search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்று மீண்டும் சோதனை: தீனதயாளன் வீடுகளில் 184 சிலைகள் மீட்பு
    X

    இன்று மீண்டும் சோதனை: தீனதயாளன் வீடுகளில் 184 சிலைகள் மீட்பு

    சிலை கடத்தல் வழக்கில் சரணடைந்த தீனதயாளன் வீட்டிலிருந்து இதுவரை 184 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள சிலைகளின் மொத்த மதிப்பு ரூ.100 கோடியை தாண்டும் என்றும் கூறப்படுகிறது.
    சென்னை:

    தமிழகத்தில் பழமை வாய்ந்த கோவில்களை குறி வைத்து விலை மதிப்புள்ள சாமி சிலைகளை கொள்ளையடித்து வெளி நாடுகளுக்கு கடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

    இதனை தடுப்பதற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் இந்த பிரிவின் அதிகாரியாக பொறுப்பேற்ற பின்னர், சிலை கடத்தலை தடுக்கும் போலீசாரின் வேகம் அதிகரித்தது. டி.எஸ்.பி. சுந்தரம் தலைமையிலான தனிப்படை போலீசார் இது தொடர்பாக தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சர்வதேச சிலை கடத்தல் மன்னனான சுபாஷ் கபூர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு சினிமா பட இயக்குனர் வி.சேகர் சிக்கினார்.

    இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த தொழில் அதிபரும், சிலை கடத்தல் மன்னனுமான தீனதயாளனையும் போலீசார் கண்காணித்து வந்தனர். அப்போது அவர் சென்னை ஆழ்வார்பேட்டை பங்களா வீட்டில் சிலைகளை பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து கடந்த மாதம் 31-ந்தேதி ஆழ்வார்பேட்டையில் முர்ரேஸ்கேட் சாலையில் உள்ள தீனதயாளனின் வீட்டில் முதல் முறையாக அதிரடியாக புகுந்து போலீசார் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையின்போது 55 பழங்கால கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அப்போது வீட்டில் இருந்த தீனதயாளனின் கூட்டாளிகளான குமார், மான்சிங், ராஜாமணி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். தீனதயாளன் மட்டும் தப்பி ஓடி தலைமறைவானார்.

    இதையடுத்து அடுத்த 2 நாட்களும் தீனதயாளனின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. 3 நாட்கள் தொடர்ச்சியாக நடந்த இந்த சோதனையில், 71 கற்சிலைகளும், 49 ஐம்பொன் சிலைகளும் 75 அரிய வண்ண ஓவியங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    போலீஸ் பிடி இறுகியதை தொடர்ந்து கடந்த 3-ந்தேதி இரவு தீனதயாளன் போலீசில் சரண் அடைந்தார்.

    உடனடியாக அவரை கைது செய்து சிறையில் அடைக்காமல், போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 10 நாட்களாக சிலை கடத்தல் பற்றியும், வெளிநாட்டு தொடர்புகள் பற்றியும் தீனதயாளனிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

    இதற்கு அவர் பொறுமையாக பதில் அளித்த அவர் சிலை கடத்தலின் பின்னணி குறித்த மர்மங்களையும் விளக்கி கூறியிருக்கிறார். இதன் அடிப்படையில் கடந்த 10 நாட்களாகவே நேரம் கிடைக்கும் போதெல்லாம் தீனதயாளனின் வீட்டில் போலீசார் தொடர்ந்து சோதனை நடத்திக் கொண்டே இருக்கிறார்கள். இன்றும் சோதனை நீடித்தது.

    ஆழ்வார்பேட்டையில் முர்ரேஸ்கேட் சாலையில் உள்ள வீட்டில் மட்டுமே தீனதயாளன் சிலைகளை பதுக்கி வைத்திருப்பதாக கருதப்பட்டது. ஆனால் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அப்பகுதியில் மேலும் 2 இடங்களிலும் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    முர்ரேஸ் கேட் சாலையில் வேறு ஒரு இடத்தில், தீனதயாளனின் குடோனும் ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2-வது தெருவில் அவருக்கு இன்னொரு வீடும் இருப்பதும் தெரிய வந்தது. இது வாடகை வீடாகும். இந்த வீட்டில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர். குடோனிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த சோதனையில் மேலும் 34 கற்சிலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வீட்டின் கீழ்தளத்தில் மட்டுமே போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.

