search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    விழிப்புணர்வு வேண்டும் பெண்களுக்கு...
    X

    விழிப்புணர்வு வேண்டும் பெண்களுக்கு...

    பெண்கள், வீட்டுக்குள் தனியாக இருக்கும்போது அன்னியர்கள் யாரேனும் வந்தால், அவர் யார் என்பதையும், அவரை அனுமதிப்பதால் ஆபத்து ஒன்றுமில்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
    2012 -ம் வருடம் டெல்லியில் நடந்துவிட்ட நிர்பயா பாலியல் வன்முறை சம்பவம் தொடங்கி சமீபத்திய பொள்ளாச்சி குற்றங்கள் வரை ஏராளமான பாலியல் பலாத்கார குற்றங்கள், மீடியா மூலமாக நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அவை கண்டு, பொங்கி எழும் பொதுமக்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தினாலும், இத்தகைய சம்பவங்களில் ஈடுபடும் கயவர்களுக்கு அத்தனை சீக்கிரம் சட்டபூர்வமான தண்டனை கிடைத்து விடுவதில்லை என்பது வேதனையளிக்கும் விஷயம். இத்தகைய சம்பவங்கள், சமூகத்தில் அந்தந்த சமயத்தில் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்துகின்றன. ஆனாலும், இவை மீண்டும், மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மக்கள் குறிப்பாக இளம்பெண்கள் மத்தியில் மிகவும் அத்தியாவசியமான விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான்.

    பொள்ளாச்சி சம்பவங்களில், கவனிக்கத்தக்க ஒரு விஷயம் பல இளம்பெண்கள், தான் விபரீதமான ஒரு பொறியில் சிக்கிவிட்டதை அல்லது சிக்கப்போகிறோம் என்று தெரியாமலேயே இருந்திருக்கிறார்கள் என்பதுதான். எதிர்பாராத சூழ்நிலையில் பாலியல் வன்முறைக்கு ஆளாகும்போதோ அல்லது திருட்டு போன்ற நோக்கத்துடன் வரும் அறிமுகமில்லாத மனிதர்களை தனிமையில் எதிர்கொள்ள நேரிடும்போதோ பயந்து நடுங்கி, செய்வதறியாமல் பெண்கள் திகைத்துப்போகிறார்கள். ஆனால், இத்தகைய தருணங்களில், வன்முறையாளர்களின் செயலுக்கு பலியாகாமல், சமயோஜிதமாக நடந்துகொண்டு, தப்பிக்க வேண்டும். அதற்கு உதவக்கூடிய சில எச்சரிக்கைகள், ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

    அடுக்குமாடி கட்டிடங்களில் மேலே செல்வதற்கு படிகளை உபயோகிக்கும்போது, படிக்கட்டுப் பகுதியில் போதிய வெளிச்சம் உள்ளதா என்று கவனித்துக்கொள்ளுங்கள். லிப்ட் இருக்குமானால், லிப்ட்டை உபயோகிப்பது புத்திசாலித்தனம். லிப்ட்டுக்குள் அறிமுகமில்லாத மனிதர்களோடு பயணிக்க வேண்டிய சமயங்களில், லிப்ட்டுக்குள் போனதும், நீங்கள் செல்ல வேண்டிய தளத்துக்குரிய பொத்தானை மட்டும் அழுத்தாமல், அனைத்து தளங்களுக்குமான பொத்தான்களை அழுத்திவிடுங்கள். ஒவ்வொரு தளத்திலும், நின்று, கதவுகள் திறந்துமூடும் சூழ்நிலை உங்களுக்கு பாதுகாப்பானது. மேலும், இதன் மூலமாக நீங்கள் எந்த தளம் வரை செல்லப்போகிறீர்கள் என்பது அந்த மனிதருக்கு சஸ்பென்ஸ் ஆக இருக்கும். அவர் நீங்கள் எதற்காக அத்தனை பொத்தான்களை அழுத்தினீர்கள் என்று அந்த ஆசாமி, குழப்பத்திலிருந்து மீள்வதற்குள் நீங்கள் இறங்க வேண்டிய தளம் வந்துவிடும். பல தளங்களின் பொத்தானை அழுத்தும் உங்கள் புத்திசாலித்தனத்தை அவன் புரிந்துகொண்டதும், “பொண்ணு தைரியசாலி, நாம் வாலாட்டக் கூடாது” என்று ஒழுங்காக இருப்பான்.

    பாதுகாப்பில்லாத ஏரியாவில், தனிமையில் செல்லும்போது, தலைமுடியை விரித்து விட்டுக்கொள்வது பாதுகாப்பு. பின்னல் அல்லது போனி டெயில் போட்டுக் கொண்டிருந்தால், துரத்தி வருகிறவர் அல்லது தாக்குபவர், கெட்டியாக தலைமுடியைப் பிடித்துக்கொண்டு, சுலபமாக உங்களை தாக்குவதற்கு வாய்ப்புண்டு.

