search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா?
    X

    பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா?

    ஊழியர்கள் மற்றும் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பங்களிப்புடன் வளர்ந்துவரும் பி.எப்., நம் எதிர்காலத்துக்கு மட்டுமின்றி, அவசரத் தேவைக்கும் கைகொடுக்கக்கூடியது.
    ஊழியர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது ‘பிராவிடண்ட் பண்ட்’ (சுருக்கமாக பி.எப்.) எனப்படும் வருங்கால வைப்புநிதித் திட்டம்.

    ஊழியர்கள் மற்றும் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பங்களிப்புடன் வளர்ந்துவரும் பி.எப்., நம் எதிர்காலத்துக்கு மட்டுமின்றி, அவசரத் தேவைக்கும் கைகொடுக்கக்கூடியது.

    பல்வேறு காரணங்களுக்காக, இடையில் நாம் பி.எப். பணத்தை பகுதியாகவோ, முழுமையாகவோ பெற்றுக்கொள்ள முடியும். அவை எவை எவை என்று இங்கே பார்ப்போம்...

    மகன் அல்லது மகளின் கல்விச் செலவுக்காக, வருங்கால வைப்பு நிதியிலிருந்து உறுப்பினர் ஒருவர் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு ஊழியரின் பங்களிப்புத் தொகையில் 50 சதவீதம் மட்டும்தான் விடுவிக்கப்படும்.

    திருமணமாகாத ஒருவர், தனது திருமணத் தேவைக்காக வருங்கால வைப்பு நிதியில் இருந்து செலுத்தப்பட்ட பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும். மகன், மகள், சகோதரி மற்றும் சகோதரன் ஆகியோரின் திருமணத்துக்காகவும் பணத்தைப் பெறலாம். ஆனால் தாம் செலுத்திய பங்களிப்புத் தொகையில் 50 சதவீதம் மட்டுமே இந்தக் காரணங்களுக் காகத் திரும்பப் பெற முடியும்.

    தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு ஒரு நிறுவனம் தமது ஊழியர்களுக்கு எந்தவித இழப்பீடும் வழங்காமல் இழுத்தடித்தாலோ, அந்த நிறுவனம் இழுத்து மூடப்பட்டாலோ வருங்கால வைப்பு நிதியை உறுப்பினர்களால் திரும்பப் பெற முடியும்.

    இதேபோல் 2 மாதமோ அல்லது அதற்கு அதிகமாகவோ ஒரு நிறுவனம் சம்பளம் வழங்காத நிலையில், சேமநல நிதியை மொத்தமாகத் திரும்பப் பெற வழிவகை உள்ளது.

    ஓர் ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது கோர்ட்டை அணுகும்போதோ, தனது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள வருங்கால நிதியில் 50 சதவீத பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

    தொழிற்சாலை ஒன்று தொடர்ந்து 6 மாதங்களுக்கு மூடப்பட்டிருந்தால், உறுப்பினர் தனது பங்களிப்புத் தொகையை நூறு சதவீதம் வரை திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும். வேலை இழப்பை தொடர்ந்து சந்திக்கும்போதோ, இழப்பீட்டுத் தொகையை அந்த நிறுவனம் வழங்காதபோதோ நூறு சதவீத வட்டியுடன் பங்களிப்புத் தொகை முழுவதையும் தொழிலாளர் திரும்பப் பெற்றுக்கொள்ளவும் இடம் இருக்கிறது.

    காசநோய், தொழுநோய், முடக்கம், புற்றுநோய், மனநலம் பாதிப்பு மற்றும் இதயநோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியின் முழுத்தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும். குறைவான அடிப்படை ஊதியமாக இருந்தால் 6 மாதங்களுக்கான பரிவுத்தொகையோ அல்லது பாதிக்கப்பட்ட அந்த உறுப்பினரின் பங்களிப்புத் தொகையோ வட்டியுடன் வழங்கப்படும்.

    கலவரம், வெள்ளம், பூகம்பம் உள்ளிட்ட எதிர்பாராமல் ஏற்படும் இயற்கைப் பேரிடர்களில் உறுப்பினர்களின் சொத்து சேதமடைந்தால், ஐயாயிரம் ரூபாயோ அல்லது பங்களிப்புத் தொகையில் 50 சதவீதமோ திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

    தொழிற்சாலையில் மின்வெட்டு ஏற்பட்டதைக் காரணம் காட்டி, பங்களிப்பாளர் ஒருவர் கடன் முதலீடாக வருங்கால வைப்பு நிதி கோர அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் குறிப்பிட்ட பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டதாக மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஊதியம் வழங்க முடியாத அளவுக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டதாக முதலாளி ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் வாங்குவதற்காக வருங்கால வைப்பு நிதியை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு, உரிய மருத்துவரிடம் சான்றிதழ் பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும். அப்போது 6 மாதங்களுக்கான பரிவுத்தொகை அல்லது வட்டியுடன் பங்களிப்புத்தொகை அல்லது உபகரணங்களுக்கான செலவுத்தொகை இதில் ஏதாவது ஒன்று வழங்கப்படும்.

    உறுப்பினர் ஒருவர் தனது 54-வது வயதில் 90 சதவீதம் வரை வருங்கால வைப்பு நிதியைத் திரும்பப்பெற அனுமதிக்கப்படுகிறது. ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடத்துக்கு முன்னரே, விருப்ப ஓய்வு பெற்றாலும் இந்தத் தொகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ள இயலும்.

    55 வயதை எட்டிய ஓர் உறுப்பினர் 90 சதவீத பங்களிப்புத் தொகையைத் திரும்பப் பெற வருங்கால வைப்பு நிதி அனுமதிக்கிறது. இதை ஆயுள் காப்பீட்டுக் கழகத்திலோ அல்லது வரிஷ்த்த பென்சன் பீமா யோஜனாவிலோ முதலீடு செய்து கொள்ளும்வகையில் மாற்றிக் கொள்ளலாம்.

    வீடு கட்டவும், அடுக்குமாடிக் கட்டிடங்களில் முதலீடு செய்யவும், மனையிடம் வாங்கிப் போடவும் வருங்கால வைப்பு நிதியின் பங்களிப்புத் தொகையைப் பெற முடியும். ஆனால் நல நிதியத்தில் உறுப்பினராக 5 ஆண்டுகளை நிறைவு செய்திருக்க வேண்டும்.

    நிலுவையில் உள்ள கடனுக்காகவோ, கடனுக்கு வட்டி செலுத்துவதற்காகவோ உறுப்பினர் வருங்கால வைப்பு நிதியைக் கோரலாம். உறுப்பினரின் பெயரிலோ, மனைவியின் பெயரிலோ அல்லது கூட்டாக இருவரின் பெயரிலோ கடன் பெற்றால், வருங்கால வைப்பு நிதி விடுவிக்கப்படும். 
    Next Story
    ×