search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பாதுகாப்பான போக்குவரத்து நமது கடமை - நமது உரிமை
    X

    பாதுகாப்பான போக்குவரத்து நமது கடமை - நமது உரிமை

    போக்குவரத்து நிறைந்த சாலைகளில் இரு சக்கர வாகன ஓட்டிகள் காட்டும் உக்கிரம், பிற மனிதர்களின் பாதுகாப்பில் வெளிப்படுத்தும் உதாசீனம், கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியது; தண்டிக்கப்பட வேண்டியதும் கூட.
    உலக நாடுகளில் இந்தியா மிகவும் விசித்திரம் ஆனது. போக்குவரத்து மிகுந்த சாலைகளில் ‘சிக்னல்’ விளக்கு வைத்து, அதன் கீழே காவலரையும் பணியில் அமர்த்துகிற நாடு உலகிலேயே அநேகமாக இந்தியா மட்டுமாகத்தான் இருக்கும். சட்ட விதிமுறைகளைப் பின்பற்றுவதில் நாம் காட்டும் மெத்தனம், அலட்சியம் மிகவும் அலாதியானது. விதி மீறல், ஒழுங்கீனம் ஆகியன நாடு முழுதும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. இந்த விஷயத்தில், எந்த ஒரு மாநிலமும் விதிவிலக்கு இல்லை தமிழகம் உள்பட.

    இது தொடர்பாக சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்றம், தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறது. இரு சக்கர வாகனங்களில் இரண்டுக்கும் மேற்பட்டோர் பயணித்தால், போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இதனைக் கண்டும் காணாதது போல் அமைதியாக இருந்து விடுவதாகத் தனது கண்டனத்தையும் பதிவு செய்து இருக்கிறது உயர் நீதி மன்றம்.

    இதேபோன்று, இந்தப் பிரச்சினையின் மறு பக்கத்தையும் நீதிமன்றம் கடுமையாகச் சாடி இருக்கலாம் என்று தோன்றுகிறது. பொதுத் தெருக்களில், போக்குவரத்து நிறைந்த சாலைகளில் இரு சக்கர வாகன ஓட்டிகள் காட்டும் உக்கிரம், பிற மனிதர்களின் பாதுகாப்பில் வெளிப்படுத்தும் உதாசீனம், கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியது; தண்டிக்கப்பட வேண்டியதும் கூட.

    சென்னை உள்பட பல நகரங்களில், சாலையைக் கடப்பது, மிகவும் ஆபத்தான ஒன்றாக மாறி விட்டது. சிறுவர், முதியோர், நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் படும் இன்னல்கள் சொல்லி முடியாது. தெருவின் ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கம் செல்வதற்குள் உயிர் போய் வந்து விடுகிறது.

    ஒருவர் சாலையைக் கடக்க யத்தனிக்கிறார் என்றால் அவருக்கு முதலில் வழி விட்டுத்தான், வாகன ஓட்டி செல்ல வேண்டும். ஆனால், சீறிப் பாய்கிற வாகனங்கள் எதுவும் சாலையைக் கடக்கிற ஒருவருக்காக வேகத்தைக் குறைத்துக் கொள்வது கூட இல்லை. மித மிஞ்சிப் போனால், காதைத் துளைக்கிற அளவுக்கு, ‘ஹாரன்’ அடிப்பது மட்டுமே நடக்கிறது.

    இரவு நேரங்களில் கண்களில் ஊடுருவிச் செல்லும் அதிக வெளிச்சம் தரும் முகப்பு விளக்குகளைப் போடுவது;

    அல்லது, முகப்பு விளக்குகளை அணைத்து விட்டு வண்டி ஓட்டுவது, எதிர்த் திசையில் வேகமாக வருவது;

    மூன்று, நான்கு பேர் ஒரே வண்டியில் குழுவாக சவாரி செய்வது; வலது, இடது இரண்டு பக்கமும் ‘ஓவர்டேக்’ செய்வது;

    குறுக்கும் நெடுக்குமாக வண்டி ஓட்டுவது... என்று எல்லா வகை சாகசங்களையும் சாலைகளில் சர்வ சாதாரணமாக காண முடிகிறது.

    ஒரு வாசகம் உண்டு ‘உண்பது நமக்கு; உடுத்துவது பிறருக்கு’. அதாவது, நம் உடல் நலனுக்கு எது ஏற்றதோ அதைத்தான் சாப்பிட வேண்டும்; அதேபோல, மற்றவர்கள் எதை ஏற்கிறார்களோ அந்த உடையைத்தான் அணிந்து கொள்ள வேண்டும். வாகன ஓட்டிகளுக்கும் இது பொருந்தும்.

