search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழில் அதிபர் வீட்டில் கைப்பற்றிய சிலைகளின் தொன்மை குறித்து மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு
    X

    தொழில் அதிபர் வீட்டில் கைப்பற்றிய சிலைகளின் தொன்மை குறித்து மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு

    சென்னை தொழில் அதிபர் வீட்டில் கைப்பற்றிய சிலைகளின் தொன்மை குறித்து மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வை தொடங்கினர்.
    சென்னை:

    சென்னை ஆழ்வார்பேட்டை முர்ரேஸ் கேட் சாலையை சேர்ந்தவர் தொழில் அதிபர் தீனதயாளன்(வயது 83). இவருடைய வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் விலை மதிக்கத்தக்க 43 ஐம்பொன் சிலைகளையும், 71 கற்சிலைகளையும் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் உள்பட போலீசார் அடங்கிய படையினர் அதிரடி சோதனை நடத்தி கைப்பற்றினர்.

    தலைமறைவாக இருந்த தீனதயாளன் கடந்த 3-ந்தேதி சென்னை கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில், ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் முன்னிலையில் சரண் அடைந்தார். அவரை கைது செய்யாமல் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    தீனதயாளன் வீட்டில் கைப்பற்றிய சிலைகளின் தொன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய தொல்லியல் துறைக்கு, ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கடிதம் அனுப்பினார். அதன்படி, சிலைகளை ஆய்வு செய்வதற்காக மத்திய தொல்லியல் துறை தென் மண்டல இயக்குனர் சத்யபாமா தலைமையில் 13 பேர் அடங்கிய குழுவினர் நேற்றுமுன்தினம் இரவு பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

    நேற்று காலை 10.45 மணியளவில் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தீனதயாளன் வீட்டுக்கு மத்திய தொல்லியல் அதிகாரிகள் குழுவினர் வந்தனர். அங்கு, ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுடன் அவர்கள் சுமார் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர் தீனதயாளன் வீட்டுக்குள் சென்று பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய தொடங்கினர்.

    அவர்களுடன் தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நாகசாமியும் ஆய்வு மேற்கொண்டார்.

    ஒவ்வொரு சிலையையும் நீண்ட நேரம் ஆய்வு செய்து, எத்தனை ஆண்டுகள் தொன்மை வாய்ந்தவை என்பதை கண்டறிந்து பதிவு செய்து கொண்டனர். 2-வது நாளாக அதிகாரிகள் குழுவினர் இன்றும் சிலைகளை ஆய்வு செய்ய உள்ளனர்.

    அதிகாரிகள் ஆய்வு முழுமையாக முடிந்து அவர்கள் அறிக்கை தாக்கல் செய்த பின்னர் தான் சிலைகள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் உள்ள திருமேனி அரசு பாதுகாப்பு கூடத்துக்கு எடுத்து செல்லப்படும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    Next Story
    ×