search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை கடலோர பகுதிகளில் மக்கள் பீதி: 32 கி.மீ. தூரத்துக்கு பரவிய கச்சா எண்ணெய்
    X

    சென்னை கடலோர பகுதிகளில் மக்கள் பீதி: 32 கி.மீ. தூரத்துக்கு பரவிய கச்சா எண்ணெய்

    எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளில் இருந்து கோவளம் கடற்கரை பகுதிகள் வரை சுமார் 32 கி.மீ. தூரத்துக்கு எண்ணெய் படலம் பரந்து விரிந்துள்ளது. எண்ணெய் கசிவால் மீனவ மக்களின் வாழ்வாதாரமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    மும்பையில் இருந்து எண்ணூர் துறைமுகம் நோக்கி ‘‘எம்.டி.டான் காஞ்சீபுரம்’’ என்கிற பெயர் கொண்ட கச்சா எண்ணெய் கப்பல் கடந்த மாதம் 28-ந்தேதி வந்து கொண்டிருந்தது. இந்த கப்பலும், துறைமுகத்தில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி சென்ற எரிவாயு கப்பலும் மோதிக் கொண்டன.

    எண்ணூர் துறைமுகத்தின் நுழைவு கால்வாய் அருகில் ஏற்பட்ட இந்த விபத்தில் எண்ணெய் கப்பல் சேதம் அடைந்தது. இதனால் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட தொடங்கியது.

    எண்ணூர் பாரதியார் நகர், ராமகிருஷ்ணா நகர், திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான கடலோர பகுதிகளில் கடலின் மேல்மட்டத்தில் எண்ணெய் படலம் பரவியது.

    கப்பல் விபத்து ஏற்பட்ட கடந்த சனிக்கிழமை அன்று எண்ணூர் கடலோர பகுதிகளில் மட்டுமே காணப்பட்ட எண்ணெய் படலம் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதனை தொடர்ந்து எண்ணெய் படலத்தை அகற்றும் பணி முடுக்கி விடப்பட்டது.

    துறைமுக அதிகாரிகளும், கடலோர காவல் படையினரும் கூட்டாக ஒருங்கிணைந்து சக்கர் என்ற கருவியின் மூலமாக எண்ணெயை அகற்றும் பணியை மேற்கொண்டனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. மத்திய கப்பல் போக்குவரத்து இணை மந்திரியான பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி மற்றும் அதிகாரிகளும் எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் வேகம் காட்டினர்.

    ஆனால் இதற்கு பலன் கிடைக்கவில்லை. கப்பல் விபத்து ஏற்பட்ட அன்று எண்ணூர் கடல் பகுதியில் மட்டுமே படர்ந்திருந்த எண்ணெய் படலம் படிப்படியாக மின்னல் வேகத்தில் மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

    எண்ணெய் படலத்தை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட குழுவினரால், அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக மெரினா கடற்கரையை தாண்டி திருவான்மியூர் வரையிலும் எண்ணெய் படலம் பரவியது.

    தற்போது கோவளம் வரையிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டு விட்டது. எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளில் இருந்து கோவளம் கடற்கரை பகுதிகள் வரை சுமார் 32 கி.மீ. தூரத்துக்கு எண்ணெய் படலம் பரந்து விரிந்துள்ளது. இதனால் எண்ணெய் படலத்தை அகற்றுவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.



    இதையடுத்து அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்பது பற்றிய ஆலோசனையில் அதிகாரிகள் மூழ்கி உள்ளனர். எண்ணெய் கசிவால் மீனவ மக்களின் வாழ்வாதாரமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆமைகள், மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் செத்து கரை ஒதுங்கி வருகின்றன.

    எண்ணெய் கசிவு ஏற்பட்டு இன்றுடன் 7 நாட்கள் ஆகிறது. ஒரு பகுதியில் எண்ணெய் படலத்தை அகற்றினால், மற்ற பகுதிக்கு அது தாவி விடுகிறது. கடலில் பரவும் எண்ணெயை வெளியேற்றுவதற்காக எப்போதும் பயன்படுத்தப்படும் ‘சக்கர்’ என்ற கருவிக்கு எண்ணெய் படலம் கட்டுப்பட மறுக்கிறது. அதன் மூலமாக எண்ணெயை வெளியேற்றும் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியிலேயே முடிந்துள்ளன.

    இதனால், வாளிகள் மூலமாகவே கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபட் டுள்ளனர். இதன் காரணமாகவே எண்ணெய் படலம் நீண்டுகொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்துவதற் காக கடந்த 7 நாட்களாக துறைமுக ஊழியர்கள் போராடி வருகிறார்கள்.

    எண்ணெய் படலத்தால் மீன்களில் வி‌ஷத்தன்மை பரவி இருக்குமோ? என்கிற அச்சம் பொது மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதனால் மீன்களை வாங்குவதற்கு தயங்கி வருகிறார்கள். இதன் காரணமாக காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 2 ஆயிரம் டன் மீன்கள் விற்பனையாகாமல் தேங்கி உள்ளன.

    பொது மக்கள் மத்தியில் நிலவும் மீன் பயத்தை போக்குவதற்காக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. மீன்களை சாப்பிடுவதால் எந்த பின் விளைவும் ஏற்படாது என்று உறுதி அளிக்கப்பட்ட பின்னரும் பீதி அடங்காமலேயே உள்ளது.

    எண்ணெய் படலத்தால் ஏற்பட்டுள்ள மாசு எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துமோ என்கிற பீதி சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட கடலோர பகுதி மக்கள் மத்தியில் காணப்படுகிறது. எண்ணெய் கசிவின் பாதிப்பு இந்த அளவுக்கு இருக்கும் என்று துறைமுக அதிகாரிகள் நினைக்கவில்லை. எண்ணெய் படலம் பரவ தொடங்கியதும், அது தானாகவே சரியாகி விடும் என்று அவர்கள் எண்ணி இருந்தனர்.

    இதன் காரணமாகவே ஆரம்பத்தில் எண்ணெய் படலத்தை அகற்றுவதற்கு உடனடியாக அவர்கள் களத்தில் இறங்கவில்லை. அதுவே இப்போது பூதாகரமான பிரச்சினையாக மாறிப் போய் உள்ளது. எனவே எண்ணெய் படலத்தை முற்றிலுமாக அகற்றுவது என்பது மிகவும் சவாலான செயலாகவே இருக்கும் என்று கடலோர பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    Next Story
    ×