search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பேஸ்புக் பக்கமும் பெண்களின் பாதுகாப்பும்
    X

    பேஸ்புக் பக்கமும் பெண்களின் பாதுகாப்பும்

    இன்று பேஸ்புக் பயன்படுத்தும் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை. பேஸ்புக்கில் நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு.
    இன்று பேஸ்புக் பயன்படுத்தும் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை. பேஸ்புக்கில் நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு. அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது நமது கைகளில் தான் இருக்கிறது. பேஸ்புக்கை பயன்படுத்தும் பெண்கள் தெரியாமல் செய்யும் செயலால் பல பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. சாலை என்று இருந்தால் அதில் விபத்துக்கள் நடக்க கூடும். விபத்திலிருந்து நம்மை பாதுகாப்பதற்கு சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். அதுபோல் தான் பேஸ்புக்கில் நம்மை பாதுகாப்பதற்கு சில வழிமுறைகளை பின்பற்றினால் பாதுகாப்பாக இருக்கலாம். இல்லை என்றால் பல ஆபத்துகளை சந்திக்கக்கூடும். பேஸ்புக்கில் பெண்கள் செய்யும் சில தவறுகளை பற்றி பார்ப்போம்.

    பேஸ்புக்கில் இன்று பெண்கள் செய்யும் மிக பெரிய தவறில் ஒன்று தங்களுடைய புகைப்படங்களை பகிர்வது. அந்த புகைப்படங்கள் எல்லாம் எங்கே செல்கிறது எவ்வாறு பயன்படுத்தபடுகிறது என்று பெண்களுக்கு தெரிவது இல்லை. பெண்கள் சர்வசாதாரணமாக புகைப்படங்களை பகிர்கின்றனர். நீங்கள் பகிரும் புகைப்படங்களை விஷமிகள் எடுத்து மார்பிங் செய்து ஆபாச இணையதளத்திற்கு விற்று விடுகிறார்கள். இப்படி பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருக்கின்றனர். சற்று தெளிவான பெண்கள் பேஸ்புக் டைம் லைனில் புகைபடங்களை பகிர்வதில்லை.

    பேஸ்புக்கில் பெண்கள் அவர்களின் உறவினர்களுடன் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் உரையாடும் போது அவர்களின் புகைப்படங்களை பகிர்வார்கள். நம் உறவினர் மற்றும் நம் நண்பர்களை தவிர வேறு யாராலும் பார்க்க முடியாது அப்படி செய்வது மிகவும் பாதுகாப்பானது என்று பல பெண்கள் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். அது தான் இல்லை. நீங்கள் பேஸ்புக்கை எப்போது தொடங்கினீர்களோ அப்போதிலிருந்து நீங்கள் பேசிய உரையாடல், புகைப்படங்கள் மற்றும் அனைத்து நடவடிக்கையும் பேஸ்புக் சர்வரில் சேமித்து வைத்து இருக்கும்.

    இதில் சுவாரஸ்யமான விஷயம் என்ன வென்றால் நீங்கள் அழித்தவற்றையும் பேஸ்புக் சேமித்து வைத்து இருக்கும். இதனால் எனக்கு என்ன ஆபத்து என்று கேட்கலாம் உங்கள் பேஸ்புக் கணக்குஹேக்கர்ஸ் அல்லது விஷ கிருமியிடம் கிடைத்தால் உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்ள அனைத்து தகவல்களையும் எடுத்து அதை எந்த வழிகளிலும் பயன்படுத்த முடியும். ஆகையால் பெண்கள் பேஸ்புக்கில் உரையாடும் போதும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

    பேஸ்புக்கில் நமக்கு அறிமுகம் இல்லாத நபர் யாரும் நட்பு வேண்டுதல் கொடுத்தால் அதை ஏற்காதீர்கள். உங்களுக்கு நன்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் மட்டும் நட்பு வைத்து கொள்ளுங்கள். இதனால் பல பிரச்சினைகளை தவிர்க்கலாம். பேஸ்புக்கில் போலி கணக்குகளும் இருக்கின்றன. எனவே யாரையும் எளிதாக நம்பிவிடவேண்டாம்.

    எந்த புரொபைலையும்(சுய விவர குறிப்பு) பார்த்ததும் நட்பு வேண்டுதல் செய்து விடாமல், அந்த கணக்கை பற்றி முழு விவரம் தெரிந்த பின்னர் நட்பு வேண்டுதலை தெரிவியுங்கள். பெண்கள் பேஸ்புக் கணக்கை தொடங்கும் போது தங்களின் தொலைபேசி எண் வைத்து கணக்கை தொடங்குவார்கள். அவ்வாறு செய்வது பெண்களுக்கு பாதுகாப்பானது இல்லை.