    முதல் மாடியில் மேலும் சாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதையும் போலீசார் கண்டு பிடித்தனர். இன்று அங்கும் சோதனை நடத்தி மேலும் 30 கற்சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இதுவரை 135 கற்சிலைகளும், 49 உலோக சிலைகளும் தீனதயாளனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 184 சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 139 ஓவியங்களும் மீட்கப்பட்டுள்ளன. சிலைகள் அனைத்தும் மிகவும் பழமை வாய்ந்தவையாகும்.

    1000 மற்றும் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலைகளையும் தீனதயாளன் கடத்தி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும். இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள சிலைகளின் மொத்த மதிப்பு ரூ.100 கோடியை தாண்டும் என்றும் கூறப்படுகிறது.

    இந்த சிலைகளின் தொன்மை தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக டெல்லி மற்றும் பெங்களூரில் இருந்து தொல்லியல் துறை அதிகாரிகளும் சென்னை வந்துள்ளனர். மொத்தம் 13 பேர் கொண்ட குழு இந்த ஆய்வை மேற்கொண்டு வருகிறது.

    ஆழ்வார்பேட்டையில் தீனதயாளனின் 2 வீடுகள் மற்றும் குடோனில் நடைபெற்று வரும் இந்த சோதனை மேலும் 3 அல்லது 4 நாட்கள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தோண்ட தோண்ட புதையல் வருவது போல தீனதயாளனின் வீடுகளில் இருந்து அரிய பொக்கிஷங்களாக திகழக்கூடிய சாமி சிலைகள் குவியல் குவியலாக கைப்பற்றப்பட்டு வருகின்றன.

    இப்படி பறிமுதல் செய்யப்படும் சிலைகள் அனைத்தையுமே அங்குலம் அங்குலமாக தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள். தீனதயாளனின் வீடுகளில் நடத்தப்படும் இந்த சோதனை முடியும் போது தான், தொல்லியல் துறையினரின் ஆய்வுப் பணியும் முடிவடையும்.

    இதன் பின்னர் தொல்லியல் துறையினர் தங்களது ஆய்வு அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்வார்கள். இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே பறிமுதல் செய்யப்பட்ட சாமி சிலைகள் கோர்ட்டில் ஒப்படைக்கப்படும். அடுத்த வாரம் இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

    1965-ம் ஆண்டில் இருந்து பழங்கால பொருட்களை விற்பனை செய்து வரும் தீனதயாளன் மீது நெல்லை மாவட்டம் பழவூரில் சாமி சிலைகளை கடத்தியதாக 2005-ம் ஆண்டு மட்டுமே ஒரு வழக்கு பதிவாகி உள்ளது. தற்போது சென்னையில் சிலைகளை பதுக்கி அவர் சிக்கியுள்ளார்.

    தமிழகத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட சாமி சிலைகளை சிங்கப்பூர் வழியாக ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட வெளி நாடுகளுக்கு தீனதயாளன் கப்பலில் கடத்திச் சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    தீனதயாளனின் மகன் ஒருவர் அமெரிக்காவில் இருந்தபடியே சிலை கடத்தலுக்கு சர்வதேச அளவில் உதவிகளை செய்து வருவதையும் போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.

    வெளிநாட்டில் பல்வேறு சிலை கடத்தல் ஏஜெண்டுகளும் தீனதயாளனின் கடத்தல் தொழிலுக்கு துணை புரிந்துள்ளனர். அவர்கள் யார்-யார்? என்பது பற்றிய தகவல்களையும் போலீசார் திரட்டி வருகிறார்கள்.

    இதன் மூலம் தீனதயாளனின் வெளிநாட்டு கூட்டாளிகளையும் கைது செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தீவிர நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார்.

    கடந்த 2012-ம் ஆண்டு சிலை கடத்தலில் கைது செய்யப்பட்ட சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் தீனதயாளனின் நெருங்கிய கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×