search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வாழ்வை வசப்படுத்தும் வழிகள்
    X

    வாழ்வை வசப்படுத்தும் வழிகள்

    நீங்கள் எடுத்துக்கொண்டத் துறை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை அதில் மிகப்பெரிய சாதனை புரியவேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் பணியாற்றுங்கள் வெற்றி உங்களைத் தானாகத் தேடிவரும்.
    நமது வாழ்க்கையில் எந்த ஒரு குறிக்கோளும் லட்சியமும் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கும் மனிதர்களை பார்த்திருப்போம். அவர்கள் தம்முடைய தலைவிதி இது தான் என்று வாழ்க்கையில் எந்தஒரு லட்சியமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் ஒரு சிலர் தற்செயலாக வெற்றி பெற்று விடுகிறார்கள். ஆனால், பெரும்பாலான மக்கள் விரக்தியினாலும் மகிழ்ச்சி இன்மையாலும் வாழ்நாள் முழுவதும் அவதிப்படுகிறார்கள். தற்செயலாகவோ அல்லது சிபாரிசின் மூலமாகவோ ஒருவர் உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டால் அவர்களுக்கு பயம் இருக்கும். ஆனால் தன்னுடைய திறமை மற்றும் உழைப்பின் மூலம் உயர்ந்த நிலைக்கு வந்தவர்களுக்கு பயம் இருக்காது. கீழே விழுந்தாலும் மீண்டும் உயர்ந்த நிலைக்கு வருவார்கள்.

    வாழ்க்கையின் வெற்றிக்கு மிக முக்கியமாக மூன்று தடைகள் உள்ளன அவைகள் பயம், கவலை மற்றும் சோம்பல் ஆகும். பயமும் தயக்கமும் உள்ளவர்களை தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கும். பயம் மற்றும் கவலைக்கு காரணம் தேவையற்ற சந்தேகம் மற்றும் தாழ்வு மனப்பான்மை ஆகும். பெரும்பாலும் இவைகள் நம்முடைய எதிர்மறை கற்பனையின் மூலம் ஏற்படுகிறது. நம்முடைய தேவையற்ற பயத்தைப் போக்க வேண்டுமென்றால், நாம் எதைக்கண்டு பயப்படுகிறோமோ அதை எதிர் நோக்க முயற்சிக்க வேண்டும். நாம் நம்முடைய சிறு வயதுமுதலே தெரிந்தோ தெரியாமலோ தேவையற்ற எதிர்மறைக் கற்பனையை வளர்த்து விடுகிறோம் அதுதான் நம்முடன் நம்வாழ்நாள் முழுவதும் பயணிக்கிறது. அதிலிருந்து நம்மால் நிச்சயம் விடுபடமுடியும் அதற்கு தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் தேவை.

    உயிரோடு இருக்கும் மனிதன் தனக்காக கட்டிக் கொள்ளும் கல்லறைதான் சோம்பல். சோம்பலில் சுகம் காண்பவன் தன்னைத் தேடிவரும் நல்ல பல வாய்ப்புகளை பயன்படுத்தாமல் புறக்கணித்துவிடுகிறான். ஆனால், எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பவர்கள் தமக்கு வரும் தடைகளை வெற்றிப் படிகளாக மாற்றுகின்றனர். ஒருமுறை வந்த வாய்ப்பு மீண்டும் வருவதில்லை அப்படிவந்தால் அது மற்றொரு வாய்ப்பாகத்தான் கருதமுடியும். வாய்ப்புகள் வரும்போது தங்கள் மனக்கதவுகளை திறந்து வையுங்கள். சோம்பலே வாழ்க்கையானால் சோகமே வருமானம் ஆகும். எல்லாவாய்ப்புகளிலும் உள்ள சிறந்தவற்றையே பாருங்கள்.

    பயம், சோம்பல், கவலை, தாழ்வு மனப்பான்மை ஆகியவைகள் ஒன்றன் கீழ் ஒன்றாக வரிசையாக பின்னப்பட்ட சிலந்தியின் வலையைப்போன்றது. அதில் நாம் ஒரு பூச்சியைப் போல மாட்டிக்கொண்டோம். அந்த கூட்டிலிருந்து விடுபடவேண்டுமென்றால் நமக்கு யாரும் உதவமுன்வரமாட்டார்கள் நாம் தான் முயற்சிசெய்து வெளியே வரவேண்டும். நாம் நம்முடைய மனநிலையை மாற்றிக்கொள்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையை மாற்றிக்கொள்ளலாம்.

    மக்கள் பெரும்பாலும் தோல்வியடைவதற்கான காரணம் திறமையில்லாமையோ அல்லது அறிவில்லாமையோ அல்ல மாறாக விருப்பமில்லாமை, சிறந்தவழிகாட்டி இல்லாமை, ஒழுக்கமில்லாமை மற்றும் அர்ப்பணிப்புத்தன்மை இல்லாமை ஆகும். நாம் எப்படி வாழ்வது, எப்படி பிரச்சினைகளை சமாளிப்பது எப்படி சரியான முடிவுகளை எடுப்பது போன்றவற்றை எந்த பள்ளிகூடமும் கல்லூரியும் கற்றுக் கொடுப்பதில்லை. நாம் தான் இவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் இது நம் அனுபவத்தின்மூலமே பெறமுடியும்.

    சில கடினமான வேலைகள் வரும்போது மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். அதை நிராகரிக்காதீர்கள் இதுபோன்ற கடினமான வேலைகள் செய்யும் போதுதான் நம்முடைய திறமை வெளிப்படும். எந்த ஒரு செயலையும் எல்லோரும் செய்துவருகின்ற நடைமுறையாக இருந்தாலும் அதில் ஒருவர் ஏனைய மற்றவர்களைவிட மிகச்சிறப்பாக, மிகஅழகாக, விரைவாக அதிக மாறுபாட்டுடன் செய்து பிறரது கவனத்தை ஈர்த்து பாராட்டு பெறுகிறார்களோ அவர்களே திறமைசாலிகள் ஆவர்.

    நமது முன்னோர்கள் ஞானிகளாகவும், அறிஞர்களாகவும், யோகிகளாகவும், முனிவர்களாகவும், தியாகிகளாகவும், மாமன்னர்களாகவும் வாழ்ந்து வந்தார்கள். அந்த பரம்பரையில் வந்த நாம் இன்று தன்னம்பிக்கையற்று தைரியம் இல்லாமல் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கிறோம். முயற்சி இல்லாமல் ஒருபோதும் வெற்றி பெறமுடியாது. நீங்கள் எடுத்துக்கொண்டத் துறை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை அதில் இதுவரை பணியாற்றியவர்கள் எல்லோரும் சேர்ந்து என்னவெல்லாம் சாதித்தார்களோ அவற்றுக்கெல்லாம் மேலாக இன்னும் மிகப்பெரிய சாதனை புரியவேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் பணியாற்றுங்கள் வெற்றி உங்களைத் தானாகத் தேடிவரும்.

    ர.அறிவழகன், சென்னை.
    Next Story
    ×