search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண் சிசுக்கொலையை தடுப்போம்
    X

    பெண் சிசுக்கொலையை தடுப்போம்

    பெண் சிசுக்கொலை முற்றிலும் ஒழிய வேண்டும். ஆண் குழந்தை மட்டும் தான் குடும்ப வாரிசு, பெண் குழந்தை குடும்பத்தின் பாரம் என்று சொல்லும் எண்ணம் மாற வேண்டும்.
    நான் பெண்ணாக பிறந்ததற்கு என் அம்மா, அப்பாவிற்கும் கடவுளுக்கும் முதலில் நன்றி சொல்கிறேன். அந்தக்காலத்தில் இருந்து இன்று வரை பெண் சிசுக்கொலை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அன்று பெண் குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் வாயில் கள்ளிப்பால் ஊற்றி கொன்றார்கள். இன்று பெண் என்று தெரிந்தவுடன் கருவிலேயே அழிக்கிறார்கள்.

    இதை நினைக்கும் போது என் மனது மிகவும் வேதனைப்படுகிறது. அரசு எத்தனை திட்டங்கள் கடுமையாக போட்ட போதும் இந்த பெண் சிசுக்கொலை குறைந்திருக்கிறதே தவிர முற்றிலும் ஒழியவில்லை. எனது மருத்துவமனையில் 37 வருட அனுபவத்தில் எத்தனையோ பேர் என்னிடத்தில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? அல்லது பெண்ணா? என்று கேட்டிருக்கிறார்கள், எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் இது வரை நான் சொன்னதில்லை. அப்படி கேட்கும் போதெல்லாம் எனக்கு கடுமையான கோபம் தான் வரும்.

    அவர்களுக்கு அறிவுரை சொல்லி அவர்களை மாற்றி இருக்கிறேன். இன்றும் என் மருத்துவமனையில் எவ்வளவோ கஷ்டப்பட்டு, பல வருடங்கள் குழந்தை இல்லாமல் வரும் தம்பதியருக்கு, ஒரு குழந்தை பிறக்கும் போது அது பெண்ணாக போய் விட்டால் அவள் மாமியார் அல்லது அவரது குடும்பத்தாரிடம் அந்த பெண் குழந்தையை நான் கொடுக்கும்போது அவர்கள் முகத்தில் எந்த சந்தோஷமும் இல்லாமல் வேண்டா வெறுப்பாக பார்ப்பார்கள். அப்போது நான் கேட்பேன் “ஏம்மா நீயும் ஒரு பெண் தானே”? “உன் மகளும் ஒரு பெண் தானே”, அவள் வயிற்றில் பிறந்த அந்த பெண் குழந்தை மட்டும் என்ன பாவம் செய்தது. ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அறிவுரைகூறுவேன். இந்த மாதிரி நடந்து கொள்பவர்கள் ஒரு சிலர் தான். இது இனி வரும் காலங்களில் மாறவேண்டும்.

    பெண் என்பவள் வீட்டு வேலைகள் செய்யவும், கணவனை கவனிக்கவும், குழந்தைகளை பெற்றெடுத்து வளர்ப்பதற்கு மட்டும் பிறந்தவள் அல்ல. அவள் சாதிக்க பிறந்தவள். இன்று எல்லா துறைகளிலும் பெண்கள் கால் ஊன்றி சாதனை படைத்து வருகிறார்கள். இனி வரும் காலங்களில் நிறைய சாதனைகள் படைப்பது பெண்களாகத்தான் இருக்கும். இதை எல்லாம் நினைக்கும் போது என் மனதில் தோன்றுவதெல்லாம் எத்தனை சாதிக்க கூடிய பெண்கள் கள்ளிப்பாலிலும் கருவிலும் அழிக்கப்பட்டாளோ என்று மனது வலிக்கிறது, கண்களில் கண்ணீர் வடிகிறது.

    இந்த பெண் சிசுக்கொலை முற்றிலும் ஒழிய வேண்டும். ஆண் குழந்தை மட்டும் தான் குடும்ப வாரிசு, பெண் குழந்தை குடும்பத்தின் பாரம் என்று சொல்லும் எண்ணம் மாற வேண்டும். அந்த ஆண் குழந்தையை சுமப்பவளும் பெண் தானே, அப்படி இருந்து ஏன் இப்படி பெண்கள் மீது வெறித்தனமான கோபம். தயவு செய்து சொல்கிறேன் பெண்களை “பாரதி கண்ட புதுமை பெண்ணாய்”, வாழ விடுங்கள். நமது நாட்டை தலை சிறந்ததாக விளங்க செய்யட்டும். பூமி தாயும் ஒரு பெண் தான். நதிகளுக்கு பெண்கள் பெயர் மட்டும் வைத்தால் போதாது.

    பெண்களை போற்றவும் செய்ய வேண்டும். என் அப்பா எப்போதும் சொல்வார், நான்கு பெண்களை பெற்றெடுத்ததால் இன்றும் நான் பெருமை கொள்கிறேன் என்று. அவர் என்னை போற்றியதால் தான் அன்று நான் “தென்னிந்திய முதல் சோதனை குழாய் குழந்தையை” உருவாக்கி சாதனை படைக்க முடிந்தது. நானும் ஒரு பெண் தானே? அதே போல் எனது சகோதரிகளும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குகிறார்கள். அதனால் பெண்மையை போற்றுவோம், பெண் சிசுக்கொலையை தடுப்போம். சாதனை பெண்களை உருவாக்குவோம். பெண்கள் இந்நாட்டின் கண்கள்.

    டாக்டர் கமலா செல்வராஜ்
    Next Story
    ×