search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சமூகத்தில் தனி மரியாதையை பெற்றுத் தரும் பெண் கல்வி
    X

    சமூகத்தில் தனி மரியாதையை பெற்றுத் தரும் பெண் கல்வி

    பெண்கல்வி பெண்களுக்கு சமூகத்தில் தனி மரியாதையைப் பெற்றுத் தருகிறது. ஆணுக்கு இணையாகவோ, ஆண்களை விட பெரிய அளவிலோ பெண்கள் வளர பெண்கல்வியே மிகவும் தேவையாகிறது.
    மனிதனின் ஆறறிவை செழுமையாய் வைத்திருப்பதில் கல்வி மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. இந்தக் கல்விக்கு ஆணென்றும், பெண்ணென்றும் பேதமில்லை. அப்படிப்பட்ட கல்வி இன்று பெண்களுக்குக் கிடைக்கிறதா ? இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் போன்றவற்றை நாம் அறிந்து கொள்ளலாம்.

    இந்தியாவின் எதிர்காலம் குழந்தைகளிடம் என்கிறோம். ஆனால் அவர்களுக்கு அடிப்படை வசதிகளே இல்லை. உணவு, உடை, உறைவிடமே இல்லாத சூழலில் கல்வியை வழங்குவது நமது தேசத்தின் முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால்.

    இந்தியாவில் இன்று கல்வியறிவு பெற்ற பெண்கள் வெறும் 54.16 சதவீதம் தான். ஆண்களில் சுமார் 76 சதவீதம் பேர் அடிப்படைக் கல்வி அறிவைப் பெற்றிருக்கின்றனர். நகர்புறம், கிராமப்புறம் எனும் வேறுபாடு எதுவும் இன்றி பெண்களுக்கான கல்வி குறைவாகவே இருக்கிறது. கேரளா, தமிழகம் உட்பட சில மாநிலங்கள் கல்வியில் வளர்ச்சி நிலையை நோக்கி நகர, வட மாநிலங்களான பீகார் போன்றவை கல்வியில் மிகவும் பிந்தங்கிய நிலையிலேயே இருக்கின்றன.

    நமது சமூக அமைப்பு பெண்கல்வியை ஊக்குவிக்கவில்லை. பெண்கள் வீட்டை ஆள வேண்டும், ஆண்கள் நாட்டை ஆளவேண்டும் என பிரித்திருந்தன. எனவே பெண் என்பவள் வீட்டு வேலைகளைச் செய்து, குழந்தைகளையும் கணவனையும் கவனிப்பவராக மாறிப் போனார். ஆண்கள் கடும் உழைப்பைச் சிந்தி வீட்டுக்கான பொருளாதாரத் தேவையை நிறைவேற்றும் பணியை மேற்கொண்டார்கள். வீட்டை ஆளும் பெண்களுக்கு கல்வி தேவையில்லை என்பது ஆணாதிக்க மனநிலையாய் இருந்தது.



    இன்றைய உலகம் பெண்கல்வியை ஊக்கப்படுத்துகிறது. பெண்கள் கல்வியறிவு பெற்று பல்வேறு உயர் பதவிகளை இன்று வகிக்கின்றனர். நாட்டின் தலைவர்களாகவும், பெரிய நிறுவனங்களின் தலைவர்களாகவும் பெண்கள் இன்று இடம்பிடித்திருக்கின்றனர். சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வே இதன் காரணமாகும். இன்றைய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆண்களுக்கு இணையான அளவு பெண் ஊழியர்களும் இருக்கின்றனர். ஆனாலும் உயர் பதவிகளைப் பொறுத்தவரை சுமார் 80 சதவீதம் பதவிகள் ஆண்கள் வசமே இருக்கின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம்.

    பெண்கல்வி எங்கும் கிடைக்கும் போது நமது நாட்டின் வறுமை நிலையும் மறையும். பொருளாதாரம் வளர்ச்சியடையும். சமூகம் மறுமலர்ச்சியடையும்.

    பெண்கல்வி நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒன்று. குழந்தைகளை வளர்க்கும் பெரும் பொறுப்பு இன்றைக்கு பெண்களிடம் தான் இருக்கிறது. பெண்களின் கல்வியறிவு சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு சரியான அறிவையும், அறிவுரைகளையும் வழங்க உதவும். குடும்பத்தின் பொறுப்புகளைச் சுமக்கின்ற பெண் வேர்களைப் போன்றவர். வேர்கள் வலுவாக இருக்கும் போது தான் மரம் செழுமையாக இருக்க முடியும். பெண்கல்வி அந்த வேர்களை பலப்படுத்தும். இதன் மூலம் குடும்பம் வலிமையாகும். குடும்பம் வலிமையாகும் போது ஒரு சமூகம் வலிமையாகும். சமூகம் வலிமையாகும் போது நாடு வலிமையடையும்.

    பெண்கல்வி பெண்களுக்கு சமூகத்தில் தனி மரியாதையைப் பெற்றுத் தருகிறது. ஆணுக்கு இணையாகவோ, ஆண்களை விட பெரிய அளவிலோ பெண்கள் வளர பெண்கல்வியே மிகவும் தேவையாகிறது. ஆணும் பெண்ணும் சமம் எனும் நிலை சமூகத்தில் உருவாகவேண்டுமெனில் பெண் கல்வி மிகவும் அவசியம்.

    கல்வி ஒரு மனிதனுக்கு துணிச்சலைக் கொடுக்கிறது. அதிலும் குறிப்பாக மென்மையான பெண்களுக்கு கல்வி தான் மிகப்பெரிய துணிச்சல் ஆயுதமாய் இருக்கிறது.

    Next Story
    ×