search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கண்டித்து நெசவு தொழிற்சாலை - விசைத்தறிகள் மூடப்பட்டன
    X

    ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கண்டித்து நெசவு தொழிற்சாலை - விசைத்தறிகள் மூடப்பட்டன

    ஜி.எஸ்.டி. வரியில் இருந்து ஜவுளித் துறைக்கு விலக்கு அளிக்க கோரி விசைத்தறி உரிமையாளர்களின் 3 நாள் வேலை நிறுத்தம் இன்று தொடங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான விசைத்தறி கூடங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டன.
    கரூர்:

    மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி விதிப்பால் ஜவுளி தொழில்கள் மிகவும் பாதிக்கப்படும் என்பதால் அதை கண்டித்து இன்று முதல் 3 நாட்கள் ஜவுளி நிறுவனங்கள் விசைத்தறி கூடங்கள் மூடப்படுகிறது.

    தமிழகத்தில் கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், விருதுநகர் உள்பட பல மாவட்டங்களில் 25 லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிலில் 1 கோடிக்கும் அதிகமானோர் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் மொத்த ஜவுளி உற்பத்தி கடைகள், விசைத்தறி கூடங்கள், ரெடிமேடு கர்மெண்ட், நூல் உற்பத்தி கடைகளும், 5 ஆயிரம் ஜவுளி கடைகள், 30 ஆயிரம் விசைத்தறி கூடங்களும் செயல்படவில்லை.

    ஈரோடு நகரில் ஜவுளி விற்பனை கேந்திரமாக திகழும் கனிமார்க்கெட் ஜவுளி சந்தையும் இன்று முதல் 3 நாட்கள் மூடப்படுகிறது. மேலும் பிளாட்பார ஜவுளிக் கடைகளும் மூடப்பட்டன.

    ஜவுளி உற்பத்தி, விற்பனையாளர்கள் இன்று முதல் 3 நாட்கள் எந்த வங்கியிலும் பணம் போடவோ எடுக்கவோ கூடாது எனவும் முடிவு செய்துள்ளனர்.

    ஈரோடு மொத்த-சில்லரை ஜவுளி விற்பனை கடைகள் முன் ஜவுளி வியாபாரிகள் கறுப்பு கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர்.

    சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகர், இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி உள்பட பல பகுதிகளில் உள்ள ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இன்று மூடப்பட்டிருந்தது. இதனால் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூடப்பட்டுள்ளதால் சுமார் 7 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் 1500 விசைத்தறி உரிமையாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

    கரூர் மாவட்டம் முழுவதும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவு தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ளது. அந்த தொழில் சார்ந்த 200 கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூடப்பட்டன. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சங்கரன்கோவில் நகர் மற்றும் சுப்புலாபுரம், புளியங்குடி பகுதிகளில் உள்ள அனைத்து விசைத்தறி கூடங்களும் அடைக்கப்பட்டு இருந்தன.

    விசைத்தறி தொழிலோடு சம்பந்தப்பட்ட, சாயப் பட்டறைகள், பாவு உற்பத்தி நிலையங்கள், உள்ளிட்ட அனைத்து தொழில் நடைபெறும் இடங்களும் அடைக்கப்பட்டு இருந்தன.

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விசைத்தறி கூடங்கள் இயங்கி வருகின்றன. இதில் பலர் தங்கள் வீடுகளிலேயே விசைத்தறி அமைத்து தொழில் செய்து வருகின்றனர்.

    மாநில அரசின் இலவச மின்சார திட்டத்தின் மூலம் விசைத்தறி தொழில் நடந்து வருகிறது. அவர்களும் போராட்டத்தில் குதித்தனர்.



    ஜி.எஸ்.டி. வரி இனங்களில் பட்டாசை ஆடம்பர பட்டியலில் சேர்த்து 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பட்டாசுகளின் விலை 40 சதவீதம் அதிகரிக்கும்.

    இதை கண்டித்து சிவகாசியில் பட்டாசு ஆலைகள் வருகிற 30-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன.

    இதுகுறித்து பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்க தலைவர் ஆசைத்தம்பி கூறுகையில், “பட்டாசு தொழிலில் 70 சதவீதம் கூலியாக வழங்கப்படுகிறது. எனவே உற்பத்தியாளர்கள் குறைந்த அளவே லாபம் பெற்று வருகின்றனர். சில நேரங்களில் நஷ்டமும் ஏற்படுகிறது.

    தற்போது விதிக்கப்பட்டு உள்ள ஜி.எஸ்.டி. வரியால் பட்டாசு விலை உயர்ந்து உரிமையாளர்களும், தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். விலை உயர்வால் வடமாநில வியாபாரிகள் ஆர்டர்களை ரத்து செய்து வருகிறார்கள்.

    ஜூன் 30-ந்தேதிக்குமேல் உற்பத்தி செய்யும் பட்டாசுகளை விற்க முடியாமல் குடோனில்தான் இருப்பு வைக்க வேண்டும். இதனால் வங்கியில் கடன் வாங்கி தொழில் நடத்துவோர் சிரமப்படுவார்கள்” என்றார்.
    Next Story
    ×