search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    முதுமை: சுகமா? சுமையா?
    X

    முதுமை: சுகமா? சுமையா?

    இன்றைய இளைய தலைமுறையினருக்கு பெற்றோர் மீதான பாசம் என்பது தூரமாகி கொண்டிருக்கிறது. வயதான பெற்றோரை, பாரமாக கருதும் மனப்போக்கு ஏற்பட்டுள்ளது.
    சுவாசிப்பதை போல நேசிப்பதே நிஜமான அன்பு. இத்தகைய அன்புக்கு சொந்தக்காரர்களாக இருப்போர் நம் பெற்றோர். இவர்களை தெய்வங்களாக தொழுவோரும் உள்ளனர். அதேசமயத்தில், முதுமையை சுமையாக கருதி பெற்றோரை தூக்கி எறிவோரும் இருக்கிறார்கள்.

    பண்டைக்காலத்தில் முதியோரின் சொல் மந்திரமாக மதிக்கப்பட்டது. ஒரு குடும்பத்தில் எந்தவொரு முடிவையும் அவர்களே எடுத்தனர். அதன் விளைவு, சிறந்த பயனை தந்தது. ஆனால் இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறி விட்டது. முதியோரின் வார்த்தைகள் அலட்சியப்படுத்தப்படுவதோடு, தங்களது மகன், மகள், மருமகன், மருமகள், பேரன், பேத்திகள் என அனைவராலும் அவர்கள் அவமானப்படுத்தப்படுகின்றனர்.

    கணவன், மனைவி, குழந்தைகள் என குறுகிய வட்டத்தில் வாழ்க்கை பயணம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அனுபவம் வாய்ந்த முதியோரின் அறிவுரை பேரன், பேத்திகளுக்கு கிடைப்பதில்லை. தாத்தா, பாட்டியின் அரவணைப்பு இல்லாததால், வளர்ந்து வாலிபர்கள் ஆனவுடன் கால்போன போக்கில் சென்று தங்களது வாழ்க்கை பயணத்தை வீணாக முடித்து கொள்கின்றனர். அன்பு இன்றி இதயம் இறுகி விடுகிறது.

    உலகில் உதித்த நாளில் இருந்து, நம்மை சீராட்டி பாராட்டி வளர்க்கும் பெற்றோரின் உழைப்பை அட்டைப்பூச்சியாய் உறிஞ்சு வளர்கிறார்கள். ஆனால் அவர்கள் தள்ளாடும் போது, தவிக்க விட்டு விடுகின்றனர்.



    பெற்றோரின் சொத்துக்கள், தங்களுக்கு தான் சொந்தம் என்று உரிமை கொண்டாடி எடுத்து கொள்கின்றனர். அதன்பிறகு தங்களது பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவோரும் உண்டு. வயதான காலத்தில் ஒவ்வொரு பெற்றோரும் தனது மகன் அல்லது மகள் அன்பாக, ஆறுதலாக ஒரு வார்த்தை பாசமாக பேச மாட்டார்களா? என்ற ஏக்கத்தில் இருப்பார்கள். ஆனால் அது கிடைக்காத பட்சத்தில், மனம் நொந்து வெந்து விடுகிறது. இன்றைய இளைய தலைமுறையினருக்கு பெற்றோர் மீதான பாசம் என்பது தூரமாகி கொண்டிருக்கிறது. வயதான பெற்றோரை, பாரமாக கருதும் மனப்போக்கு ஏற்பட்டுள்ளது.

    எத்தனையோ முதியோர்கள் சொத்துகளை எழுதி வாங்கி கொண்டு மகனும், மகளும் செய்த கொடுமைகளை மனதுக்குள்ளே பூட்டி வைத்து புழுங்கி கொண்டிருக்கின்றனர். ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல், பிறரிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தனக்கு தராவிட்டாலும் பரவாயில்லை தனது மகனோ, மகளோ சந்தோஷமாக வாழட்டும் என்ற எண்ணத்தில் நடமாடும் பிணமாக வாழ்ந்து வருகிறார்கள்.

    இவர்களை போன்றோரை கணக்கெடுத்து, அவர்களின் நிலையை மாற்றுவது என்பது கடினம் தான். அதேநேரத்தில் சொத்துக்களை எழுதி வாங்கி கொண்டு சொந்தம் இல்லை என்று உதறி தள்ளும் கல்நெஞ்சம் படைத்த மகனுக்கும், மகளுக்கும் இதுபோன்ற சவுக்கடி கொடுப்பது அவசியம் தான். அன்பு, பாசம், நேசம் ஆகியவற்றுக்கு பயிற்சி அளிக்க முடியாது. இது, மனநிலை சார்ந்த விஷம் ஆகும்.

    பெற்றோரின் முதுமை அவர்களின் மகன், மகள்களுக்கு சுமையாக தெரிகிறது. உண்மையாகவே அது சுமை அல்ல. அவர்களை சுமப்பது ஒரு சுகமான அனுபவமே. பல்வேறு பிரச்சினைகளுக்கு முதியோரால் முற்றுப்புள்ளி வைக்க முடியும். எனவே மனதை இளக வைத்து, அதில் முதுமையை மகுடம் சூட்ட வேண்டும். அப்போது தான் கண்ணன்-பூங்காவனம் போன்றோர் உருவாகாமல் தடுக்க முடியும்.

    -தாமிரன்
    Next Story
    ×