search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காண்டிராக்டர் சேகர் ரெட்டிக்கு ரூ.8 கோடி பணம் மாற்றிக் கொடுத்தேன் - கொல்கத்தா தொழில் அதிபர் வாக்குமூலம்
    X

    காண்டிராக்டர் சேகர் ரெட்டிக்கு ரூ.8 கோடி பணம் மாற்றிக் கொடுத்தேன் - கொல்கத்தா தொழில் அதிபர் வாக்குமூலம்

    சென்னை காண்டிராக்டர் சேகர் ரெட்டிக்கு ரூ.8 கோடி பணம் மாற்றிக் கொடுத்ததாக கொல்கத்தா தொழில் அதிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை காண்டிராக்டர் சேகர் ரெட்டிக்கு ரூ.8 கோடி பணம் மாற்றிக் கொடுத்ததாக கொல்கத்தா தொழில் அதிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த காண்டிராக்டரும், தொழில் அதிபருமான சேகர் ரெட்டி வீடு அலுவலகங்களில் சில நாட்களுக்கு முன்பு வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தி சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

    இதில் ரூ.34 கோடி புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் ஆகும். இதையடுத்து சேகர் ரெட்டியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர்.

    சேகர் ரெட்டி சட்ட விரோதமாக மணல் குவாரிகள் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு அவரது கூட்டாளிகள் உடந்தையாக செயல்பட்டனர். இதையடுத்து கூட்டாளிகள் வீடு அலுவலகங்களிலும் வருமானவரித்துறை சோதனை நடந்தது.

    இதற்கிடையே கொல்கத்தாவைச் சேர்ந்த தொழில் அதிபரும், ஹவாலா பணம் பரிமாற்ற புரோக்கருமான பரஸ்மல் லோதா மும்பையில் பிடிபட்டார். சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை டெல்லி கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    சென்னையில் பிடிபட்ட சேகர் ரெட்டிக்கு இவர்தான் புதிய 2,000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொடுத்தவர் என தெரிய வந்தது.

    இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் லோதாவை தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். லோதாவுக்கு யார்-யாருடன் தொடர்பு உள்ளது, எவ்வளவு பணம் பரிமாற்றம் நடந்துள்ளது போன்ற கேள்விகள் கேட்டனர். அவற்றுக்கு விரிவான முறையில் லோதாவால் பதில் அளிக்க முடியவில்லை.

    வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக அவரிடம் இருந்து தெளிவான முறையில் பதில்கள் பெற முடியவில்லை என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

    சேகர் ரெட்டிப்பற்றி கேட்டபோது அவருக்கு ரூ.8 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றிக் கொடுத்ததாக மட்டும் வாக்குமூலம் கொடுத்தார். அதுபற்றி விரிவான முறையில் அவரால் தெரிவிக்க முடியவில்லை.

    இதற்கிடையே சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளிடம் இருந்து கூடுதல் தகவல்களை பெறுவதற்காக அவர்களது காவலை மேலும் நீடிக்க சி.பி.ஐ. தரப்பில் கோர்ட்டில் அணுக முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சேகர் ரெட்டியிடம் ரூ.34 கோடி புதிய நோட்டுகள் எப்படி கிடைத்தது. வங்கி அதிகாரிகள் உடந்தையா? என்று கேட்ட போது, தமிழ் நாடு முழுவதும் உள்ள தனது மணல் குவாரிகளில் இருந்து வசூலான பணம் என்றும் தனக்கு யாரும் பணம் மாற்றித்தரவில்லை என்றும் தெரிவித்து வருகிறார்.

    ஆனால் சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகள் லோதா கொடுத்தது தான் என்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கான ஆதாரங்கள் டெல்லி, மும்பையில் சோதனை நடத்திய போது சிக்கியதாகவும் அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

    Next Story
    ×