search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.நகரில் வீட்டு முன்பு வைக்கப்பட்ட தீபா பேனர் அகற்றம் - ஆதரவாளர்கள் மறியல்
    X

    தி.நகரில் வீட்டு முன்பு வைக்கப்பட்ட தீபா பேனர் அகற்றம் - ஆதரவாளர்கள் மறியல்

    தீபாவை ஆதரித்து அவரது வீட்டு முன்பு வைக்கப்பட்டிருந்த பேனர்களை நேற்றிரவு போலீசார் அகற்றினார்கள். இன்று காலையில் தீபா வீட்டிற்கு வந்த ஆதரவாளர்கள் பேனரை அகற்றியதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் அ.தி.மு.க.வினர் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    தன்னை சந்திக்க வரும் தொண்டர்களை பார்த்து விரைவில் அரசியல் பயணத்தை தொடரப் போவதாக தெரிவித்தார்.

    இந்த நிலையில் தீபாவை ஆதரித்து அவரது வீட்டு முன்பு வைக்கப்பட்டிருந்த பேனர்களை நேற்றிரவு போலீசார் அகற்றினார்கள். இன்று காலையில் தீபா வீட்டிற்கு வந்த ஆதரவாளர்கள் இதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பேனரை அகற்றியதை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தியாகராய நகர் வெங்கடநாராயணசாமி சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மறியலில் ஈடுபட்ட ஆதரவாளர்களை போலீசார் சமாதானப்படுத்தினார்கள். மாநகராட்சியின் அனுமதி பெற்று விளம்பர பலகை வைக்க வேண்டும். அனுமதி பெறாமல் வைக்கப்பட்டதால் பேனர் அகற்றப்பட்டது என்று விளக்கம் அளித்தனர்.



    பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.

    தீபா வீட்டு முன்பு இன்று கூடிய ஆதரவாளர்கள் கூறும்போது, எங்களை அழிக்க நினைத்தால் நாங்கள் வளர்ந்து கொண்டே இருப்போம் என்று ஆவேசமாக கூறினார்கள்.

    தீபா வீட்டின் முன்பு இன்று திரண்ட ஆதரவாளர்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று கோ‌ஷங்களை எழுப்பினார்கள். 300-க்கும் மேற்பட்டவர்கள் அவரது கணவர் மாதவனை சந்தித்து விரைவில் நல்ல முடிவை எடுங்கள். நாங்கள் ஆதரவாக இருப்போம் என்று கூறினார்கள்.

    ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த சுகன்யா என்ற என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தீபாவை சந்திக்க வந்தார். அவர் கண்ணீர் மல்க கூறியதாவது:-

    மறைந்த அம்மாவின் முகம், குரல் ஆகியவற்றை தீபாவின் வழியாக பார்க்க ஆசைப்படுகிறோம். அவரது தோற்றமும் கணீர் குரலையும் தமிழக மக்கள் மறக்க முடி யாது. அம்மாவின் சாயலில் உள்ள தீபா அரசியலுக்கு வர வேண்டும்.

    ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வேண்டும். இது காசு கொடுத்து அழைத்து வரப்பட்ட கூட்டம் அல்ல. அம்மாவின் உண்மையான தொண்டர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் தீபாவின் கணவரை பார்த்து ஆதரவு தெரிவித்துவிட்டு சென்றனர்.

    ஆரல்வாய்மொழியை அடுத்த செண்பகராமன்புதூர் பஸ் நிலைய பகுதியில் நேற்றிரவு சிலர் தீபா பேரவை சார்பில் ஒரு பேனர் வைக்க ஏற்பாடு செய்தனர்.

    அந்த பேனரை தீபா பேரவை ஆதரவாளர்கள் பஸ் நிலையம் அருகே வைத்து விட்டு அதை கட்டுவதற்கு உகந்த இடத்தை தேடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சிலர் திடீரென அந்த பேனரை கிழித்து சேதப்படுத்திவிட்டு ஓடிவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் தீபா பேரவை என்ற அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது. விவேக் என்பவர் இந்த பேரவையை தொடங்கி உள்ளார்.

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் புதிதாக “புரட்சிமலர் தீபா பேரவை” என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

    நத்தம், பண்ணுவார்பட்டி பகுதிகளில் தீபாவை ஆதரித்து போஸ்டர்களும், குட்டுபட்டியில் பேனர்களும் வைக்கப்பட்டன.

    நேற்று அம்மா ஜெ.தீபா பேரவை உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தொடங்கி உள்ளது. இதற்கான படிவங்கள் அச்சிடப்பட்டு நத்தம் ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சிகளுக்கும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண்கள், பெண்கள் என பலரும் ஆர்வமுடன் பெயர்களை பதிவு செய்து வருகின்றனர்.

    Next Story
    ×