search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தாயா? கொடூரப்பேயா?
    X

    தாயா? கொடூரப்பேயா?

    குற்ற சம்பவங்களில் பெண்களின் ஈடுபாடு அதிகரித்து வந்தாலும் அவர்கள் சார்ந்த சமூகப் பாதுகாப்பிலிருந்து பெண்கள் விலகிச் செல்லும் சூழல் அவர்களை குற்ற நிகழ்வுகளில் சிக்க வைத்துவிடுவதை காலம் கடந்துதான் அவர்கள் உணர்வதைக் காணமுடிகிறது.
    இன்றைய இளந்தலைமுறையினர் நல்ல தங்காளின் கதையை அறிந்திருக்கமாட்டார்கள். அரை நூற்றாண்டுக்கு முன்புவரை பல கிராமங்களில் இரவு நேரங்களில் நல்ல தங்காளின் கதையை உடுக்கை அடித்து பாட்டு பாடும் பழக்கம் நடைமுறையில் இருந்து வந்தது. அதேபோன்று கிராமங்களில் விடிய விடிய நல்ல தங்காள் நாடகம் நடைபெறுவதும், பொழுது விடியும் நேரத்தில் வறுமையின் காரணமாக தான் பெற்ற ஏழு பிள்ளைகளையும் நல்லதங்காள் கிணற்றில் தூக்கிப்போட்டுக் கொலை செய்துவிட்டு தானும் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் காட்சியைப் பார்க்கும் பெண்கள் அனைவரும் அழுது புலம்பியவாறு அவரவர் வீட்டை நோக்கிச் செல்லும் காட்சி அந்த கிராமத்தையே சில மணிநேரங்கள் சோகத்தில் மூழ்கடித்து விடும்.

    தான்பெற்ற ஏழு குழந்தைகளையும் தன்னுடைய அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக கொலை செய்தவள் அல்ல நல்லதங்காள். வறுமை அவளது குழந்தைகளை வதைக்க, அவளது அண்ணியால் அவளுக்கு ஏற்பட்ட அவமானம் ஒருபுறம் அவளைச் சுட்டெரிக்க, இனி உயிர்வாழக் கூடாது எனக்கருதி தான் பெற்றெடுத்த ஏழு குழந்தைகளையும் கொலை செய்யும் முடிவுக்கு அவள் தள்ளப்பட்டதாக நல்லதங்காளின் கதை நகர்கிறது.

    கள்ளக்காதலுக்காக தன் குழந்தைகளை கொலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை காணமுடிகிறது. நேற்று முன்தினம் சென்னையில் நடந்த சம்பவம். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தனது 3 வயது மகனை தோசைக் கரண்டியால் தாய் அடித்துக் கொலை செய்து உள்ளார். திருச்சி அருகே நடந்த மற்றொரு சம்பவத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஒரு தாய் தன்னுடைய 5 வயது மகளை தென்னை மட்டையால் அடித்து கொலை செய்து உள்ளார்.

    சில மாதங்களுக்கு முன்பு சென்னையை அடுத்துள்ள குன்றத்தூரில் மனதை உருக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. காதல் திருமணம் செய்துகொண்ட இளம் தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு அழகிய பெண் குழந்தையும், 7 வயதில் சுட்டிப் பையன் ஒருவனும் இருந்தனர். தனியார் வங்கி ஒன்றில் கணவன் பணிபுரிந்து கொண்டிருந்தான். மகிழ்ச்சிகரமான அந்த குடும்பம் வசித்துவந்த பகுதியிலுள்ள ஒரு பிரியாணி கடைக்கு குடும்பத்துடன் அவர்கள் அவ்வப்பொழுது சாப்பிடச் செல்வதுண்டு. நாளடைவில் அந்த கடையில் வேலை செய்து வந்த இளைஞன் ஒருவனுடன் இரு குழந்தைகளுக்குத் தாயான அந்த பெண்ணுக்குக் காதல் ஏற்பட்டது.

