search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தீபாவளிக்கு பாதுகாப்பாய் பட்டாசு வெடிப்போம்
    X

    தீபாவளிக்கு பாதுகாப்பாய் பட்டாசு வெடிப்போம்

    பட்டாசுகள் பாதுகாப்பாய் வெடிப்பது முதல் அதனை வெடித்து முடித்து சுத்தம் செய்வது வரை அனைத்து நிலையிலும், மிகுந்த கவனத்துடன் செயல்படுவது அவசியம்.
    தீபாவளிக்கு பட்டாசுதான் ஒரு முழுமையை தரும். அதனால் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு இல்லாமல் தீபாவளியை கொண்டாடுவதில்லை. ஏதேனும் ஒர் வெடியோ, மத்தாப்போ, வீட்டின் முன் வைத்து வெடிப்பதன் மூலம் தீபாவளியின் முழுமையான மகிழ்ச்சி வெளிப்பாடு நிறைவேறுகிறது. மகிழ்ச்சியோடு வெடி வெடிப்பது என்பது, சில சமயம் தவறான மற்றும் எதிர்பாராத செயல்பாடுகளின் மூலம் விபத்துகளை ஏற்படுத்தி விட கூடும். எனவே மகிழ்ச்சியான தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிப்பது என்பது கவனத்துடன் கையாள வேண்டும். பட்டாசுகள் பாதுகாப்பாய் வெடிப்பது முதல் அதனை வெடித்து முடித்து சுத்தம் செய்வது வரை அனைத்து நிலையிலும், மிகுந்த கவனத்துடன் செயல்படுவது அவசியம்.

    பட்டாசு வெடிக்கும் போது செய்ய கூடாதவை:-

    நாம் அணிகின்ற ஆடை என்பது எளிதில் தீப்பற்றி விடாத வகையில் இருத்தல் வேண்டும். நைலான், பாலிஸ்டர் ஆடைகள் அணிந்து கொண்டு பட்டாசு வெடித்தல் கூடாது. பருத்தி துணிகள் அணிவது பாதுகாப்பானது. பட்டாசு வெடிக்கும் போது வெளிவரும் தீப்பொறி பட்டாலும் நைலான் ஆடைகள் பொசுங்கி விட கூடும். அதுபோல், தரை வரை புரள விட்டு செல்லும் பிரமாண்ட ஆடைகள் அணிந்து பட்டாசு வெடிப்பது கூடாது. புதிய ஆடைகளை வெளியே மற்றும் விருந்தினர் வீட்டிற்கு செல்லும் போது அணிந்து சென்று பட்டாசு வெடிக்கும் போது பருத்தியிலான கச்சித மான ஆடைகள் அணிதல் வேண்டும்.

    பட்டாசுகள் கொளுத்து வதற்கு தீக்குச்சி மற்றும் லைட்டர் போன்றவற்றை பயன்படுத்த கூடாது. நீளமான குச்சியுடன் கூடிய ஊதுபத்தி, மத்தாப்பூ போன்றவை மட்டுமே பயன்படுத்திட வேண்டும். பட்டாசிற்கும் நமக்கும் சற்று இடைவெளி இருப்பது மிகவும் அவசியம்.

    வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் வெடிக்க செய்கிறோம் என அதனை கையில் எடுத்து ஆராய்ச்சி செய்வதும் கூடாது. ஒருமுறை தீப்பொறி பட்ட பட்டாசு என்பது சில சமயம் சற்று தாமதமாக கூட வெடிக்க கூடும். எனவே வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுப்பது, மீண்டும் மீண்டும் அதன் மீது நெருப்பு வைப்பது போன்ற பணிகளை செய்தல் கூடாது.

    கையில் வைத்து வெடிப்பது, பொதுமக்கள் செல்லும் போது அவர்கள் மீது தூக்கி எறிந்து பட்டாசு வெடிப்பது போன்ற செயல்களை செய்தல் கூடாது.

    வீட்டின் உட்புறம் மற்றும் வாகன நிறுத்தம் உள்ள பகுதிகளில் பட்டாசு வெடித்தல் கூடாது.

    பட்டாசுகள் வைத்திருக்கும் இடத்தில் அருகில் விளக்குகள்,வெப்பமான மின் விளக்குகள் எரிய விடக்கூடாது. அது போல் பட்டாசுகளை கையில் வைத்து கொண்டு பிற பட்டாசுகளை வெடிக்க செய்யக் கூடாது.

