search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிலைகளை படத்தில் காணலாம்.
    X
    குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிலைகளை படத்தில் காணலாம்.

    சிலை கடத்தல் வழக்கு: தீனதயாளன் குடோனில் அதிரடி சோதனை - மேலும் சாமி சிலைகள் மீட்பு

    சிலை கடத்தல் வழக்கில் சரணடைந்த தீனதயாளனின் மற்றொரு வீட்டின் குடோனுக்குள் நூற்றுக்கணக்கான சாமி சிலைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. சோதனை முடிந்ததும் எத்தனை சிலைகள் கைப்பற்றப்பட்டது என்பதை அறிவிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
    சென்னை:

    சென்னை ஆழ்வார்பேட்டையில் ஆந்திர தொழில் அதிபர் தீனதயாளன் வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த வாரம் சோதனை நடத்தி பல கோடி மதிப்புள்ள சிலைகளை கைப்பற்றினார்கள்.

    43 உலோக சிலைகள் உள்பட 124 சிலைகள் 40 ஓவியங்கள் அங்கு பதுக்கி வைத்திருந்ததை போலீசார் பறிமுதல் செய்திருந்தனர். இவை அனைத்தும் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சிலைகள்.

    இந்த சாமி சிலைகள் அனைத்தும் தமிழக கோவில்களில் திருடி கடத்தி வரப்பட்டு தீனதயாளன் வீட்டில் பதுக்கி வைத்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

    தீனதயாளனிடம் விசாரிக்கையில் இந்த சிலைகளை வெளிநாடுகளுக்கு விலை பேசி விற்க திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தார்.

    வெளிநாடுகளில் இந்த சிலைகளுக்கு நல்ல கிராக்கி இருப்பதால் தீனதயாளன் 20 ஆண்டுகளாக சிலை கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

    வீட்டுக்குள்ளேயே கேலரி அமைத்து சிலைகளை கண்காட்சி போல் தீனதயாளன் வைத்திருந்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    இவ்வளவு சிலைகளையும் தீனதயாளன் ஒருவர் மட்டும் பதுக்கி வைத்திருக்க முடியாது. அவருக்கு பலபேர் உடந்தையாக இருந்து சிலைகளை கொண்டு வர உதவி செய்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதனால் தீனதயாளனுக்கு யார் யார் உதவி செய்தார்கள் என்று பட்டியல் எடுத்து அவர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதற்காக ஐ.ஜி.பொன் மாணிக்கவேல், டி.எஸ்.பி. சுந்தரம் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தீனதயாளனுக்கு ஆழ்வார் பேட்டையிலேயே இன்னொரு வீடும், அடையாறில் மற்றொரு வீடும் இருப்பது தெரியவந்தது.

    ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2-வது தெருவில் உள்ள வீட்டை குடோனாக பயன்படுத்தி அங்கும் ஏராளமான சிலைகளை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.

    இதையொட்டி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்று காலை அந்த குடோனை சோதனையிட்டனர். 4 உதவி கமிஷனர்கள் உள்பட 20 போலீசார் அங்கு சென்று சோதனையிட்ட போது குடோனுக்குள் ஏராளமான சிலைகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

    குடோன் காம்பவுண்டில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.

    குடோனுக்குள் நூற்றுக்கணக்கான சிலைகள் இருப்பதால் அங்கு யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.

    சோதனை முடிந்ததும் எத்தனை சிலைகள் கைப்பற்றப்பட்டது என்பதை அறிவிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×