
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள துட்டம்பட்டி ஊராட்சி செங்கான்வட்டம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் துட்டம் பட்டி அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த உறவினரான கோவிந்தராஜ் என்ற வாலிபர் மாணவி பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளி விட்டு வீடு திரும்பும் போதும் அவரை பின் தொடர்ந்து சென்று பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வந்தார்.
இது குறித்து மாணவி அவரது பெற்றோரிடம் கூறினார். இதனை தொடர்ந்து பெற்றோர் தாரமங்கலம் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். ஆனால் புகாரின் பேரில் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த மாணவி வீட்டில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாலியல் ரீதியான தொல்லை கொடுத்த வாலிபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில் 11-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் ஓமலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.