search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னரை 2 நாளில் மீண்டும் சந்திப்போம்: தினகரன் ஆதரவாளர் பேட்டி
    X

    கவர்னரை 2 நாளில் மீண்டும் சந்திப்போம்: தினகரன் ஆதரவாளர் பேட்டி

    எங்கள் அணியை சேர்ந்த 21 எம்.எல்.ஏ.க்களும் இன்னும் 2 நாளில் கவர்னரை சந்திக்க உள்ளோம். அவர் சந்திக்க மறுத்தால் ஜனாதிபதியை சந்தித்து முறையிடுவோம் என தங்க.தமிழ்செல்வன் கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    எடப்பாடி பழனிசாமி அணியும் ஓ.பன்னீர் செல்வம் அணியும் இணைந்ததை தினகரன் ஏற்காமல் போர்க்கொடி உயர்த்தினார்.

    தினகரன் அணியில் உள்ள 19 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்தனர்.

    இவர்களை எடப்பாடி அணியினர் தங்கள் பக்கம் இழுத்து விடக்கூடும் என கருதி புதுவை அழைத்து வந்து ஓட்டலில் தங்க வைத்தனர்.

    வெற்றிவேல் தவிர 18 எம்.எல்.ஏ.க்கள் புதுவை ஒட்டலில் தங்கினர். பின்னர் மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து புதுவை ஓட்டலுக்கு வந்தனர்.

    தற்போது 20 எம்.எல்.ஏ.க்களும் புதுவை சின்ன வீராம்பட்டினத்தில் உள்ள சொகுசு ரிசார்ட் ஓட்டலில் தங்கியுள்ளனர். வெற்றிவேல் மட்டும் சென்னையிலேயே இருக்கிறார்.


    புதுவையில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை ஓட்டலின் பின்புறம் உள்ள கடற்கரையில் வாக்கிங் சென்றனர். அப்போது தங்க.தமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தினகரனுக்கு மனப்பூர்வமாக ஆதரவு அளித்து முழு மனதுடன் இங்கு தங்கி இருக்கிறோம்.

    அமைச்சர் தங்கமணி, வேலுமணி ஆகியோர் இங்கு தங்கி இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் குடும்பத்தினருடன் போனில் தொடர்பு கொண்டு பணம் தருகிறோம், பதவி தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறி பேசி வருகிறார்கள்.

    ஆனால், விலை போகிற ஆட்கள் நாங்கள் இல்லை. கட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஒருங்கிணைந்து இருக்கிறோம்.

    தினகரன்- எடப்பாடி பழனிசாமி இடையே பிளவு வந்ததற்கே அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணிதான் காரணம். எங்கள் ஒற்றுமையை கண்டு எதிர் அணியினர் மிரண்டு போய் இருக்கிறார்கள்.

    நாங்கள் யாரையும் பணம் கொடுத்து இழுக்கவில்லை. அப்படி பணம் கொடுத்து இருந்தால் 100-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் எங்கள் அணியில் இருந்திருப்பார்கள்.

    எங்கள் அணியை சேர்ந்த 21 எம்.எல்.ஏ.க்களும் இன்னும் 2 நாளில் கவர்னரை சந்திக்க உள்ளோம். அவர் சந்திக்க மறுத்தால் ஜனாதிபதியை சந்தித்து முறையிடுவோம்.

    தமிழக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார். அவர் கேட்டது நியாயமானது.

    எங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை தினகரன் உரிய நேரத்தில் முடிவு எடுப்பார்.

    இவ்வாறு தங்க.தமிழ் செல்வன் கூறினார்.
    Next Story
    ×