search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: அ.தி.மு.க.வினரை ஒன்று திரட்ட ஓ.பன்னீர்செல்வம் அதிரடி வியூகம்
    X

    தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: அ.தி.மு.க.வினரை ஒன்று திரட்ட ஓ.பன்னீர்செல்வம் அதிரடி வியூகம்

    தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அ.தி.மு.க.வினர் அனைவரையும் ஒன்று திரட்ட ஓ.பன்னீர் செல்வம் திட்டமிட்டுள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், முதல்- அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதாவின் திடீர் மரணம் தமிழக அரசியல் களத்தில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

    ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார். ஜெயலலிதாவால் ஏற்கனவே 2 முறை முதல்- அமைச்சராக அடையாளம் காட்டப்பட்டவரான ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் கட்சியில் ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் பதவியை சசிகலா பிடித்தார்.

    அடுத்த கட்டமாக முதல்-அமைச்சர் பதவிக்கு சசிகலா குறிவைத்து காய் நகர்த்தினார். அதற்கேற்ப அ.தி.மு.க. சட்டமன்ற தலைவராகவும், சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தனது முதல்- அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர் செல்வம், 2 நாட்கள் கழித்து சசிகலா தரப்பினரால் மிரட்டி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டேன் என்று கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பின்னரே அரசியல் களம் சூடுபிடித்தது. இதன்பின்னரே அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என 2 அணிகள் உருவானது.

    ஓ.பன்னீர்செல்வத்துக்கு மா.பாண்டியராஜன், உள்ளிட்ட 9 எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ஆதரவு தெரிவித்தனர். பொது மக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் தினமும் அவரது வீடு முன்பு கூடினர். மேலும் பல அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் அதற்காகவே காத்திருந்தனர். ஆனால் அதுபோன்று எதுவும் நடக்கவில்லை.

    கூவத்தூர் விடுதியில் தங்கி இருந்த பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கவர்னரின் அழைப்பை ஏற்று எடப்பாடி பழனிச்சாமி முதல்-அமைச்சராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார்.

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் பக்கம் வந்து விடுவார்கள் என்று காத்திருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் இது ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

    ஓ.பன்னீர்செல்வம், தனது அடுத்தகட்ட நடவடிக்கையை புதிய வியூகமாக வகுத்து செயல்பட தொடங்கியுள்ளார். முதல்- அமைச்சர் பதவி பறிபோன நிலையில் நேற்று இரவு மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் சென்று அஞ்சலி செலுத்தி வணங்கிய ஓ.பன்னீர் செல்வம், எங்களது தர்ம யுத்தம் தொடரும். அ.தி.மு.க. கட்சியையும், ஆட்சியையும், ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து மீட்டெடுப்போம் என்று தெரிவித்தார். 125 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ளது. 7½ கோடி மக்களின் ஆதரவு எங்களுக்கே இருக்கிறது என்று கூறியுள்ளனர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள்.

    இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர் செல்வம் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்துள்ளார்.

    எதிர் அணியில் இருக்கும் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் நிலை பற்றி அப்போது மக்களிடம் அவர் எடுத்துக் கூறுகிறார். தனக்கு ஆதரவு அளிக்காத 125 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் தொகுதிக்கும் சென்று அவர் மக்களை சந்திக்கிறார்.

    இந்த சந்திப்பின் போது, அ.தி.மு.க.வினர் அனைவரையும் ஒன்று திரட்ட ஓ.பன்னீர் செல்வம் திட்டமிட்டுள்ளார்.

    இதன் மூலம் எதிர்காலத்தில் அ.தி.மு.க.வினர் அனைவரையும் தனது தலைமையின் கீழ் கொண்டு வருவதற்கு ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டிருப்பதாக ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

    ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த அதிரடி நடவடிக்கையும் வியூகமும் சசிகலா ஆதரவு முன்னணி நிர்வாகிகளை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.
    Next Story
    ×