search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் மத்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடந்தபோது எடுத்த படம்
    X
    அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் மத்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடந்தபோது எடுத்த படம்

    பணப்பட்டுவாடா எதிரொலி: அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

    ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் எதிரொலியாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
    சென்னை:

    ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 12-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

    பணப்பட்டுவாடா மற்றும் மோதல் சம்பவங்கள் காரணமாக தேர்தல் களத்தில் பரபரப்பும் பதட்டமும் அதிகரித்துள்ளது.

    ஆர்.கே.நகர் தொகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து புகார் கூறப்பட்டு வந்தது. பறக்கும் படையினரும் பணப்பட்டு வாடாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    ஆனால் தேர்தல் அதிகாரிகளின் கண்ணை மறைத்து நேற்று முன்தினம் தொகுதி முழுவதும் ஒரே நேரத்தில் மொத்தமாக பணப்பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது.

    இடைத்தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆர்.கே.நகரில் கூடுதல் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டதுடன் துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். இதையெல்லாம் மீறி ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் கொடுக்கப்பட்ட சம்பவம் தேர்தல் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    இதனை தொடர்ந்து மேலும் பணப்பட்டுவாடா நடந்து விடக் கூடாது என்பதில் பறக்கும் படையினர் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு வருகிறார்கள். கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ஆர்.கே.நகரில் ஓட்டுப் பதிவுக்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில், பணப்பட்டுவாடா விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் இடைத்தேர்தல் நடைபெறுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

    பரபரப்பான இந்த சூழ்நிலையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளருமான விஜயபாஸ்கர் வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.

    சென்னை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் அவருக்கு சொந்தமான வீடுகள், கல்வி நிறுவனங்கள், குவாரிகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.



    கீழ்ப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரி வீட்டில் சோதனை நடந்தது


    அடையாறு கிரீன் வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் பங்களா, கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுச்சாலையையொட்டி உள்ள கெங்கு ரெட்டி தெருவில் இருக்கும் அமைச்சரின் சகோதரி வீடு உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 6 மணி அளவில் 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் புகுந்து சோதனை நடத்தினர்.

    சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியிலும் வருமான வரி சோதனை நடந்தது. அங்கு 5 அறைகளில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அங்கு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.

    சி.ஆர்.பி.எப். மத்திய போலீஸ் பாதுகாப்புடன் இந்த சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் மட்டும் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 20 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 35 இடங்களில் வருமான வரித்துறையினர் வேட்டையில் ஈடுபட்டனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சவுராஷ்டிரா தெரு வில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 2 வீடுகள் உள்ளன. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சொந்த ஊருக்கு வருகை தரும் விஜயபாஸ்கர் இங்கு தான் தங்குவார். இந்த 2 வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

    புதுக்கோட்டை-அன்னவாசல் இடையே திருவேங்கைவாசல் பகுதியில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான ராசி புளூ மெட்டல்ஸ் கல் குவாரி மற்றும் கிர‌ஷர் மையத்திற்கு 3 கார்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அங்கிருந்த கோப்புகளை ஆய்வு செய்தனர்.

    இலுப்பூர் அருகே உள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    காலை 6 மணிக்கு விஜயபாஸ்கருக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் புகுந்து 100-க்கும் மேற்பட்ட வருமானவரி துறையினர் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையின் போது அமைச்சரின் வீட்டில் இருந்தவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வருமானவரி தொடர்பான விவரங்கள் கேட்டு பெறப்பட்டன.


    எழும்பூரில் அ.தி.மு.க.வினர் தங்கியிருந்த லாட்ஜில் சோதனை நடந்தது

    எழும்பூரில் தனியார் விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரங்களும் சிக்கின. ரூ.120 கோடி பணப்பட்டுவாடா செய்ய திட்டமிட்டு இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

    அதற்கான வரவு-செலவு கணக்கு விவரமும் சோதனையில் சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய இந்த திடீர் வேட்டை மேலும் சூட்டை கிளப்பி இருக்கிறது.

    இந்த சோதனையில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரங்களும், ஆவணங்களும் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
    Next Story
    ×