search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விடிய விடிய அடைமழை: சென்னையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது - இயல்பு வாழ்க்கை முடங்கியது
    X

    விடிய விடிய அடைமழை: சென்னையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது - இயல்பு வாழ்க்கை முடங்கியது

    சென்னையில் தொடர் மழை காரணமாக பெரும்பாலான குடியிருப்புகளில் மழை தண்ணீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    வங்கக்கடலில் உருவான வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. 50 சதவீத நீர் நிலைகள் நிரம்பின.

    இந்த நிலையில் வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்த தாழ்வு நிலை இலங்கை அருகே நேற்றிரவு நிலை கொண்டிருந்தது. இன்று அது தமிழக கடலோரத்தை நெருங்கி வந்துள்ளது.

    இந்த குறைந்த காற்றழுத்தமும், வளி மண்டல மேலடுக்கு சுழற்சியும் ஒருங்கிணைந்ததால் மழை இடைவிடாமல் பெய்து வருகிறது. நேற்று காலை தமிழகத்தின் பல பகுதிகளிலும் மிதமான மழையே இருந்தது. ஆனால் பிற்பகலில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது.

    நேற்று மாலை 6 மணிக்கு மழை தீவிரமானது. இரவு 10 மணிக்குப் பிறகு சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்தது. விடிய, விடிய மழை பெய்தபடி இருந்தது.

    இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சராசரியாக 18 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குப் பிறகு சென்னையில் பெய்துள்ள மிக பலத்த மழையாக இது கருதப்படுகிறது.

    இன்று (வெள்ளிக்கிழமை) காலையும் மழை நீடித்தது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் 10 மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்தது போல மழை கொட்டி தீர்த்து விட்டது.

    தொடர் பலத்த மழை காரணமாக நேற்றிரவே சென்னையில் உள்ள அனைத்து முக்கிய சாலைகளும் தண்ணீரில் மூழ்கியது. மழை நீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. எழும்பூர், கோயம்பேடு, அடையார், பெரம்பூர், ஓட்டேரி, வண்ணாரப்பேட்டை, வேளச்சேரி, தரமணி, மந்தைவெளி, மயிலாப்பூர், தாம்பரம் உள்பட பெரும்பாலான பகுதிகளில் மழை தண்ணீர் இடுப்பு அளவுக்கு இருந்தது.

    முக்கிய சாலைகள், தெருக்களில் மழை தண்ணீர் ஆறாக ஓடியதால் நேற்றிரவு பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் சென்னை மற்றும் புறநகரில் நேற்றிரவு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். மாநகர பேருந்தை மட்டுமே நம்பி இருப்பவர்கள் சொல்ல முடியாத அளவுக்கு துயரத்தை அனுபவித்தனர்.

    மாநகர பேருந்துகள் நிறுத்தப்பட்ட நிலையில் டாக்சி, ஆட்டோக்களும் ஓடவில்லை. அதிக பணம் தருவதாக மக்கள் கூறியும் சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக டாக்சி, ஆட்டோ டிரைவர்கள் தங்கள் வாகனங்களை இயக்க மறுத்தனர். இதையடுத்து அலுவலக பணிகள் முடிந்து வீடு திரும்பியவர்கள் நடந்தே செல்ல வேண்டியதாயிற்று.

    பெரும்பாலான ஊழியர்கள் இரவு 9 மணிக்குப் பிறகே வீடு போய் சேர முடிந்தது. ரெயில் பாதையையொட்டி இருப்பவர்கள் சற்று தாமதமானாலும் வீடு போய் சேர்ந்து விட்டனர். மற்றவர்கள் நிலை பரிதாபமாக இருந்தது.

    சாலைகள் தவிர சென்னையில் உள்ள சுரங்கப் பாதைகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் சுரங்கப்பாதைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சென்னையில் பெரும்பாலான குடியிருப்புகளில் மழை தண்ணீர் புகுந்துள்ளது. தரைத்தளம் அமைந்துள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மயிலாப்பூர், மந்தைவெளி, சேலையூர், நங்கநல்லூர், வேளச்சேரி, அடையார், பெரம்பூர், ஓட்டேரி, அண்ணாநகர், முகப்பேர், அயப்பாக்கம் உள்பட பல பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதைத் தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

    தொடர் மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் மக்கள் பாதிக்கப்படுவதில் இருந்து காப்பாற்ற சென்னை மாநகராட்சி பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக 112 இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.  

    இதனால் சென்னையில் பல இடங்கள் இருளில் மூழ்கியது. குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளில் மின் இணைப்பு பெட்டி வரை தண்ணீர் தேங்கியதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பின்னர் மழை ஓரளவு குறைந்ததும் மீண்டும் மின்சாரம் அப்பகுதிகளில் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிவாரண பணிகளை திறம்பட செய்ய அமைச்சர்களின் கண்காணிப்பில் அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

    மழைத் தண்ணீரை முழுமையாக அகற்றும் வரை மக்களின் இயல்பு வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சமாளிப்பது கடினம் என்று தெரிய வந்துள்ளது.
    Next Story
    ×