search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவுரி லங்கேஷ் படுகொலை: சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் போராட்டம்
    X

    கவுரி லங்கேஷ் படுகொலை: சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் போராட்டம்

    கர்நாடக மாநிலத்தில் மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.
    சென்னை:

    கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தின் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராஜேஷ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ் (55). பிரபல நாளிதழ்களில் பணியாற்றிய இவர் தற்போது வாரப்பத்திரிக்கை ஒன்றை நடத்தி வருகிறார். துணிச்சல் மிக்க பத்திரிக்கையாளரான இவர் மதவாதத்திற்கு எதிராக தொடர்ந்து எழுதி வந்துள்ளார்.

    இந்நிலையில், நேற்று மாலை தனது இல்லத்தில் கவுரி லங்கேஷ் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். திட்டமிட்ட இந்த படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழும்பி வருகின்றன.

    இந்நிலையில், நாட்டில் நடுநிலைத்தன்மைக்காக போராடி வந்த மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.

    சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில் அச்சு ஊடகம், ஒளி ஊடகங்களை சேர்ந்த ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர். அரசு விருந்தினர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்ற அவர்கள் இந்த படுகொலை தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிக்க வேண்டும் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

    இதேபோல் தமிழ்நாட்டின் பிறபகுதிகளிலும் பத்திரிகையாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மும்பை, டெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களில் உள்ள பத்திரிகையாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×