search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வெளிநாட்டில் கணவன்.. வேதனையில் மனைவி..
    X

    வெளிநாட்டில் கணவன்.. வேதனையில் மனைவி..

    இப்போது திருமணத்திற்கு பின்பு வெளிநாடு சென்று வேலைபார்ப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்திருப்பதோடு, மனைவியை பிரிந்து வெளி மாநிலங்களுக்கு சென்று வேலைபார்ப்பவர்களும் அதிகமாக இருக்கிறார்கள்.
    திருமணத்திற்கு பிறகு கணவனும்-மனைவியும் வேலைக்காக ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலை இப்போது அதிகரித்துக்கொண்டிருக்கிறது. முன்பும் கணவர், மனைவியை பிரிந்து வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றார். அப்படி பிரிந்து செல்பவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருந்தது. இப்போது திருமணத்திற்கு பின்பு வெளிநாடு சென்று வேலைபார்ப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்திருப்பதோடு, மனைவியை பிரிந்து வெளி மாநிலங்களுக்கு சென்று வேலைபார்ப்பவர்களும் அதிகமாக இருக்கிறார்கள்.

    கணவர் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் இப்போது நினைத்த நேரத்தில் அவரது முகத்தை பார்த்து பேசிவிட முடியும். அவசரம் என்றால் அன்றே விமானத்தை பிடித்து சொந்த ஊருக்கு வந்து சேர்ந்து விடவும் முடியும் என்பது போன்ற சவுகரியங்கள் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் அப்படிப்பட்ட கணவன்-மனைவிக்குள் புதிதுபுதிதாக பிரச்சினைகளும் முளைக்கத்தான் செய்கின்றன.

    ‘தன் கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்’ என்று சொல்வது, திருமணமான தொடக்க காலத்தில் ஒருவித அந்தஸ்துக்குரிய விஷயமாக மனைவிக்கு தோன்றினாலும், விரைவிலே அது பல்வேறு விதங்களில் பிரச்சினைக்குரியதாக மாறிவிடுகிறது. இதனால் ஏற்படும் வாழ்வியல் சிக்கல்களை எல்லா பெண்களுமே புரிந்துகொள்ளவேண்டும். கணவர் வெளிநாட்டிற்கோ, வெளி மாநிலத்திற்கோ வேலைக்கு செல்லும் நிலை ஏற்படும்போது கணவன்- மனைவி இருவருமே அதைபற்றி தெள்ளத் தெளிவாக உண்மையுடன் பேசுங்கள். ஆசைகாட்டும் விதத்தில் அவர்களின் பேச்சு அமைந்துவிடக்கூடாது.

    எவ்வளவு காலம் கணவர் வெளிநாட்டில் இருக்கப்போகிறார்? அப்போது சொந்த ஊரில் மனைவியின் சூழ்நிலை எப்படி இருக்கும்? எத்தகைய பிரச்சினைகள் உருவாகும்? அவைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை பற்றி மனந்திறந்து பேசி தெளிவான முடிவை எடுக்கவேண்டும். அப்படி பிரியும்போது ஒருவரை ஒருவர் முழுமையாக நம்பவேண்டும். இருவருக்குமே ஒருவர் மீது இன்னொருவருக்கு ஆழமான நம்பிக்கை இருந்தால் மட்டுமே, வெளிநாட்டு கணவர்கள் வாழ்க்கை இனிக்கும்.

    இப்போது பெரும்பாலான ஆண்களுக்கு கல்யாண வாழ்க்கையில் இருக்கும் ஈர்ப்பு சீக்கிரமே குறைந்துபோய்விடுகிறது. ஒன்றிரண்டு குழந்தைகளும் பிறந்துவிட்டால் தங்கள் சவுகரியங்களும், சொகுசும் குறைந்துவிட்டதுபோல் அவர்கள் கருதுகிறார்கள். வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றால் சவுகரியங்களும், சொகுசும் கிடைக்கும். தொந்தரவின்றி மகிழ்ச்சியாக வாழலாம் என்றும் நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் அவ்வளவு விரைவாக சொந்த நாட்டிற்கு திரும்பமாட்டார்கள். வாய்ப்பு கிடைத்தாலும் குடும்பத்தை தன்னோடு வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று உடன் வைத்துக்கொள்ளவும் விரும்பமாட்டார்கள்.

