search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களே அன்றாடச் செலவுகளை குறைக்க வேண்டுமா?
    X

    பெண்களே அன்றாடச் செலவுகளை குறைக்க வேண்டுமா?

    பெண்கள் வீட்டுத் தேவைக்கான செலவுகளில் ‘கடித உறை உத்தி’யைப் பயன்படுத்துவதன் மூலம் ஏராளமான பணத்தைச் சேமிக்க முடியும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    அன்றாட வாழ்க்கையை நகர்த்திச் செல்வதற்கு பணம் அவசியமாக உள்ளது. ஆனால், தேவையான அளவைவிட அதிகம் செலவழிக்கிறோம் என்ற எண்ணம் நம்மில் பலரிடம் உள்ளது. தினசரி செலவுகளுக்கு கடிவாளம் போட்டு, குறிப்பிடத்தக்க அளவு சேமிப்பது எப்படி?

    இதோ விவரம்...

    வீட்டுத் தேவைக்கான செலவுகளில் ‘கடித உறை உத்தி’யைப் பயன்படுத்துவதன் மூலம் ஏராளமான பணத்தைச் சேமிக்க முடியும். ஒரு மாதத்தின் வெவ்வேறுவித செலவுகளுக்கு வெவ்வேறு கடித உறைகளைப் பயன்படுத்தவேண்டும். குறிப்பாக, பணத்தைச் சேமிப்பதில் பிரச்சினை ஏற்படும் வகைகளைத் தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு வகைக்கும் தேவையான குறைந்தபட்ச பணத்தைத் தனித்தனி கடித உறைகளில் வைக்க வேண்டும். அதையே செலவழிக்க வேண்டும். இம்முறையைக் கண்டிப்புடன் பின்பற்றி வந்தால், நிச்சயமாகப் பணத்தைச் சேமிக்க முடியும்.

    சந்தையில் கிடைக்கும் பல்வேறு கேஷ்பேக் கிரெடிட் கார்டுகள் மூலம் உணவகங்கள், திரையரங்குகள், பெட்ரோல் நிலையம், காய்கறிக்கடைகளில் பல்வேறு கேஷ்பேக் சலுகைகளைப் பெறமுடியும். உங்களால் கிரெடிட் கார்டு செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும் என்றால் இந்த முறை சிறந்தது.

    நம்மில் பெரும்பாலானோர் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை அதிகம் பயன்படுத்துவதால், அதற்கேற்றாற் போல் அதிகமாகச் செலவழிகிறது. அதிலும், விறுவிறுவென்று உயரும் பெட்ரோல், டீசல் விலையும் அனைவரையும் கவலைப்படுத்துகிறது. இவ்விஷயத்தில் பணத்தைச் சேமிக்கப் பொதுப் போக்குவரத்து அல்லது வாகனங்களைப் பகிர்தல் முறையில் பயணம் செய்யலாம்.

    நீங்கள் போஸ்ட்பெய்டு எண்ணைப் பயன்படுத்தினால் உடனடியாக பிரீபெய்டு எண்ணுக்கு மாற வேண்டும். இதன் மூலம் பல்வேறு மதிப்புக் கூட்டு சேவைகளைத் தவிர்ப்பதால் அதிகப் பணத்தைச் சேமிக்க முடியும். போஸ்ட்பெய்டு திட்டத்தையே தொடர விரும்பினால், உங்களின் தேவைக்கு ஏற்ப மலிவுவிலை திட்டமாகத் தேர்வு செய்ய வேண்டும்.

    எந்த ஒரு பொருளை வாங்கும் முன்பும் விலையை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம். அதற்காகவே உள்ள இணையதளங்களைப் பயன்படுத்தலாம். மேலும் கூப்பன்கள் மற்றும் பல்வேறு இணையதளங்கள், குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கும் கேஷ்பேக் சலுகைகளையும் பயன்படுத்தலாம்.

    ‘இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்’ என்பது போன்ற சலுகைகளில் மயங்காதீர்கள்.

    மளிகைப் பொருட்கள் என்பது தவிர்க்க முடியாத அத்தியாவசியத் தேவைகளில் ஒன்று. ஒவ்வொரு முறையும் இப்பொருட்களை வாங்கச் செல்லும்போது பட்டியலிட்டு வாங்குங்கள். இதன் மூலம் தேவையில்லாதவற்றை வாங்குவதைத் தவிர்க்கலாம். மொத்தமாகப் பொருட்கள் விற்கும் கடைகளில் பொருட்களை வாங்குவதன் மூலம் விலை குறையும்.

    திரையரங்கம் செல்லும் எண்ணிக்கையைக் குறைப்பது, டி.வி. சந்தா தொகையைக் குறைப்பது என்று பொழுதுபோக்குச் செலவுகளில் கொஞ்சம் கை வைக்கலாம்.

    சாதாரண விளக்குகளுக்குப் பதிலாக சி.எப்.எல். அல்லது எல்.இ.டி. விளக்குகளைப் பயன்படுத்தலாம். தேவைப்படாத மின்னணுப் பொருட்களின் மின் இணைப்பைத் துண்டிக்கலாம் அல்லது நீக்கலாம்.

    பெரும்பாலான வீட்டு பட்ஜெட்களில் நெருக்கடியை ஏற்படுத்தும் விஷயம், வெளியே சென்று உணவு அருந்துவது. அடிக்கடி ஓட்டல்களில் உணவு உண்பதைத் தவிர்ப்பது ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, பர்சுக்கும் நலம்.

    வெளியில் செல்லும்போது தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை வாங்குவதைத் தவிர்க்கவேண்டும். மேலும் பிராண்டட் பொருட்கள், திரையரங்கில் உணவு மற்றும் பானங்கள், உடற்பயிற்சி உறுப்பினர் அட்டை போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

    புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற சுகாதாரமற்ற பழக்கங்கள் அதிக பணத்தைச் செலவழிக்கச் செய்யும். இவற்றைத் தவிர்ப்பதால் செலவுகளைக் குறைப்பதுடன், உடல்நலம் கெடுவதையும் தடுக்கலாம்.

    மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் எதிர்பாராத, பெரிய அளவிலான மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம்.

    வாரத்தின் சில நாட்களை ‘செலவழிக்காத நாட்களாக’த் தேர்வு செய்துகொள்ளலாம். அந்த நாட்களில் குறைந்தபட்ச பணம் அல்லது பணமே செலவழிக்காமலும் இருக்க முயலாம். இந்த முறையின் மூலம் பெருமளவு செலவுகளைக் கட்டுப்படுத்தலாம்.

    வாரவாரம் குறிப்பிட்ட தொகையைச் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம். இந்தத் தொகை, உங்களின் நிதி நிலைமைக்கு ஏற்றவாறு இருக்கலாம். ஒவ்வொரு வாரமும் ரூ. 100 சேமிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் துவங்கி, அதைப் படிப்படியாக அதிகரிக்கலாம்.

    நீங்கள் தொடர்ந்து கிரெடிட் கார்டுகளை அதிகளவில் பயன்படுத்துபவராக இருந்தால், அதை அடியோடு தவிர்த்துவிட்டு அதற்கு மாற்றாகப் பணத்தைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் தேவையற்ற பொருட்களை வாங்குவதை தவிர்க்கலாம், செலவுகளைக் கட்டுக்குள் வைக்கலாம்.

    Next Story
    ×