search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவ கலந்தாய்வில் 1000 மாணவர்கள் போலி சான்றிதழ் கொடுத்துள்ளனர்: கமி‌ஷனர் அலுவலகத்தில் புதிய புகார்
    X

    மருத்துவ கலந்தாய்வில் 1000 மாணவர்கள் போலி சான்றிதழ் கொடுத்துள்ளனர்: கமி‌ஷனர் அலுவலகத்தில் புதிய புகார்

    ‘நீட்’ தேர்வு அடிப்படையில் நடந்த மருத்துவ கலந்தாய்வில் 1000 மாணவர்கள் போலி சான்றிதழ் கொடுத்துள்ளதாக கமி‌ஷனர் அலுவலகத்தில் புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    ‘நீட்’ தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு இந்த ஆண்டு நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்ட கலந்தாய்வு கடந்த 24-ந் தேதி தொடங்கியது.



    கலந்தாய்விற்கான தரவரிசை பட்டியலில் வெளி மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் இரட்டை இருப்பிட சான்றிதழ் பெற்று எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். இடங்களை முறைகேடாக தேர்வு செய்வதாக புகார் எழுந்தது.

    இது பற்றி விசாரணை நடத்திய போது கேரள மாநிலத்தை சேர்ந்த 9 மாணவர்கள் போலியான இருப்பிடச்சான்று கொடுத்து மருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தது தெரிய வந்தது. இவர்களில் 4 பேருக்கு எம்.பி.பி.எஸ். இடம் தவறுதலாக ஒதுக்கப்பட்டு விட்டது.

    இதற்கிடையே திண்டிவனத்தை சேர்ந்த அம்ஜத் அலி என்பவர் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில் நீட் தேர்வு அடிப்படையில் நடக்கும் மருத்துவ கலந்தாய்வில் மோசடி நடப்பதாக கூறி இருந்தார்.

    இதைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கினர்.

    இந்த நிலையில் மருத்துவ கலந்தாய்வில் மோசடியாக 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டுள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புதுக்கோட்டையை சேர்ந்த விக்னய்யா என்ற மாணவர் போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் கொடுத்தார். அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    இன்று நடைபெறும் மருத்துவ கலந்தாய்வில் பங்கு கொள்ள இருக்கிறேன். சில மாணவர்கள் திட்டமிட்டே தவறான தகவல்களை அளித்து மருத்துவ கலந்தாய்வில் மோசடியாக இடம் பெற்று தமிழக அரசு, சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் ஒதுக்கீட்டை பெற்றுள்ளனர். இதனால் எனக்கு மன உளைச்சலும், மருத்துவ கல்வி ஒதுக்கீடு பெறுவதில் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

    தமிழக மருத்துவ கலந்தாய்வு தேர்வு பட்டியலில் மோசடியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். புதுச்சேரி, தமிழகம் ஆகிய இரு மருத்துவ பட்டியலிலும் போலியாக இருப்பிடச் சான்று மூலம் இடம் பெற்றுள்ளனர்.

    இதனால் தமிழக மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான மருத்துவ இடங்களை பிற மாநில மாணவர்கள் மோசடியாக தட்டிப்பறித்து வஞ்சித்துள்ளனர். இந்த பிரச்சினையால் எனக்கு மிகுந்த பாதிப்பு மற்றும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    எனவே தமிழக மருத்துவ தேர்வு குழு தலையிட்டு சரியான கலந்தாய்வு இடத்தை எனக்கு பட்டியலிட்டு வழங்க வேண்டும். மோசடியாக விண்ணப்பித்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட விரோதமாக மருத்துவ ஒதுக்கீடு பெற்றதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

    அகில இந்திய மருத்துவ இட ஒதுக்கீடு பெற்றவர்கள் மற்றும் சேர்ந்தவர்கள் இதர மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொள்ள தகுதியற்றவர்கள். இத்தகைய ஒதுக்கீடு பெற்ற நபர்கள் தமிழக மருத்துவ கலந்தாய்வில் முறைகேடாக கலந்து மருத்துவ இடங்களை பெற்றுள்ளனர்.

    தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இந்துக்கள் மற்றும் சீர் மரபினர் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டில் கிறிஸ்தவ பெயர்களை கொண்ட 59 நபர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது. இதை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தை இருப்பிடமாக கொண்டு மாநில பாடத்திட்டத்தில் படித்து 2017-ல் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று ‘இந்து’ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்பில் இட ஒதுக்கீடு வரிசை எண் பெற்றுள்ள எனக்கு மோசடியாக இடம் பெற்றுள்ள மாணவர்களால் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    எனவே மோசடியாக இடம் பெற்றவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இதற்கிடையில் போலி இருப்பிட சான்றிதழ் கொடுத்ததாக 4 கேரள மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இஜாஸ் முகம்மது, மேகரிபால், முகம்மது இஜாஸ், மாணவி மகிபியா ரகுமான் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில் இரண்டு மாணவர்கள் தமிழகத்தில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்ததால் அவர்களுக்கு இருப்பிட சான்றிதழ் தேவையில்லை என்பதால் அவர்களை போலீசார் விடுவித்தனர்.

    இஜாஸ் முகம்மது, முகம்மதுஇஜாஸ் ஆகியோர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அவர்களின் ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர்.
    Next Story
    ×