    நீங்கள் உங்கள் பேஸ்புக் கணக்கை தொலைபேசி எண்ணை வைத்து உருவாக்கினால் உங்கள் தொலைபேசி எண் பேஸ்புக்கில் உள்ள ரிப்போர்ட் பக்கத்தில் தோன்றும் அதை எல்லாராலும் பார்க்க முடியும். இதனால் அந்த எண்ணுக்கு தேவையில்லாத அழைப்புகள் வரக் கூடும். பேஸ்புக் கணக்கை உருவாக்கும்போது பெண்கள் மின்னஞ்சலை பயன்படுத்தி உருவாக்குங்கள் அது பாதுகாப்பானது. அந்த மின்னஞ்சலை வேறு எதற்கும் பயன்படுத்த வேண்டாம் பேஸ்புக் கணக்கு மட்டும் பயன்படுத்துங்கள்.

    ஒரு சில நேரம் பெண்கள் சிலரை நல்லவர் என்று நினைத்து அவர்களின் நட்பு வேண்டுதலை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் ஏற்றுகொண்ட பிறகு அவர்களின் தொல்லை அதிகமாக இருக்கும். அவர்களை முதலிலே தவிர்த்து விடுவது நல்லது. பேஸ்புக்கில் அவர்களை எப்படி பிளாக் செய்வது என்று பார்ப்போம். முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்ள செட்டிங்ஸ் என்ற பக்கத்திற்கு செல்லுங்கள். அந்த பக்கத்தில் இடது பக்கம் இருக்கின்ற ப்ளாக்கிங் ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். அதில் இருக்கும் ப்ளாக் யூசர்ஸில் நீங்கள் ப்ளாக் செய்ய விரும்புவோரின் பெயர், மின்னஞ்சல் அல்லது அவரின் புரொபைல் யூ. ஆர். எல் . இதில் ஏதேனும் ஒன்றை அந்த இடத்தில் கொடுத்து ப்ளாக் என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். அவ்வளவு தான் இனி அவர் எப்போதும் உங்களை தொடர்பு கொள்ள முடியாது.

    நீங்கள் ஏதாவது ஒரு பக்கத்திற்கு சென்றால் அந்த பக்கத்தில் ஓர் பதிவிற்கு நீங்கள் கருத்துகள் தெரிவிக்கும் போது அந்த கருத்துகள் மற்றும் புரொபைல் அதே பக்கத்தில் இருக்கும். இதனால் வெளியாட்கள் அந்த பக்கத்திற்கு வரும் போது உங்கள் புரொபைலுக்கு நட்பு வேண்டுதல் தெரிவிக்க வாய்ப்பு உள்ளது. இது பெண்கள் அறியாமல் செய்யும் மிக பெரிய தவறு இதனால் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும்.

    இது பெண்களுக்கு பாதுகாப்பானது இல்லை. இணையதளத்தில் உங்கள் புகைப்படங்களை பதிவேற்றுங்கள் முப்பது வருடங்களுக்கு பிறகு நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்று சொல்கிறேன் என்று கேள்வி கேட்டால் அதில் பெண்கள் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யாதீர்கள் மற்றும் ஒரு லிங்கை அனுப்பி இந்த லிங்கில் நீங்கள் சென்று லாகின் செய்தால் 15ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள் உங்களுக்கு வெறும் 1200 ரூபாய்க்கு கிடைக்கும் என்று கூறினால் செல்லாதீர்கள்.

    ஏனென்றால் உங்கள் பேஸ்புக் கணக்கை ஹேக் செய்ய நினைப்பார்கள். “பிஷிங்” என்ற முறையில் உங்கள் பேஸ்புக்கை மற்றும் இதர கணக்குகளை ஹேக் செய்து விடுவார்கள். பிஷிங் என்றால் பேஸ்புக் லாகின் பக்கம் மாதிரியே உருவாக்கி அதை உங்களுக்கு அனுப்புவார்கள். அதை நீங்களும் கிளிக் செய்து உங்கள் கணக்கை லாகின் செய்தால் உங்கள் யூசர் நேம், பாஸ்வேர்டு உள்ளிட்டவை திருடப்பட்டுவிடும். மேலே கூறப்பட்டுள்ள வழிகளை பெண்கள் பின்பற்றினால் பேஸ்புக்கில் பாதுகாப்பாக இருக்கலாம்.

    ப.பொன்விக்னேஸ், கல்லூரி மாணவர்
    Next Story
    ×