    வெளிநாட்டில் கணவர் வசிக்கும் சூழலில், எவ்வளவு பரபரப்பாக கணவனும்-மனைவியும் இருந்தாலும் இரு வரும் தங்களுக்குள் பேசிக்கொள்ள தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கவேண்டும். குடும்பத்தின் அன்றாட நிகழ்வுகளை வீடியோ கிளிப்பிங்ஸ் மூலம் பகிர்ந்துகொள்வது, குழந்தைகளை பேச வைத்து வாய்ஸ் மெசேஜ் அனுப்புவது போன்று இயல்பான தகவல் தொடர்புகளில் தொய்வில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் கணவனும், மனைவியும் கண்டதை எல்லாம் பேசுவதையும், எரிச்சலூட்டும் விஷயங்களை சொல்வதையும் தவிர்க்கவேண்டும். தினமும் பேசினாலும் முகத்தை பார்த்து பேசும் வாய்ப்பை வாரத்தில் ஒருநாள் பயன்படுத்திக்கொண்டால் போதுமானது. எப்போதும் பார்த்துக்கொண்டிருந்தால் போரடித்துவிடும்.

    வேலைக்காக பிரிந்திருக்கும் கணவனும்-மனைவியும் பேசும்போது ஒவ்வொரு வார்த்தைகளையும் மிக கவனமாக பார்த்து பயன்படுத்தவேண்டும். கருத்துவேறுபாட்டிற்குரிய பிரச்சினை என்றாலும், குரலை உயர்த்தாமல் மென்மையாக வெளிப்படுத்துங்கள். இருவரில் யார் பேசினாலும், ஒருவர் பேசி முடித்த பின்பு அடுத்தவர் பேசுவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

    கணவர் வெளிநாட்டில் இருக்கும்போது, மனைவி இதர ஆணுடன் தனியாக போட்டோ எடுப்பதையும், அதை பேஸ்புக் போன்றவைகளில் பதிவிடுவதையும் தவிர்க்க வேண்டும். அதற்கு சரியான காரணங்கள் இருந்தாலும் கணவருக்கு சந்தேகம் எழுந்துவிடலாம். ‘என்னை முதன் முதலில் பெண்கேட்டு வந்தவர் போனவாரம் என் அலுவலகத்திற்கு வந்து என்னை சந்தித்துப் பேசினார்.’ ‘கல்லூரியில் என்னோடு படித்த மாணவன் விருந்துக்கு அழைத்தான்’ என்பது போன்றவைகளை கணவரின் காதுகளுக்கு கொண்டு போக வேண்டியதில்லை. இப்படிப்பட்ட இதர நபர்களை சந்திப்பதையும் முடிந்த அளவு தவிர்த்திடுங்கள்.

    கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கும்போது பெரும்பாலான பெண்கள் மாமியார் வீட்டில்தான் வசிக்கிறார்கள். அவர்கள் மாமியார் குடும்பத்தோடு நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். மாமியார் மற்றும் நாத்தனார்களை பற்றி தவறான வார்த்தைகளை கணவரிடம் பிரயோகிக்க கூடாது. பின்பு பதிலுக்கு அவர்களும் உங்களை பற்றி கடுமையான வார்த்தைகளை பேசுவார்கள். இதன் மூலம் உள்ளூரில் இருக்கும் மனைவி மட்டுமல்ல, வெளிநாட்டில் வசிக்கும் கணவரும் நிம்மதியாக வாழ முடியாது!

    வெளிநாட்டில் கணவர் மட்டும் வெகுகாலம் தங்கி இருந்து வேலை பார்ப்பது அவ்வளவு மகிழ்ச்சிக்குரிய விஷயமல்ல. கணவன், மனைவி, குடும்பத்தார் அனைவரும் ஒருங்கிணைந்து பக்குவமாக நடந்துகொண்டால் மட்டுமே அந்த வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக்கொள்ள முடியும்!

    - விஜயலட்சுமி பந்தையன்.
    Next Story
    ×