search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேகர்ரெட்டி மீது நடவடிக்கை தொடரும் - அமலாக்கத்துறை
    X

    சேகர்ரெட்டி மீது நடவடிக்கை தொடரும் - அமலாக்கத்துறை

    பிரபல தொழில் அதிபர் சேகர்ரெட்டி வீட்டில் ரூ.34 கோடிக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சிக்கியது குறித்து அவர் மீது நடவடிக்கை தொடரும் என அமலாக்கத்துறை அதிகாரி கூறியுள்ளார்.
    சென்னை:

    பண மதிப்பிழப்பு நடவடிக்கையையொட்டி நடத்தப்பட்ட சோதனையில் பிரபல தொழில் அதிபர் சேகர்ரெட்டி வீட்டில் ரூ.34 கோடிக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சிக்கின.

    அந்த புதிய ரூபாய் நோட்டுகள் எந்த வங்கியில் இருந்து பெறப்பட்டது என்ற விவரத்தை ரிசர்வ்வங்கியிடம் சி.பி.ஐ. கேட்டது. ஆனால் அதுபற்றிய விவரங்கள் தங்களிடம் இல்லை என்று ரிசர்வ்வங்கி கூறியது.

    புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்ட உடனேயே வங்கிகளுக்கு அனுப்பப்பட்டது. ஒரு மாதத்துக்கு பிறகே ரூபாய் நோட்டுகளின் சீரியல் எண்களை வைத்து எந்தெந்த வங்கிகளுக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டது என்ற பணி தொடங்கப்பட்டது.

    சி.பி.ஐ. குறிப்பிட்டுள்ள புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் சீரியல் எண்கள் தொடர்பான விவரங்கள் எங்களிடம் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது.



    இதனால் சேகர்ரெட்டி மீதுள்ள வழக்கில் அடுத்த கட்டமாக நடவடிக்கை எடுக்க முடியாத நிலை சி.பி.ஐ.க்கு ஏற்பட்டது.

    இதற்கிடையே சேகர் ரெட்டி மீது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து இருக்கிறது.

    இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “சேகர்ரெட்டி மீதான வழக்கை அமலாக்கத்துறை தொடர்வதற்கு ரிசர்வ் வங்கியின் உதவி தேவையில்லை. அவரிடமிருந்து பணம், தங்கத்தை பறிமுதல் செய்து உள்ளோம்.



    சி.பி.ஐ பணியும், அமலாக்கத்துறை பணியும் மாறுபாடுகள் உடையது.

    ஒருவரை சி.பி.ஐ. கைது செய்தால் அவர் குற்றவாளி என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு சி.பி.ஐ.க்கு உள்ளது.

    ஆனால் அமலாக்கத்துறை ஒரு நபரை கைது செய்தால் அவர்தான் குற்றவாளி என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இல்லை. அதே நேரத்தில் தான் குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்க வேண்டியது அந்த நபருக்கு உள்ளது.

    எனவேதான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு சேகர் ரெட்டிக்கு உள்ளது.

    முறையான ஆவணங்களை கொடுத்தால் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை திருப்பி கொடுக்க முடியும். சேகர் ரெட்டியிடம் இருந்து ரூ.34 கோடி புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு, 80 கிலோ தங்கத்தை அமலாக்கத்துறை முடக்கி வைத்து உள்ளனர் என்றார்.
    Next Story
    ×