search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எண்ணூர் பகுதியில் 50 டன் எண்ணெய் கழிவு அகற்றம்
    X

    எண்ணூர் பகுதியில் 50 டன் எண்ணெய் கழிவு அகற்றம்

    எண்ணூர் பகுதியில் இதுவரை 50 டன் எண்ணெய் கழிவு அகற்றப்பட்டுள்ளது. இன்று 6-வது நாளாக தொடர்ந்து பணி நடந்து வருகிறது.
    திருவொற்றியூர்,:

    எண்ணூர் துறைமுகம் அருகே கடந்த 27-ந் தேதி 2 கப்பல்கள் மோதிக் கொண்டன. இதில் ஒரு கப்பலில் இருந்த டீசல் கடலில் கொட்டியது.

    இந்த டீசல் எண்ணூரில் இருந்து திருவான்மியூர் வரை கடற்பரப்பில் பரவியது. தாழ்வான பகுதியான எண்ணூர் பாரதியார் நகர் கடற்கரையில் அதிக அளவு கரை ஒதுங்கியது.

    இதனால் ஏராளமான ஆமைகள் இறந்தன. எண்ணெய் கழிவு காரணமாக கடற்கரை ஓரங்களில் பயங்கர துர்நாற்றம் வீசியது. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து கடலில் கலந்த எண்ணெய் படலத்தை அகற்றும் பணி தொடங்கியது. இதில் தீயணைப்பு வீரர்கள், ஊரக வளர்ச்சித்துறை, பொதுப் பணித்துறை, திருவள்ளூர் மாவட்ட வருவாய்த்துறை, சென்னை மாநகராட்சி ஊழியர்கள், கடலோர காவல் படையினர், எண்ணூர் துறைமுக ஊழியர்கள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

    சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எண்ணெய் கழிவை அகற்றும் பணியை தொடங்கினர். இன்று 6-வது நாளாக தொடர்ந்து பணி நடந்து வருகிறது.

    சூப்பர் சர்க்கர் எனும் கருவி மூலம் கடலில் இருந்து எண்ணெய் உறிஞ்சி எடுக்கப்பட்டது. இதிலும் சிக்கல் ஏற்பட்டதால் குறைந்த அளவே எண்ணெய் கழிவை அகற்ற முடிந்தது. இதைத் தொடர்ந்து பணியாளர்கள் வாளிகள் மூலம் கடற்கரை யோரம் ஒதுங்கிய எண்ணெய் கழிவை அள்ளி எடுத்தனர்.

    மெரினா, பெசன்ட்நகர், திருவான்மியூர் கடற்கரை மணலில் ஒதுங்கிய எண்ணெய் கழிவை தொழிலாளர்கள் அகற்றி வருகிறார்கள்.

    இன்று காலை கூடுதலாக மேலும் 500 பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் இணைந்து எண்ணெயை அகற்றி வருகிறார்கள். கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டரில் பறந்து கடலில் பரவியுள்ள எண்ணெய்யின் அளவை ஆய்வு செய்தனர். கரை ஒதுங்கிய எண்ணெய் அலையின் வேகத்தில் பரவாமல் இருக்க சுற்றிலும் பூம் எனப்படும் ரப்பர் மிதவைகள் போடப்பட்டு உள்ளது.

    இதுவரை 50 டன் எண்ணெய் கழிவு அகற்றப்பட்டுள்ளது. அதனை மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் 20 டன்னுக்கு அதிகமான எண்ணெய் கழிவு கடலில் இருக்கலாம் என்று பணியாளர்கள் தெரிவித்தனர்.

    இன்றும் எண்ணூர் கடல் பகுதியில் பல ஆமைகள் செத்து கரை ஒதுங்கின. ஏற்கனவே இறந்து கரை ஒதுங்கிய ஆமைகள் அகற்றப்படாததால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அதனை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    மீனவர்கள் கடந்த 7 நாட்களாக மீன்பிடி தொழிலுக்கு செல்ல முடியாததால் வருமானம் இன்றி தவிக்கிறார்கள். நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×