search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் காங்கிரஸ் ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது: நாராயணசாமி
    X

    புதுவையில் காங்கிரஸ் ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது: நாராயணசாமி

    புதுவையில் கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது என்று கூறினார்.
    புதுச்சேரி:

    கவர்னர் கிரண்பேடியை திரும்பப் பெற வலியுறுத்தியும், நியமன எம்.எல்.ஏ.க்கள் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சி சார்பில் சுதேசி பஞ்சாலை அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது.



    அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    கவர்னர் கிரண்பேடி 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 1400 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்த பா.ஜனதா மாநில தலைவரை நியமித்துள்ளார். நியமன எம்.எல்.ஏ.வாக நியமிக்கப்பட்ட பொருளாளர் சங்கரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. அவ்வாறு பெயர் இல்லாதவரை நியமன எம்.எல்.ஏ.வாக நியமிக்க முடியாது.

    மாநில அரசு பரிந்துரைக்கும் நியமன எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை கவர்னர் பரிசீலித்து மத்திய அரசுக்கு அனுப்புவது தான் கடந்த 30 ஆண்டுகளாக நடக்கிறது. காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் ஏன் நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்கவில்லை எனக் கேட்கிறார்கள். நாம் பட்டியலை அனுப்பி, அவர்கள் நிராகரித்து விட்டால், இந்த விவகாரம் முழுக்க மத்திய அரசு கட்டுப்பாட்டில் சென்று விடும்.

    நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம் என்.ஆர்.காங். பா.ஜ.க. கூட்டுச் சதியாகும். நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு பேரவையில் வாக்களிக்கும் உரிமை இல்லை. ஆட்சி மாறும் என ரங்கசாமி பகல் கனவு காண்கிறார். எவராலும், ஆட்சியை அகற்ற முடியாது. ரங்கசாமிக்கு பதவி வெறி பிடித்துள்ளது. இதனால் தான் யாகம் உள்பட பல்வேறு செயல்களில் ஈடுபடுகிறார். ஆனால் இறைவன் நம் பக்கம் தான் உள்ளார். என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி மாறும் என பொய்யான தகவல்களை கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். முதல்வர் நாற்காலி அவர்களுக்கு கிடைக்காது.

    நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டது தொடர்பான கடிதத்தில் அவர்களின் தந்தை பெயர், முகவரி எதுவுமே இடம் பெறவில்லை. இதுதொடர்பாக சபாநாயகர் கேள்வி எழுப்பினார். இதற்கு கவர்னரும், மத்திய உள்துறையும் பதில் கூறி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் ரகசியமாக பதவிப் பிரமாணம் செய்து விட்டனர். கவர்னருக்கு இந்த அதிகாரமே இல்லை. சபாநாயகருக்கு தான் உண்மையான அதிகாரம் உள்ளது.



    ரகசியமாக செயல்பட்டதின் மூலம் பா.ஜ.க.வின் முகவராகவும், கைப்பாவையாக கவர்னர் செயல்படுவது உறுதி ஆகியுள்ளது. ஜனநாயகம் - சர்வாதிகாரம் இடையே தான் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் கண்டிப்பாக ஜனநாயகம் வெல்லும். மக்களை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட மத்திய பா.ஜ.க. அரசு உடனே நியமன எம்.எல்.ஏ.க்கள் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

    இப்பிரச்சினையை சட்டரீதியிலும், அரசியல் வழியிலும் எதிர்கொள்ள ராகுல்காந்தி அறிவுறுத்தி உள்ளார். ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் பாராளுமன்றத்தில் இப்பிரச்சினை எழுப்பப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×