search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தடைகளை தகர்க்கும் தன்னம்பிக்கை
    X

    தடைகளை தகர்க்கும் தன்னம்பிக்கை

    தாழ்வு மனப்பான்மை, விடாமுயற்சியின் மீது நம்பிக்கையின்மை, மற்றவர்களுடைய வெற்றியைக் கண்டு வெதும்புதல், சோம்பேறித்தனம் போன்றவை தன்னம்பிக்கை குறைவாக இருப்பதின் வெளிப்பாடு ஆகும்.
    ஒரு மனிதன் உயர்வதற்கு விடாமுயற்சி, கடின உழைப்பு, திட்டமிடல் போன்ற பல குணநலன்கள் கூறப்படலாம். ஆனால் அவை எல்லாமே ‘தன்னம்பிக்கை’ என்ற அடித்தளத்திலிருந்து தான் உருவாகுகின்றன. நம்மை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும் தன்னம்பிக்கை நிரம்பப்பெற்றவர்கள் சோர்வு அடைவதில்லை. துவண்டு போவதில்லை. தாழ்வு மனப்பான்மை, விடாமுயற்சியின் மீது நம்பிக்கையின்மை, மற்றவர்களுடைய வெற்றியைக் கண்டு வெதும்புதல், சோம்பேறித்தனம் போன்றவை தன்னம்பிக்கை குறைவாக இருப்பதின் வெளிப்பாடு ஆகும்.

    நாம் எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற ஆசையுடன் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் தேவை. அந்த நம்பிக்கை, என்னால் நிச்சயம் இந்த காரியத்தை முடிக்க இயலும் என்ற மனஉறுதியுடன் அமைய வேண்டும். அப்படி இருந்தால் வெற்றி உங்களை தேடிவரும். அரிய சாதனைகள் செய்யப்படுவது வலிமையினால் அல்ல. விடாமுயற்சியினால் தான். தன்னம்பிக்கையும் உற்சாகமும் மட்டும் இருந்தால் போதும். வெற்றி இலக்கை அடைந்துவிடலாம். சிந்தனையைவிடச் செயல்தான் எல்லோரையும், எல்லாவற்றையும் மாற்றி அமைக்கும்.

    வெற்றி பெறுவோம் என்ற திடமான மன உறுதியில் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தொடர்ந்து விடாது செயலாற்றிக் கொண்டேயிருந்தால் வெற்றிக்கனியை பறிக்கமுடியும். தன்னம்பிக்கையே உலகின் மிகச்சிறந்த ஆயுதம். தன்னம்பிக்கையே நோய்களையும், உடல் வலியையும், மனவேதனைகளையும் நீக்குகிறது. பிரச்சினைகள் வரும் போது, இது என் விதி என்று மனம் தளரக் கூடாது. மாறாக, என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை இருக்க வேண்டும். அப்படி நம்பினால், நீங்கள் புதியவனாக மாற முடியும். அந்த தன்னம்பிக்கை தோல்வியுறுபவர்களை வெற்றியாளராக்கும்

    தன்னம்பிக்கை கொண்டுள்ளோர் தங்களது உறவினர்கள் அல்லது நண்பர்களாக இருந்தாலும் அனைவரிடமும் நம்பிக்கையைத் தூண்டிவிடுகின்றனர். மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுவதை வெற்றியடைவதற்கான ஒரு முக்கிய வழிமுறையாகத் தன்னம்பிக்கை நிறைந்தவர்கள் வகுத்துக் கொண்டுள்ளனர். தன்னம்பிக்கையைக் கற்றுக்கொள்ள முடியும், வளர்த்துக்கொள்ள முடியும் என்பது நல்ல விஷயம். உங்களது சொந்த தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதிலோ உங்களைச் சுற்றிலும் உள்ளவர்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதிலோ நீங்கள் ஈடுபடும்போது, அந்த முனைப்பு நல்ல பலன் தரும்.

