search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசிய கைத்தறி தினம்: நெசவாளர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து
    X

    தேசிய கைத்தறி தினம்: நெசவாளர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து

    தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:-
    சென்னை:

    மத்திய அரசு ஆகஸ்ட் திங்கள் 7-ஆம் நாளை தேசிய கைத்தறி தினம் என கடந்த ஆண்டு அறிவித்தது. 1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 7-ஆம் நாள் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கம் பிரிட்டிஷ் பொருட்களை புறக்கணித்து இந்தியாவிலேயே பொருட்கள் தயாரிப்பதை ஊக்குவிப்பதை குறிக்கோளாக கொண்டிருந்தது. அதனை நினைவு கூறும் வகையில் கடந்த ஆண்டு முதல், ஆகஸ்ட் திங்கள் 7-ஆம் நாள் தேசிய கைத்தறி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

    தமிழ்நாட்டின் பொருளாதாரத்திலும், தொழில் உற்பத்தியிலும் ஜவுளித்தொழில், அதிலும் குறிப்பாக கைத்தறி, முக்கிய பங்கு வகிக்கிறது. கைத்தறித் துறையை மேம்படுத்தவும், நெசவாளர்கள் வாழ்வு வளம் பெறவும் பல்வேறு திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

    நெசவாளர்கள் தங்கள் இல்லங்களில் வசதியாக கைத்தறிகள் மூலம் நெசவுத் தொழில் செய்யும் வகையில் 10,000 சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

    கைத்தறி நெசவாளர்களின் வேலைப் பளுவை குறைக்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும், அதன் மூலம் அவர்கள் கூடுதல் வருவாய் ஈட்டவும் 1/2 குதிரைத் திறன் மோட்டார் பொருத்தப்பட்ட பெடல்தறிகள் வழங்கப்படுகின்றன. மின் மோட்டார் பொருத்திய தார் சுற்றும் இயந்திரங்கள் நெசவாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு மின்சார பாவு சுற்றும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    பட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களின் வேலை பளுவைக் குறைத்து உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு ஜக்கார்டு பெட்டி, மின் மோட்டார் பொருத்திய தார் சுற்றும் இயந்திரங்கள் ஆகியவை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படுகின்றன.

    நெசவாளர்கள் தொழில் முதலீடு மற்றும் நடைமுறை மூலதனக் கடன் பெறும் வகையில் நெசவாளர்களுக்கான கடன் அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் மாத ஓய்வூதியம் 400 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக 2012 முதல் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் குடும்ப ஓய்வூதியம் 550 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, கைத்தறி நெசவாளர்களுக்கு இரு மாதங்களுக்கு கட்டணமில்லாமல் 100 யூனிட் அளவுக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரம் 200 யூனிட்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. கைத்தறித் துறைக்கும், நெசவாளர்களுக்கும் பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்திய காரணத்தினால் தான் 1,161 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் 1,011 சங்கங்கள் லாபத்தில் இயங்கி வருகின்றன. கைத்தறி நெசவாளர்கள் அரசின் திட்டங்களை பயன்படுத்தி தங்களது வாழ்வில் வளம் பெற எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×