search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன்.
    X
    பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன்.

    நியமன எம்.எல்.ஏ. விவகாரம்: தலைமை செயலாளரிடம் பா.ஜ.க. புகார்

    நியமன எம்.எல்.ஏ. விவகாரத்தில் புதுவை தலைமை செயலாளர் அஸ்வனி குமாரை சந்தித்து பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் புகார் அளித்ததையடுத்து, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்புவதாக தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபைக்கு மக்களால் தேர்வு செய்யப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்களோடு, 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்க முடியும்.

    மாநில அரசின் பரிந்துரையோடு நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய உள்துறை அமைச்சகம் நியமிக்கும். ஆனால் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அரசின் பரிந்துரை இல்லாமல் மத்திய பா.ஜனதா அரசு உள்துறை அமைச்சகம் மூலம் 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது.

    பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், செல்வ கணபதி ஆகியோர் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு கவர்னர் கிரண்பேடி இரவோடு, இரவாக பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தை ஏற்க சபாநாயகர் வைத்திலிங்கம் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்த நிராகரிப்பை 3 பேருக்கும் கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

    மத்திய அரசு அங்கீகரிக்க வலியுறுத்தியும், சபாநாயகர் வைத்திலிங்கம் அவர்களை நிராகரித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இத்தகைய சூழலில் பா.ஜனதா மாநில தலைவரும், மத்திய அரசால் எம்.எல்.ஏ.வாக நியமிக்கப்பட்டவருமான சாமிநாதன் தலைமையில் நிர்வாகிகள் தலைமை செயலாளர் அஸ்வனி குமாரை சந்தித்தனர்.

    புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு, பதவி பிரமாணம் செய்து வைத்த காட்சி.

    அப்போது நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்ட மத்திய அரசு உத்தரவு, விளக்க கடிதம், அரசு வெளியிட்ட அரசாணை ஆகியவற்றை அவரிடம் காண்பித்தனர். சபாநாயகர் நிராகரித்துள்ள வி‌ஷயத்தையும் தெரிவித்தனர். தங்களுக்கு உரிய அங்கீகாரத்தை பெற்றுத் தரும்படி கேட்டுக் கொண்டனர்.

    இதுகுறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்புவதாக தலைமை செயலாளர் உறுதியளித்தார்.

    இதைத் தொடர்ந்து பா.ஜனதா தலைவர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நியமன எம்.எல்.ஏ.க்களை சட்ட விதிகளுக்கு உட்பட்டு முறைப்படி மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்தது. புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவையும் கூடி அரசிதழிலும் வெளியிட்டது. ஆனால் சபாநாயகர் வைத்திலிங்கம் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார். மத்திய உள்துறை அமைச்சகம், அரசிதழில் வெளியிடப்பட்ட எங்கள் நியமனத்தை ஏற்க மறுக்கிறார்.

    இது தொடர்பாக தலைமை செயலாளரிடம் முழுமையான விளக்கம் அளித்துள்ளோம். ஆதாரங்களையும் கொடுத்துள்ளோம். அவர் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்புவதாக தெரிவித்துள்ளார். இதன்பேரில் உள்துறை விரைவில் முடிவெடுக்கும். வருகிற 23-ந்தேதி சட்டமன்ற கூட்டத்தொடரில் புதுவை அரசு வெளியிட்ட அரசிதழோடு பங்கேற்போம்.

    சபாநாயகர் வைத்திலிங்கம்.

    வைத்திலிங்கம் சபாநாயகராக இருப்பதற்கே தகுதியற்றவர். நாடு சுதந்திரமடைந்து 50 ஆண்டுகளில் எந்த மாநில அரசும் வெளியிட்ட அரசாணையை திரும்ப பெற்றதில்லை. ரத்து செய்தது கிடையாது. யூனியன் பிரதேசமான புதுவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. உள்துறை உத்தரவை செயல்படுத்த வேண்டியது அரசின் கடமை. ஆனால் எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தில் ஜனாதிபதி கையெழுத்திட வேண்டும் என சபாநாயகர் சொல்கிறார்.

    இதுவரை நியமித்த எந்த நியமன எம்.எல்.ஏ.க்களுக்கும் ஜனாதிபதி நேரடியாக கையெழுத்து போட்டது இல்லை. நாராயணசாமியை பழிவாங்க வேண்டும் என்பதற்காக சபாநாயகர் செயல்படுகிறார். அரசை முடக்கும் சதி வேலையில் அவர் ஈடுபட்டுள்ளார்.

    இதுகுறித்து உள்துறை அமைச்சகம், கட்சி தலைமையிடம் புகார் தெரிவிக்க பொருளாளர் சங்கர் டெல்லி சென்றுள்ளார். செல்வகணபதி சென்னைக்கு சென்றுள்ளார். கவர்னர் புதுவை திரும்பியவுடன் அவரிடமும் முறையிட உள்ளோம். கவர்னரும் மத்திய அரசுக்கு அறிக்கை சமர்பிப்பார். இதற்கு விரைவில் முடிவு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×