    நெருக்கமான வீடுகள் உள்ள பகுதியில் பட்டாசு வெடிப்பது தவிர்த்திட வேண்டும். மேலும் ஓலை வீடுகள் அருகில் ராக்கெட் போன்ற பாய்ந்து செல்லும் வெடிகளை வெடிப்பதை தவிர்த்திட வேண்டும். மத்தாப்பூ கம்பிகளை பற்ற வைத்து விட்டு ஆங்காங்கே தூக்கி எறிதல் கூடாது. பாதுகாப்பாக ஓர் பகுதியில் சேகரித்து பின்னர் அதனை வெளியேற்றிட வேண்டும்.



    பட்டாசு வெடிக்கும் போதுசெய்ய வேண்டியவை

    பட்டாசு வெடிக்கும் போது காலில் செருப்பு அணிந்து தான் வெடித்திட வேண்டும்.

    ஓரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் மணல் போன்றவை அருகில் வைத்திருப்பது வேண்டும்.

    எந்த ஒரு பட்டாசை வெடிக்கும் முன்னும் அதன் பெட்டியில் குறிப்பிட்டுள்ள செயல்முறைகளை படித்து பார்த்து அதற்கு ஏற்ப வெடித்திட வேண்டும்.

    பட்டாசு வாங்கும் போது அது முறையான அனுமதி பெற்று தயாரிக்கப்பட்ட தரமான பட்டாசு தானா என ஆராய்ந்து வாங்குதல் வேண்டும்.

    குழந்தைகளை பட்டாசு வெடிக்கும் பகுதியில் இருந்து தூர நிற்க வைத்து பார்க்க செய்ய வேண்டும். பெரிய வெடிகளை குழந்தைகளிடம் கொடுத்து வெடிக்க செய்கிறோம் என ஆபத்தை விலைக்கு வாங்க வேண்டாம்.

    பெரும்பாலும் திறந்த வெளி பகுதிகளில் பட்டாசு வெடிப்பது நன்மையளிக்கும். ஓரே நேரத்தில் பல வெடிகள் மற்றும் மத்தாப்பூகளை கொளுத்துவது வேண்டாம்.

    வெடிக்காத பட்டாசுகள் மீது தண்ணீர் ஊற்றி அதனை அணைத்து விட வேண்டும்.

    சாலைகளில் பட்டாசு வெடிக்கும் போது மக்கள் நடமாட்டத்தை கவனித்து பட்டாசு வெடித்தல் வேண்டும். யாரேனும் வந்தால் உடனே முன்னெச்சரிக்கையாக சைகை செய்து அவர்களை அங்கேயே தூரமாக நிற்க செய்திட வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது குனிந்து முகத்தை அதன் அருகில் கொண்டு சென்று பற்ற வைக்க கூடாது. நீளமான குச்சி ஊதுபத்திகள் அதிகம் பயன்படுத்திடல் வேண்டும்.

    முதலுதவி மற்றும் பாதுகாப்பபு நடவடிக்கைகள்

    பட்டாசுகள் எதிர்பாராவித மாக அதிகபடியாய் வெடித்து விபத்து ஏற்படின் வாளியில் உள்ள தண்ணீர் மற்றும் மணலை கொட்டி அணைத்திட வேண்டும்.

    நமது கால், கைகளில் ஏதேனும் தீப்பட்டு விட்டால் உடனே தண்ணீரை ஊற்றி அதனை குளிர்ச்சி படுத்திவிட்டே பின் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

    கண்கள் மீது ஏதும் தீப்பொறி பட்டு விட்டால் நன்றாக தண்ணீர் விட்டு கழுவி விட வேண்டும். மெல்லிய ஆடைகள் அணிவதை தவிர்த்து கனமான ஆடைகள் அணிவது மிகுந்த நன்மையளிக்கும்.

    பெரும்பாலும் தீபாவளி சமயத்தில் வீடுகளின் ஜன்னல் களை மூடியே வைத்திருப்பது நல்லது. ஏனெனில் உயர சென்று வெடிக்கும் வெடி, ராக்கெட் போன்றவை தவறுதலாக வீட்டின் ஜன்னல் வழியே உள்ளே வர வாய்ப்பிருக்கிறது.

    விளக்குகள் ஏற்றி வைத்திருப்பின் அதன் அருகே துணிகள் மற்றும் திரை சீலைகள் படாமல் பார்த்து கொள்ளவும். குழந்தைகள் பட்டாசு வெடித்து முடித்ததும் கைகளை நன்றாக கழுவிவிட சொல்லவும். பட்டாசுகளில் இரசாயன துகள்கள் கைகளில் பட்டு ஓவ்வாமை ஏற்படவும், உணவுகளோடு சேர்ந்து உடலுக்குள் செல்லவும் வாய்ப்பு உள்ளது.

    எனவே தீபாவளியின் போது பாதுகாப்பாய் பட்டாசு வெடிப்போம். மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்.
    Next Story
    ×