீனவர்கள் மட்டுமின்றி அப்பகுதியில் விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் பல்வேறு வகையான வாழை விளையும் பூமி. இவை அழிந்துள்ளது. ஐதராபாத்தில் உள்ள வானிலை மையம் கடந்த 28, 29, 30-ந்தேதிகளில் ஒக்கி புயல் தொடர்பாக எச்சரிக்கை விடுத்தது. ஆனால் மாநிலஅரசு இதை சரியாக கண்டுகொள்ளவில்லை. குமரியில் முகாமிட்டுள்ள தேச துரோக கூட்டம் பா.ஜனதாவுக்கு எதிராக மீனவர்களை திசைதிருப்பி போராட்டம் நடத்துகின்றனர்.

    பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்-அமைச்சரின் படத்தை போட்டு கண்ணீர் அஞ்சலி என ஊர்வலம் செல்கின்றனர். இது அநாகரீத்தின் உச்சகட்டம். காப்பாற்றப்பட்ட மீனவர்கள் கடலோர காவல்படையை தங்களின் தெய்வம் என குறிப்பிடுகின்றனர். குமரி மாவட்ட பெண்மணி ஒருவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மட்டும்தான் எங்களுக்கு உதவி செய்தது என தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.

    மே 14 இயக்கம், அணு உலை எதிர்ப்பு இயக்கும் உள்ளிட்ட தீய சக்திகளை விரட்டி அடிக்க வேண்டும். இவர்களில் யாரேனும் ஒருவர் கடலில் இறங்கி மீனவர்களை காப்பாற்றியிருப்பார்களா? சுனாமியால் குமரி மாவட்டம் பாதிக்கப்பட்டபோதே அத்வானி நேரில் வந்து பார்வையிட்டார். தற்போது இதுவரை கண்டிராத இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை மத்திய அரசு ஈடுகட்டும்.


    திருமாவளவன் ஆரம்பகாலத்தில் இருந்தே சமூக பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருகிறார். ஜாதி மோதலை உருவாக்கி மதமாற்றத்தை செய்ய வேண்டும் என அவர் திட்டமிடுகிறார். அவர் பேசிய பேச்சுகளின் சி.டி., வீடியோ ஆதாரங்கள் எங்கள் கைவசம் உள்ளது. திருமாவளவனுக்கு எதிராக பேஸ்புக்கில் கருத்து வெளியிட்டவரை கைது செய்தனர். அப்படியிருக்க திருமாவளவனை கைது செய்ய தமிழக போலீசார் தயங்குவது ஏன்? திருமாவளவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

    ஆர்.கே.நகர் தேர்தல் நியாயமாக நடக்கும் என நம்புகிறேன். இல்லாவிட்டால் கடந்த தேர்தலில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மீண்டும் தொடரும். தமிழக கவர்னர் சட்ட நுணுக்கம் அறிந்தவர். இதனால்தான் தமிழகத்தில் அதிகாரிகளை நேரடியாக சந்தித்து வருகிறார். மாவட்டந்தோறும் அதிகாரிகளை கலந்து பேச கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. இதை தவறு என்றால் தி.மு.க.வுக்கு தைரியம் இருந்தால் கவர்னரை கண்டித்து போராட்டம் நடத்தட்டும்.

    இவ்வாறு எச்.ராஜா கூறினார்.
    Next Story
    ×