    அரை இருட்டு, தனிமையான பகுதிகளில் போகும்போது உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனியுங்கள். காதுகளில் இயர்போன் மாட்டிக்கொண்டு செல்போனில் பேசிக்கொண்டோ, பாட்டுக் கேட்டுக்கொண்டோ செல்லாமல், அக்கம் பக்கத்தில் கவனம் இருக்கட்டும்.



    உங்களைத் தாக்கி, விலை உயர்ந்த உடைமைகளைப் பறித்துச்செல்ல முயலும் திருடர்களிடம் துரதிர்ஷ்டவசமாக சிக்கிக்கொண்டால், பொருட்களை எடுத்து அவர்களின் கைகளில் கொடுக்காதீர்கள். அவர் எதிர்பாராத வகையில், விட்டு எறிந்துவிட்டு, எறிந்த திசைக்கு எதிர்பக்கமாக ஓடத் தொடங்குங்கள். நீங்கள், பாதிப்பின்றி தப்பிக்கலாம்.

    வெளியில் சென்றுவிட்டு, இரவு நேரத்தில் காரில் வீடு திரும்ப வேண்டுமானால், காரை இருளான பகுதியில் நிறுத்திவிட்டுச் செல்லாதீர்கள். இரவு காரை எடுக்கும் முன்பு, எச்சரிக்கையோடு சுற்றும், முற்றும் கவனியுங்கள். காருக்குள் உட்காரும் முன்பு யாராவது ஏற்கனவே காருக்குள் இருக்கிறார்களா என்று கவனிக்கத் தவறாதீர்கள்.

    பெண்கள் பொதுவாகவே இளகிய மனம் கொண்டவர்கள். விபத்து, ரத்தம் என்றாலோ, ஏழ்மை, உடல் ஊனம் என்று சொன்னாலோ ஆண்களை விட எளிதாக மனம் இறங்கி, அவர்களுக்கு உதவி செய்ய முன்வருவார்கள். இந்த நல்ல மனப்பான்மையைப் பயன்படுத்தி, கயவர்கள் திருட்டு, பாலியல் வன்முறை போன்றவற்றில் ஈடுபட வாய்ப்புண்டு. எனவே, எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

    பெண்கள், வீட்டுக்குள் தனியாக இருக்கும்போது அன்னியர்கள் யாரேனும் வந்தால், அவர் யார் என்பதையும், அவரை அனுமதிப்பதால் ஆபத்து ஒன்றுமில்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அன்னியர்களை வீட்டுக்குள் அனுமதிக்கும்பட்சத்தில், வாயில் கதவுகளை மூடாமல், நன்றாகத் திறந்தே வையுங்கள். ஆபத்து என்றால், தப்பித்துச் செல்ல இது வாய்ப்பளிக்கும்.

    இது குறிப்பாக இளம்பெண்களுக்கான எச்சரிக்கை. நீங்கள் பார்ட்டி போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது, உங்களுக்கு குடிப்பதற்குத் தரப்படும் பானங்கள் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. பாதி குடித்துவிட்டு, அதை அப்படியே வைத்துவிட்டு நகர்ந்து சென்று, அதன் பிறகு மீண்டும் வந்து அந்த கிளாஸ் பானத்தை குடிப்பதை அறவே தவிர்த்துவிடுங்கள். ஆட்டோ, டாக்சி பயணங்களின்போது புறப்படும்போதும், பயணத்தின் போதும், உங்கள் குடும்பத்தினரோடு தொடர்பில் இருங்கள். இல்லையெனில், செல்போனில் யாரிடமோ பேசுவது போல சும்மாவே பேசுங்கள்.

    இது கெட்ட எண்ணம் கொண்ட ஓட்டுனருக்குக் கொஞ்சம் பயத்தைக் கொடுக்கும். செயலி (ஆப்) மூலமாக உங்கள் பயண வழியை, குடும்பத்தில் மற்றவரோடு பகிர்ந்துகொள்ள முடியும். இந்த தொழில் நுட்பத்தையும் உங்கள் பாதுகாப்புக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆபத்து நேரத்தில், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காவல் துறையோடு அவசர தொடர்பு கொள்ள உதவும் செயலியை உங்கள் செல்போனில் தரவிறக்கம் செய்து, நெருக்கடி நேரத்தில் பயன்படுத்த தவறாதீர்கள்.

    எம்.பாரதி, மனநல ஆலோசகர்.
    Next Story
    ×