search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஒருதலைக்காதலும், ரத்தக்களறியும்...
    X

    ஒருதலைக்காதலும், ரத்தக்களறியும்...

    இன்று ஒருதலைக்காதலில் சிக்கும் இளைஞர்கள் தங்கள் பொன்னான வாழ்க்கையை மறந்து கொலை செய்யக்கூடிய விபரீத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
    காதல் புனிதமானது. ஒரு ஆணும், பெண்ணும் மனதார விரும்பி மணம் முடித்துக்கொள்ளும் வாழ்க்கை இனிமை நிறைந்தது. சங்ககாலம் முதல் தற்கால கவிஞர்கள் வரை காதலின் மகத்துவத்தை பாடாத புலவர்களே இல்லை. ஆனால், இன்று ஒருதலைக்காதலில் சிக்கும் இளைஞர்கள் தங்கள் பொன்னான வாழ்க்கையை மறந்து கொலை செய்யக்கூடிய விபரீத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். தான் நேசிக்கும் பெண் மீது கொண்ட ஈர்ப்பு தான் அவர்களை இந்த நிலைக்கு கொண்டு சென்று இருக்கிறது இது போன்ற ஒருதலைக்காதல் மயக்கத்தில் படுகொலை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஒருதலைக்காதல் கொலைகள் அதிகரிப்பதை தடுக்க பெண்களும் விழிப்புணர்வாக இருக்க வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக இவர்கள் முகநூல் (பேஸ்புக்), வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பெரும்பாலான நேரங்களை செலவிடுகின்றனர்.

    இதன் மூலம் தாங்கள் பதிவிடும் கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பது, சாட் செய்வது உள்ளிட்ட சம்பவங்களால் ஒருவருக்கொருவர் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்கின்றனர். இந்த பழக்கத்தை சிலர் ஒருதலைக்காதலாக கருதி, தான் விரும்பிய பெண்ணிடம் காதலை தெரிவிப்பது, அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே... தனக்கு கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்க கூடாது என்ற மனோபாவம் தான் இதுபோன்ற படுகொலைகள் அதிகரிக்கிறது என்று மனோதத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்கின்றனர். பள்ளி, கல்லூரிக்கு செல்லும் தங்கள் மகள்களையோ, பணி இடங்களுக்கு செல்லும் தங்கள் மகள்களையோ கண்காணிக்க அவர்களுக்கு பெரும்பாலும் வாய்ப்புகள் இருப்பது இல்லை. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவிகளும், வேலைக்கு செல்லும் இளம்பெண்களும் தங்களை வாலிபர்கள் யாராவது பின்தொடர்ந்தாலோ, தங்களை காதலிக்குமாறு வற்புறுத்தினாலோ அதுபற்றி தங்கள் பெற்றோரிடம் தெரிவிப்பதில்லை. ஏன் வீண் சிரமம்? குடும்பத்தில் தெரிவித்து தங்களை படிக்க அல்லது வேலைக்கு அனுப்ப மறுத்து விடுவார்களோ என்ற எதிர்கால பயம் பெண்களிடம் இருப்பதால் தான் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தேறுகிறது.

    ஆரம்பத்திலேயே தங்களை பின்தொடரும் நபர்கள் மீது பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தங்கள் எதிர்ப்பை அவர்களுக்கு சுட்டிக்காட்டுவதோடு அதுபற்றி தங்கள் பெற்றோரின் கவனத்துக்கும் கொண்டு செல்வது அவசியம். பெற்றோர்களும் மகள், பள்ளி, கல்லூரிக்கோ அல்லது பணி இடத்துக்கோ போகும்போது வாலிபர்கள் பின் தொடர்கிறார்கள் என்றால் அதுகுறித்து அசட்டையாக இருந்து விட வேண்டாம்.



    சம்பந்தப்பட்ட நபரை நேரில் சந்தித்து தங்கள் குடும்ப வாழ்க்கை முறையை எடுத்துரைத்து பின்தொடர்வதை தடுக்கலாம். இல்லாவிட்டால் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளலாம். இது கூட சில நேரங்களில் ஆத்திரத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. ஆனால் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிப்பதன் மூலம் சில நேரங்களில் பெண்களை பின் தொடர்ந்து செல்லும் வாலிபர்கள் தங்கள் முயற்சியை கைவிடவும் வாய்ப்பு உள்ளது.

    பெண்களும் தங்களை ஒருதலையாக காதலிக்கும் வாலிபர்களிடம் இருந்து தப்பிக்க எப்போதும் தனிமையான இடத்திற்கு செல்ல வேண்டாம். பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடத்தின் வழியாக செல்லுங்கள். முடிந்தவரை கிட்ட நெருங்கினாலோ சத்தம் போட்டு ஊரை கூட்டுங்கள். நிச்சயம் அது பலன் கொடுக்கும். பெண்களே உங்களை நீங்கள் தான் காத்து கொள்ள வேண்டும்.

    முடிந்தவரை சமூக வலைத்தளங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் அதிக நேரம் அரட்டை அடிக்காதீர்கள். எச்சரிக்கையாக இருங்கள். அது போல் பள்ளி, கல்லூரி மற்றும் வேலை இடங்களுக்கு செல்லும் போது கவனமாக இருங்கள். பின்னால் பிரச்சினை வரும் என்று நினைக்காதீர்கள். உங்கள் பெற்றோரிடமும், நண்பர்களிடமும், வேலை பார்க்கும் இடங்களில் அதிகாரிகளிடமும் தெரிவியுங்கள். ஒருவர் பின்தொடர்கிறார் என்றால் அதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்துவிடுங்கள்.

    அது போல் காதல் மயக்கத்தில் இருக்கும் இளைஞர்களும் தங்கள் பொன்னான எதிர்காலத்தை உணரவேண்டும்.. ஒருதலைக் காதலில் இதுபோன்ற ரத்த களரி இனியும் வேண்டாம். இன்று... தங்கள் குடும்பத்துக்கு உதவியாக இருந்த தாங்கள் 22 ஆண்டுகள் ஆசையாக வளர்த்த அருமை மகள் ரம்யாவை இழந்து தவிக்கும் அவர்களது பெற்றோருக்கு யார் ஆறுதல் கூற முடியும். காதல் மோகம் ராஜசேகரின் வாழ்க்கையும் சூறையாடிவிட்டது. எனவே இன்றைய இளைஞர்கள் ஒருதலைக்காதலில் சிக்கி சாதலில் முடிய வேண்டாம். வாழ்க்கை வாழ்வதற்கே.. வாழ்ந்து காட்டுங்கள்.

    - குருவன்கோட்டை ஸ்ரீமன்.
    Next Story
    ×