search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களே ஷாப்பிங் கில்லாடிகள்
    X

    பெண்களே ஷாப்பிங் கில்லாடிகள்

    `பெண்கள்தான் ஷாப்பிங் செய்வதில் கில்லாடிகள். ஷாப்பிங் செய்வதற்கு பொறுமை தேவை. அது பெண்களிடம் நிறைய இருப்பதால், அவர்கள் ஷாப்பிங்கில் சிறந்து விளங்குகிறார்கள்..’ என்கிறது, சமீபத்திய ஆய்வுகள்.
    ஒரு பொருளை வாங்க பல கடைகளுக்கு ஏறி இறங்குவது பெண்கள்தான். அப்படி ஏறி இறங்க அவர்கள் அலுக்கவேமாட்டார்கள். ஒரு முறைக்கு பல முறை விலை விசாரித்து சரியான பொருளை, சரியான விலைக்கு வாங்குவது பெரும்பாலும் பெண்கள்தானாம். தேவைப்பட்டால், ஏற்கனவே அந்த பொருளை வாங்கியவர்களிடம் அதுபற்றி விசாரித்து, தரத்தை எல்லாம் பரிசோதித்து வாங்குவதில் பெண்கள் தான் கில்லாடிகள்.

    ஆண்களிடம், தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணமும், கொஞ்சம் கர்வமும் இருந்து கொண்டே இருப்பதால் தாங்கள் வாங்கப்போகும் பொருள் பற்றி அடுத்தவர்களிடம் விசாரிக்க விரும்பமாட்டார்கள். `என்ன ஆயிடும்! வாங்கிப் பார்த்திடலாமே’ என்ற எண்ணத்தில் அதிகம் ஆராயாமல் அந்த பொருளை வாங்கிவிடுவார்கள். பெண்கள் முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம் கூட தயங்காமல், புதிய பொருளைப் பற்றி விசாரி த்து உண்மை நிலையை அறிய முன்வருவார்கள். அதற்காக மெனக்கெடவும் செய்வார்கள். அதுதான் பெண்களிடம் இருக்கும் பிளஸ் பாயிண்ட்.

    பெரும்பாலான ஆண்கள் ஷாப்பிங் போவதை நேரத்தை வீணடிக்கும் செயல் என்று நினைக்கிறார்கள். அதனால் வாங்க வேண்டியது எவ்வளவு முக்கியமான பொருளாக இருந்தாலும் சீக்கிரமாக ஷாப்பிங்கை முடித்துக் கொள்ள வேண்டும் என்றே நினைப்பார்கள் அல்லது தனக்கு தேவையான பொருளை மற்றவர்களிடம் வாங்கிவரும்படி கூறிவிடுவார்கள். இதனால் ஆண்களிடம் ஷாப்பிங் திறமை வளர்வதில்லை.

    பேரம் பேசுவதை ஒரு தன்மானக் குறைவாக ஆண்கள் நினைக்கிறார்கள். ஒரு பொருளை இரு மடங்கு விலை கொடுத்து வாங்கியாவது தன்மானத்தை அந்த இடத்தில் காப்பாற்றிக் கொள்ள விரும்புவார்கள். தன்மானம் என்பது தான் ஏமாறுவது அல்ல என்று அவர்கள் புரிந்துகொள்வதில்லை. பேரம் பேசுவது தன்மானத்திற்கு இழுக்கு அல்ல என்பதை பெண்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள்.

    வீட்டிற்கு என்னென்ன பொருள்கள் தேவை, எந்த அளவுக்கு அவை தேவை என்பதை பெண்களே அதிகம் அறிந்திருக்கிறார்கள். ஒரு பொருளின் உபயோகம் என்ன, அந்த பொருளுக்கு எவ்வளவு செலவழிக்கலாம் என்ற முன்யோசனையும் பெண்களுக்கு உண்டு. அவர்கள் எதிர்பார்க்கும் விலைக்கு மேல் அந்த பொருள் இருந்தால் அதை வாங்காமலேயே வீட்டிற்கு கிளம்பிவிடுவார்கள். இப்படி பின்வாங்கிச் செல்லும் `டெக்னிக்’ ஆண்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது.

