search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கன்னியாகுமரியை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க கோரி மனு: இரு அரசுகளுக்கும் ஐகோர்ட் நோட்டீஸ்
    X

    கன்னியாகுமரியை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க கோரி மனு: இரு அரசுகளுக்கும் ஐகோர்ட் நோட்டீஸ்

    ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விளக்கமளிக்குமாறு மத்திய - மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் மதுரை கிளை இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    மதுரை:

    மதுரை அய்யர் பங்களாவை சேர்ந்தவர் ராஜன். இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது:-

    கடந்த வாரம் ஒக்கி புயல் பாதிப்பால் கன்னியாகுமரி மாவட்டம் அதிக பாதிப்புக்குள்ளானது. இதன் காரணமாக ஏராளமான மரங்கள் சாய்ந்து மின்தடையும் ஏற்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதும் பாதிக்கப்பட்டது.

    கடலுக்கு சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் நிலை என்ன ஆனது? என இதுவரை தெரியவில்லை. எனவே இதனை தேசிய பேரிடர் பாதிப்பாக மத்திய அரசு அறிவிக்க உத்தரவிட வேண்டும். மேலும் புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படகுகளை இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க மத்திய- மாநில அரசுகளுக்கு உத்தர விடவேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வேணு கோபால், தாரணி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் கோரிக்கை தொடர்பாக மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் வழக்கை வருகிற 20-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    Next Story
    ×