    குழந்தைகள் இருவரையும், கணவனையும் கொலை செய்துவிட்டு வெளியூர் சென்று மறுமணம் செய்துகொள்வதென அவர்கள் இருவரும் திட்டம் தீட்டினர். அதைத் தொடர்ந்து ஒரு நாள் இரவு நேரத்தில் தான் பெற்றெடுத்த அன்புக் குழந்தைகள் இருவருக்கும் விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு கணவனையும் தீர்த்துக்கட்ட அவள் காத்திருந்தாள். அலுவலக வேலையை முடித்துவிட்டு கணவன் அதிகாலையில்தான் வீடு திரும்பினான். அதுவரை காத்திருக்க முடியாத அவள் காதலனுடன் மறுமணம் செய்துகொண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்க இரவோடு இரவாக சென்னையை விட்டு வெளியேறிவிட்டாள்.

    அவளது வாழ்க்கையில் விதி வேறுவிதமாக விளையாடிவிட்டது. ஓரிரு நாட்களில் அவளும் அவனும் போலீசாரால் கைது செய்யப்பட்டு இரட்டைக் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். பழிக்குப்பழி வாங்கும் விதத்தில் தென்மாவட்டங்களில் நிகழ்த்தப்படும் பல கொலை சம்பவங்களில் பெண்களுக்கு மிகுந்த பங்களிப்பு உண்டு. குறிப்பாக கணவனைப் பறிகொடுத்த பெண்கள் பலர் கொலையாளிகளைப் பழி வாங்கும்வரை கணவன் கட்டிய தாலியை அகற்ற மாட்டேன் என்று சபதம் எடுத்துக்கொண்ட சம்பவங்கள் பல உண்டு. காலப்போக்கில் இம்மாதிரியான நடைமுறைகள் தென்மாவட்டங்களில் மறையத் தொடங்கின. ஆனால் சென்னையை அடுத்துள்ள பகுதிகளில் தாதாக்கள் போன்று பெண்களே முன்நின்று நிகழ்த்திய கொலை சம்பவங்களைச் சமீப காலங்களில் காணமுடிகிறது.

    சென்னையின் மையப் பகுதியில் ரியல் எஸ்டேட் செய்து வந்த நபர் ஒருவரை முன்விரோதம் காரணமாக ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த ரவுடி தலைமையிலான கும்பல் ஒன்று பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையிலேயே பட்டப்பகலில் கடந்த ஆண்டு கொலை செய்தது. அக்கொலைக்குப் பழி வாங்கும் செயலில் கொலையானவரின் மனைவி ஈடுபட்டாள். திட்டமிட்டபடி தன் கணவனைக் கொலை செய்தவர்களில் முக்கியமான ரவுடியை இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னை புறநகர் பகுதியில் கொலை செய்ததும், அதைத் தொடர்ந்து அவளைப் போலீசார் கைது செய்த செய்தியும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

    சமுதாயத்தில் நிகழும் குற்றங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வறிக்கைகள் கூறும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளன. தேசிய குற்ற ஆவணக்கூட அறிக்கையின்படி 2016-ம் ஆண்டில் இந்தியாவில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதற்காக பெண்கள் அதிக எண்ணிக்கையில் கைது செய்யப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சிறப்பு சட்டங்களின்படி 31,036 பெண்கள் 2016-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அவர்களில் 296 பேர் கொலை குற்றத்திற்காகவும், 298 பேர் கொலை முயற்சி செய்த குற்றத்திற்காகவும், 132 பேர் ஆட்களை கடத்திய சம்பவங்களில் ஈடுபட்டதற்காகவும், வழிப்பறி வழக்குகளில் 37 பேரும், மோசடி வழக்குகளில் 326 பேரும், போதைப் பொருட்கள் கடத்திய மற்றும் விற்பனை செய்த வழக்குகளில் 625 பேரும், திருட்டு வழக்குகளில் 890 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிக அளவில் குற்ற வழக்குகளில் பெண்கள் தண்டனை பெற்ற மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக தேசிய குற்ற ஆவணக்கூட புள்ளிவிவரங்கள் தெரியப்படுத்துகின்றன. இதற்கான காரணம் குறித்து பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தமிழ் சமூகம் தள்ளப்பட்டுள்ளது.