    ஆண்கள் லிஸ்ட் எழுதிவிட்டால், லிஸ்டில் இருக்கும் அத்தனை பொருட்களையும் வாங்கி கையில் இருக்கும் பணம் அனைத்தையும் `ஐஸ்’ போல் கரைத்துவிட்டுத்தான் செல்வார்கள் என்பது பொதுவான மதிப்பீடு.

    பெண்களோ, மூச்சுக்கு மூச்சு `இவ்வளவு செலவழிக்க வேண்டியிருக்கிறதே!’என்று மனதுக்குள்ளாவது புலம்பிக்கொண்டேதான் வாங்குவார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப `லிஸ்டை’ மாற்றிக் கொள்ளும் பக்குவமும் பெண்களிடம் உண்டு. அதனால் கூடுமானவரை தங்கள் பட்ஜெட்டிற்குள் ஷாப்பிங்கை பெண்கள் பூர்த்தி செய்துவிடுவார்கள்.

    எந்தெந்த இடத்தில் எந்தெந்த பொருள் அதிகம் கிடைக்கும் என்பதையும் பெண்கள் தெரிந்து வைத்திருப்பார்கள். தேவை என்றதும் சற்றும் யோசிக்காமல் அந்த இடத்துக்கு போய் பொருட்களை வாங்கி வந்துவிடுவார்கள். இதனால் தேவையற்ற அலைச்சல் மிச்சம். பெண்களைப் பொறுத்தவரை ஷாப்பிங் என்பது ஒரு மகிழ்ச்சியான வேலை. அதனை கூடுமானவரை வசதியாக மாற்றிக் கொள்வார்கள். ஆண்களுக்கு ஷாப்பிங் என்பது பெரிய சுமை, கால விரயம். அதனால் தன்னை வருத்திக்கொண்டு அதை செய்வார்கள்.

    எந்தெந்த கடையில் எப்போது எந்த பொருளுக்கு தள்ளுபடி தருவார்கள் என்பது பெண்களுக்குத் தெரியும். ஷாப்பிங் போவது ஒருநாள் என்றாலும் அதற்கான முன்னேற்பாடுகளை பல நாட்களாக செய்வார்கள். விலையை பற்றிய மதிப்பீடும் அவர்களிடம் உண்டு. அதனால் பெண்கள் ஷாப்பிங் செய்வது சுலபமாகிவிடுகிறது.

    தான் வாங்கிய பொருளைப் பற்றி மற்றவர்களிடம் கூறுவது பெண்களின் வாடிக்கை. எல்லா பெண்களும் இதுபற்றி வெளிப்படையாக பேச விரும்புவதால், பெண்கள் அதிகமாக ஷாப்பிங் பற்றிதான் பேசுகிறார்கள். அதனால் பெண்களில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு ஷாப்பிங் அனுபவம் நிறைய கிடைக்கிறது. இது அவர்களுடைய ஷாப்பிங் ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைகிறது. அதனால் பெண்கள் ஷாப்பிங் செய்யும்போது மகிழ்கிறார்கள்.

    பெரும்பாலான பெண்கள் ஆண்களை அழைத்துக் கொண்டு ஷாப்பிங் செல்வதை விரும்புவதில்லை. காரணம் சீக்கிரமாக ஷாப்பிங்கை முடித்துக் கொள்வதிலேயே ஆண்கள் கவனமாக இருப்பார்கள். அதனால் பெண்கள் தங்களுக்கு இணக்கமான பெண்களைத் தான் ஷாப்பிங் செல்ல உடன் அழைத்துச் செல்கிறார்கள். இது பெண்களிடையே ஆழமான நட்பை உருவாக்கவும் செய்கிறது.

    இதில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். விலை மதிப்புள்ள தங்கம், வெள்ளி ஆபரணங்களை வாங்கும்போது அதில் அதிக கவனம் செலுத்துவது ஆண்கள்தான் என்று ஆய்வு குறிப்பிடுகிறது. விலை, தரத்தை பரிசோதிப்பதில் ஆண்கள்தான் அதிக கவனம் எடுத்துக்கொள்வார்களாம்.

    பெண்கள் ஷாப்பிங் செய்வதில் கில்லாடிகளாக இருக்கலாம். ஆனால் ஆண்களின் அறிவுரைகளையும், மனதில் வைத்துக் கொண்டு ஷாப்பிங் செய்தால் அது மிகவும் லாபகரமான ஷாப்பிங்காக இருக்குமாம்!
    Next Story
    ×