    நமக்கு எது ஏற்றதாக இருக்கிறதோ அந்த வாகனம்தான் வைத்துக் கொள்ள வேண்டும்; மற்றவர்களுக்கு எது இடையூறு தராமல் இருக்கிறதோ, அதுதான் ஓட்டுகிற ‘ஸ்டைல்’ஆக இருத்தல் வேண்டும். அளவுக்கு அதிகமான வேகம், நம்மை மட்டுமன்று; பிறரையும் துன்பத்துக்கு உள்ளாக்கும் என்பதை உணர வேண்டும்.

    ஒருவரின் அஜாக்கிரதைக்கு வேறு யாரோ ஒருவர் ஏன் பாதிக்கப்பட வேண்டும்...? ஒருவரை அச்சுறுத்துகிற வகையில் வண்டி ஓட்டுவதால் பிறரைக் ‘கவர்ந்து’ விடலாம் என்கிற சினிமாத் தனமான கற்பனை மாற வேண்டும். பேச்சில், செயலில், நடத்தையில் காட்டுகிற கண்ணியம்தான் நிரந்தரமாக எவரையும் கவரக் கூடிய ஆற்றல் படைத்தது.

    சாலையில் நாம் காணும் ஒழுங்கீனத்துக்கு, இளைஞர்களை மட்டுமே குற்றம் சொல்ல முடியாது. எட்டு, ஏழு, ஆறு வயதுள்ள சிறுவர்கள்,

    இரு சக்கர வாகனங்களை ஓட்டுவது இல்லையா...? நெருக்கடி நிறைந்த சாலைகளில், நண்பர்களை ஏற்றிக்கொண்டு, இரு சக்கர வாகனங்களை பள்ளி மாணவர்கள் ஓட்டிச் செல்வது இல்லையா...? இவை எல்லாம் பெற்றோருக்குத் தெரியாமல்தான் நடக்கின்றனவா...? வேதனையான உண்மை பெற்றோரே தம் கண்ணெதிரில் இதனை அனுமதிக்கிறார்கள். இது தவறு; குற்றம்; ஆபத்து. யார் சொல்லிப் புரிய வைப்பது...?

    தம் பிள்ளைகளுக்கு நல்லனவற்றை எடுத்துச் சொல்ல வேண்டியது, பெற்றோரின் தலையாய கடமை. அவர்களே தவறான வழியைக் காண்பித்து விட்டுப் பிறகு மற்றவரைக் குறை சொல்லலாமா...? கடைக்குச் செல்ல, நண்பர்களைப் பார்த்து வர, பொழுதுபோக்காக ஊர் சுற்றி வர, இயன்றவரை பிள்ளைகளை நடந்தே செல்ல அறிவுறுத்த வேண்டும். செலவும் குறையும்; ஆரோக்கியமும் கூட. சற்றே தொலைவில் செல்வதானால், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.

    சாலைப் போக்குவரத்தில் நாம் காணும் ஒழுங்கீனம், விதிமீறல்கள், நமது கலாசாரம், பண்பாட்டு அடையாளமாக மாறி விடுகிற அபாயமும் இருக்கிறது. நாளை, இதுதான் தமிழரின் வாழ்க்கை முறை என்று சொல்கிற நிலைக்கு நாம் வந்து விடாமல் தடுத்தாக வேண்டும்.

    “பெயத் தக்க நஞ்சுண்டு அமைகிற நயத் தக்க நாகரிகம்” தமிழ் மறை காட்டுகிற பழம் பெரும் பண்பாடு. இது மட்டுமல்ல; ‘இன்னா செய்தார்க்கும், அவர் நாண நன்னயம் செய்து விடுகிற’, சமுதாயமாக நாம் இருந்து இருக்கிறோம்.

    இன்று நாம் காணும் சாலை சாகசங்கள், இவற்றுக்கு எல்லாம் முற்றிலும் மாறானவை; நம் இனத்துக்கே களங்கம் விளைவிப்பவை.

    ‘இப்படித்தான் நடந்து கொள்வேன்’ என்று சொல்லவோ, ‘நீ யார் என்னைக் கேட்க..?’ என்று வினவவோ, யாருக்கும் அதிகாரம் இல்லை. யாருக்கும் ஊறு விளைவிக்காமல் வண்டி ஓட்டுதல் நமது கடமை; அதனைப் பிறரிடம் எதிர்பார்த்தல் நமது உரிமை.

    சாலை விதிமீறல்கள் தயவு தாட்சண்யம் இன்றி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். சட்டம் தனது கடமையைச் செய்யட்டும்; அதே போன்று, பெற்றோரும் பொறுப்பு உணர்ந்து செயல் படட்டும். இனியொரு சாலை விபத்தில் யாரும் உயிர் இழப்பதோ, காயம் உறுவதோ கூடாது.

    ‘பாதுகாப்பான போக்குவரத்து’ தமிழ்நாட்டின் தனி அடையாளமாகத் திகழட்டும்!

    பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, வருமானவரித்துறை அலுவலர்
    Next Story
    ×