search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருநங்கை தாரிகா பானுவுக்கு சித்த மருத்துவ கல்லூரியில் அனுமதி: சென்னை ஐகோர்ட் உத்தரவு
    X

    திருநங்கை தாரிகா பானுவுக்கு சித்த மருத்துவ கல்லூரியில் அனுமதி: சென்னை ஐகோர்ட் உத்தரவு

    சேர்க்கை மறுக்கப்பட்ட திருநங்கை தாரிகா பானுவுக்கு சித்த மருத்துவ கல்லூரியில் இடமளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக அரசின் சித்த மருத்துவ கல்லூரியில் சேர்க்கை மறுக்கப்பட்ட திருநங்கை தாரிகா பானு தொடர்ந்த வழக்கு சென்னை ஐகோர்ட் நிதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் கடந்த 17-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

    அப்போது, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் மாற்றுப் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக ஆறு மாதங்களுக்குள் தீர்மானிக்குமாறு முன்னர் சென்னை ஐகோர்ட்டின் முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த தவறிய தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி கிருபாகரன் கண்டனம் தெரிவித்தார்.

    இந்த நீதிமன்றம் அளித்த ஆறுமாத கெடு முடிந்த பின்னரும், இன்னும் பரிசீலனை செய்து வருவதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோர்ட் அளித்த அவகாசம் போதவில்லை என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தை நாடி அவகாசத்தை நீட்டிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

    ஆனால், அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் மாற்றுப் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் விவகாரத்தை காலவரம்பின்றி அதிகாரிகள் நீட்டித்துகொண்டே போக கூடாது.

    எனவே, வரும் 27-ம் தேதிக்குள் இதுதொடர்பான இறுதி முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும். தவறினால், மாநில அரசின் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் சமூக நலத்துறை செயலாளர் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராக நேரிடும் எனவும் நீதிபதி கிருபாகரன் குறிப்பிட்டார்.

    மாற்றுப் பாலினத்தவர்கள் (உரிமைகளுக்கான பாதுகாப்பு) என்ற சட்ட மசோதாவை கடந்த 2-8-2016 அன்று பாராளுமன்ற மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது. பின்னர், 12-9-2016 அன்று பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கும் பரிந்துரைக்கும் இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. நிலைக்குழுவின் பரிந்துரை அறிக்கை கடந்த 21-7-2017 அன்று அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிகிறது.
     
    இந்நிலையில், இந்த மசோதாவுக்கு சட்டவடிவம் அளித்து நடவடிக்கை எடுக்கும் நோக்கம் மத்திய அரசுக்கு உள்ளதா? என்பதை இந்த நீதிமன்றத்துக்கு மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். இவ்விவகாரத்தில் ஏற்படும் கால தாமதத்தால் பொது கழிப்பறைகள் உள்ளிட்ட பல வசதிகளை பயன்படுத்த இயலாமல் மாற்றுப் பாலித்தனவர்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் இதுதொடர்பான முடிவு விரைவாக எடுக்கப்பட வேண்டும்.

    மாற்றுப் பாலினத்தவர்கள் (உரிமைகளுக்கான பாதுகாப்பு) சட்டத்தில் அவர்கள் சந்தித்துவரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான ஏதேனும் உரிமைகள் அளிக்கப்பட்டிருந்தால் அது அவர்களுக்கான நிவாரணமாக நிச்சயம் அமையும் என குறிப்பிட்ட நீதிபதி கிருபாகரன் இவ்வழக்கின் மறு விசாரணையை 27-ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார்.

    இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது இன்னும் ஒருவார காலத்துக்குள் தாரிகா பானுவுக்கு சித்த மருத்துவ கல்லூரியில் அனுமதி அளிக்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் உத்தரவு பிறப்பித்தார்.

    மேலும் அனைத்து கல்வி நிறுவனங்களும் திருநங்கைகளுக்கு என ஒரு குறிப்பிட்ட இடங்களை ஒதுக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

    இந்த உத்தரவின் மூலம் இந்தியாவின் முதல் திருநங்கை மருத்துவ மாணவி என்ற பெருமையை தாரிகாபானு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×