    சுய ஆற்றல், சுய உழைப்பு ஆகியவைதான் தன்னம்பிக்கையை உருவாக்கிக்கொள்வதற்கான இரண்டு முக்கிய அம்சங்கள். இதுதொடர்பான இலக்குகளை அடைவதில் நாம் வெற்றி பெறும்போது, சுய ஆற்றலை நாம் உணர்கிறோம். ஒரு குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் பெறுவதற்காக நாம் கடுமையாகப் பாடுபட்டால், நம்மால் வெற்றி பெற முடியும் என்ற அறிதலில் நம்பிக்கை பிறக்கிறது. தோல்விகள் குறுக்கிடும்போது துவண்டுவிடாமல், சிக்கலான சவால்களை எதிர்கொண்டு வெற்றி நடை போடுவதில் இப்படிப்பட்ட நம்பிக்கைதான் நம்மை வழிநடத்துகிறது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பெயின் நாட்டில் பயங்கரமான சூறாவளி ஒன்று வீசியது. விசிகோத்தை ஆண்ட மன்னன் ஸ்விந்திலா என்பவனின் மகுடத்தை அந்தச் சூறாவளி வெளிக் கொணர்ந்தது. 1200 வருடங்கள் பூமிக்கடியில் புதைந்திருந்த மகுடம் அது. இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்துவது எதை? உங்கள் தன்னம்பிக்கை மகுடம் கூட உங்களுக்குள்ளேயே அடியில் புதைந்திருக்கிறது. அதை வெளிக்கொணருங்கள் என்பதைத்தான். இந்த தன்னம்பிக்கை வந்தவுடன் உங்கள் தோற்றம் மிடுக்குறும். பார்வை ஒளி பெறும். பேச்சு வலிமை பெறும்.

    கார்டினல் கிப்பன்ஸ் என்ற முதுபெரும் பேரறிஞர் தாம் இறந்து போவதற்கு முன்பாகக் கூறிய வார்த்தைகள் இவை:. நான் 86 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்திருக்கிறேன். நூற்றுக்கணக்கானவர்கள் வெற்றியின் முனையைத் தொட்டதைக் கண்டிருக்கிறேன். வெற்றியடைவதற்குத் தேவையான குணங்களில் தலையாயது தன்னம்பிக்கைதான் என்றார்.

    தன்னம்பிக்கை உன்னுள் இருக்கும்வரை, எல்லா உள்ளங்களும் உன் விழியை நாடும். ஆண்டவன் உன்னை எங்கு வைக்கிறாரோ அங்கிரு, அந்த இடத்தில் அமைதியாக இருந்து பணியாற்று. எனது குறிக்கோள் என்ன என்பதை நானே நிர்ணயித்துள்ளேன். ஆகவே அதை அடைய தீவிரமாகவும், முழு முயற்சியுடனும் தொடர்ந்து ஈடுபடுவேன். வெற்றி பெறுவேன் என தினமும் உறுதி கொள்.

    நியாயம், தர்மம் இவற்றின் அடிப்படையில் அல்லாது மற்ற வழியில் வரும் வெற்றி நிலைக்காது என்பதால் தன்னம்பிக்கையுடன் நேர்மையான வழியிலேயே நிச்சயம் வெற்றியைப் பெறுவேன், வெற்றி நிச்சயம் என்ற தன்னம்பிக்கை சிந்தனையை காலை எழுந்தவுடன் மனதிற்குள் கூறிக் கொள்ளுங்கள்.

    மனிதனுக்கு இரு கைகளை விட முக்கியமானது தன்னம்பிக்கை. யானைக்கு பலம் தும்பிக்கை. மனிதனின் பலம் நம்பிக்கையிலே என்ற வார்த்தையை நாம் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. மறந்தால் பூமியில் நிலைத்து வாழ முடியாது. ஆகவே அந்த தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். வெற்றி சிறிதளவு பெற்றாலும் உங்கள் தன்னம்பிக்கை வலிமை பெறும். அதாவது நீங்களே உங்களை சோதனைக்குள்ளாக்க ஆயத்தமாகுங்கள்.

    -அன்பரசி சேதுபதி, 8-ம் வகுப்பு, அமல அன்னை மேல்நிலைப்பள்ளி, காரங்காடு.
    Next Story
    ×