    அதிக அளவில் பெண்கள் கல்வி கற்று வரும் தமிழ் சமூகத்தில் குற்ற வழக்குகளில் பெண்களின் ஈடுபாடு அதிகரிக்கக் காரணம் என்ன?கல்வி கற்பது வாழ்க்கை முறையையும், வாழ்க்கை தரத்தையும் உயர்த்துவதற்காகத்தான் என்ற புரிதல் இல்லாமல் சுகபோக வாழ்க்கை வாழ்வதற்காகத்தான் என்ற எதிர்பார்ப்பு சமூகத்தில் மேலோங்கியிருப்பதைக் காணமுடிகிறது. முறையற்ற வகையில் வருமானத்தைப் பெருக்கிக்கொள்வதில் தவறில்லை என்ற உணர்வு சமுதாயத்தில் துளிர்விடத் தொடங்கிவிட்டது. வருமானம் கிடைக்கிறது என்பதற்காக முறையற்ற வகையில் செயல்பட்டால் ஒரு நாள் சட்டத்தின் முன் குற்றவாளியாக நிற்க நேரிடும் என்பதைப் பலர் பொருட்படுத்துவதில்லை.

    ஏழை, பணக்காரர் என பாகுபாடு இன்றி அனைவரின் வீட்டு வரவேற்பறைகளில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டிகள் மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் செய்தி எத்தகையது? பெண்கள் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சி தொடர் நாடகம் ஒன்றில் வரும் பெண் கதாப்பாத்திரம் தன்னுடைய பேத்தியைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவர்களைப் பழிவாங்க பெண் குற்றவாளி ஒருவரைத் தேர்வு செய்து அவள் மூலம் பழிவாங்கும் படலத்தை நிறைவேற்றிக் கொள்ளும் குற்ற நிகழ்வுகளை மையப்படுத்தும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

    குற்ற செயல்களில் பெண்கள் ஈடுபடுவதைக் கதைக்களமாக கொண்டு தொலைக்காட்சிகள் நாடக சீரியல்களை வர்த்தக ரீதியாக தயாரித்து ஒளிபரப்புவதால் நிகழும் சமூகக் குற்றங்களை நம் சமூகம் கண்டும் காணாமல் இருப்பது வேதனைக்குரியது. குற்றம் புரிந்ததற்காக ஒரு பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது அவளது குடும்பத்தை மட்டுமின்றி அவளது குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாழாக்கி அவர்களைச் சமூகத்திற்குப் பாரமாக்கிவிடுகிறது.

    பொருளாதார பாதுகாப்பு இன்மை, குடும்ப வாழ்வில் ஏற்படும் மனஅழுத்தம், ஆடம்பர வாழ்க்கை மீதான மோகம், கூடா நட்பு, எதிர்பார்ப்பில் ஏற்படும் ஏமாற்றங்கள், கிராமங்களில் இருந்து நகரங்களுக்குக் குடிபெயர்ந்தவர்கள் நகர சூழலை அனுசரித்துக்கொள்ள இயலாத நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குற்ற சம்பவங்களில் பெண்களின் ஈடுபாடு அதிகரித்து வந்தாலும் அவர்கள் சார்ந்த சமூகப் பாதுகாப்பிலிருந்து பெண்கள் விலகிச் செல்லும் சூழல் அவர்களை குற்ற நிகழ்வுகளில் சிக்க வைத்துவிடுவதை காலம் கடந்துதான் அவர்கள் உணர்வதைக் காணமுடிகிறது.

    பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்.,

    காவல்துறை தலைவர்(ஓய்வு) சென்னை.
    Next Story
    ×