search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மனநலம் காப்போம்... விபரீத முடிவை தவிர்ப்போம்...
    X

    மனநலம் காப்போம்... விபரீத முடிவை தவிர்ப்போம்...

    சமீப காலமாக குடும்ப உறவுகளின் விரிசலால் வாழ்க்கையில் விரக்தியும்,வெறுப்பும் ஏற்பட்டு கொலைகளும், தற்கொலைகளும் சர்வசாதாரணமாக நடைபெறுவதை காணமுடிகிறது.
    சமீப காலமாக குடும்ப உறவுகளின் விரிசலால் வாழ்க்கையில் விரக்தியும்,வெறுப்பும் ஏற்பட்டு கொலைகளும், தற்கொலைகளும் சர்வசாதாரணமாக நடைபெறுவதை காணமுடிகிறது. ஏன் இப்படி நடக்கிறது? உறவுகள் சுருங்கி வருவதும், வருமானம் பெருகி வருவதும், தொழிலில் அகலக்கால் வைத்தலும், நம்பிக்கை துரோகங்களுக்கு ஆட்படுவதும் காரணங்களாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. உறவுகள் அதிகம் இருக்கும் போது தங்கள் செயல்பாடுகளை, மனக் குறைகளை மனம்விட்டு பேச, ஆலோசனைகள் பெற நல்ல மனம் படைத்த அனுபவஸ்தர்கள் இருந்தார்கள். அவர்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி அதை நிவர்த்தி செய்வார்கள். ஆறுதலாக பேசுவார்கள். மன பாரம் குறைக்கும் சுமைதாங்கிகளாக இருந்தார்கள்.

    பண்டிகைக் காலங்களில் அனைவரும் ஒன்று கூடி மகிழ்ந்த வேளைகளில் பல சிக்கல்களுக்குத் தீர்வு கண்டதும் உண்டு. திருமணம் உள்ளிட்ட சடங்குகளில் ஒவ்வொரு உறவும் இதைச் செய்ய வேண்டும் என்று அழைத்ததும் சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்றுதான். ஆனால் பெரும்பாலும் இன்றைய படிப்பும், பணமும் மன அழுத்தத்தையும், நிம்மதியையும் தவிர எல்லாம் தருகிறது. வாழ்க்கை தொலைந்து போகிறது. குழந்தைகளின் கதி அதோ கதியாகிறது.

    இன்று யூடியூப், கூகுள் சமூக வலைத்தளங்கள் என்று தளங்கள் மாறிவிட்டன. எல்லாம் எங்களுக்குத் தெரியும் என்ற மனப்போக்கினால், பிரச்சினைகள் வரும்போது வடிகாலின்றி மன அழுத்தம், மனக்குமுறல் அதிகமாகிறது. ஆனால் இதனை மனதில் பூட்டி வைத்து அன்றாட பணிகளைச் செய்வது பெரும்பாலும் சாத்தியமாகாது. அது வாழ்க்கையின் விளிம்பிற்கும் விபரீத முடிவுக்கும் அவர்களை அழைத்து செல்கிறது.

    மனம் விட்டு பேசக் கூடிய உறவுகள், நல்ல குடும்ப நண்பர்கள் ஓரிருவர் இருந்தாலும் உதவுவார்கள். இவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு கணவன், மனைவி இருவரும் தனியே, அந்த ஆலோசனையை மனம் விட்டு அலசி ஆராய்ந்து முடிவெடுக்கலாம். நம்மிருவரைத் தவிர வேறு யாருக்கும் எதுவும் தெரிய வேண்டாம் என்ற மனப்போக்கு மாறவேண்டும்.

    எல்லாவற்றையும் பகிர வேண்டும் என்றில்லை, தொழில் சார்ந்த முக்கிய முடிவுகளை, மனபாரத்தை பகிரலாம், ஆலோசனை பெறலாம். வழிகாட்டுதல்கள் நிச்சயம் பலன் தரும்.கணவன் மனைவி இருவரும் அலுவலகப் பணிகளை வாரத்தில் ஒருநாளாவது குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் ஒத்தி வைத்துவிட்டு மனம்விட்டு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையோடு பேச வேண்டும், யார்செய்தது சரி? யார் செய்தது தவறு என்பதல்ல பிரச்சினை! விட்டுக் கொடுத்தால் கெட்டுப்போவதில்லை. தீர்வுதான் நோக்கமாக இருக்க வேண்டும்.

    இப்படி அணுகினால் நிச்சயம் தீர்வும் மன அமைதியும் கிடைக்கும்.குழந்தைகளோடு நேரம் செலவிடுதல் மிக மிக முக்கியம். அது குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் நல்ல மகிழ்ச்சியையும் புரிதலையும் தரும். பல்வேறு வகுப்புகளில் சேர்த்து அவர்களை சிறைப்படுத்தாதீர்கள். அவர்களைக் கொண்டு விடுவதிலும், கூட்டி வருவதிலுமே பெற்றோர்களின் நேரம் செலவாகி அயற்சியும், மனச்சோர்வும்தான் மிஞ்சும். இது குடும்ப உறவில் எதிரொலித்து மனக்கசப்புக்கு வழிவகுக்கும்.உளவியல் சார்ந்த நிகழ்ச்சிகள், நூல்கள், வழிபாடு. ஆன்மிக சொற்பொழிவுகள், உடற்பயிற்சி, தியானம், நல்ல சொற்பொழிவாளர்களின் பேச்சு, நகைச்சுவை காட்சிகள் நிச்சயம் மனதை மென்மையாக்கும்.

    குடும்பத்தை பிரிக்கும், பல்வேறு உறவுமுறைகளில் தோன்றும் வில்லத்தனமான காட்சி அமைப்புகளைக் கொண்ட தொடர்கள் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும். மிகுந்த மனப்பாதிப்பை இவை ஏற்படுத்தும். யாரைப் பார்த்தாலும் வெறுப்பும் சந்தேகமும் தான் மிஞ்சும்.

    பெரியாரை துணைக்கொள்ள வேண்டும். இது வள்ளுவரின் வாய்மொழி. நல் வாழ்விற்கு வழிகாட்டும். அறிவுடைய மூத்தோர் நட்பும், அவரைச் சுற்றத்தார்களையும், அவர் கடிந்து கூறினாலும் அவரை பின் தொடர்தலும், நன்மை பயக்கும். பெரியார் தொடர்பில்லா வாழ்க்கை முதல் இல்லா வணிகம், மன்னர்களும் இப்படிப் பட்டோரை துணைகொள்ள வேண்டும் என்று நம்மை வழிநடத்துகிறார். நடப்போம். நல்லதே நினைத்து, நல்லதே செய்து, நல்லவர்கள் மத்தியில் இருந்து நல்லவர்கள் கண்ணில்பட்டால் வாழ்க்கையில் நிச்சயம் மகிழ்ச்சி ததும்பும். வாழ்ந்து காட்டுவோம்!

    ஏ.பி.மதிவாணன்,

    ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி
    Next Story
    ×