search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மின்சிக்கனத்துக்கு சில வழிகள்...
    X

    மின்சிக்கனத்துக்கு சில வழிகள்...

    வீட்டை கட்டும்போது எல்லா அறைகளிலும் சூரிய ஒளி படும் விதத்தில் கட்ட வேண்டும். அதன்மூலம் மின்விசிறியின் தேவை குறைந்து மின்கட்டணத்தையும் குறைக்க முடியும்.
    வீட்டை கட்டும்போது எல்லா அறைகளிலும் சூரிய ஒளி படும் விதத்தில் கட்ட வேண்டும். அதற்கு போதுமான ஜன்னல்களை அமையுங்கள். அவை சரியான கோணத்தில் அமைந்திருந்தால் வெளிச்சம் மட்டுமல்ல, காற்றும் சீராக வரும். அதன்மூலம் மின்விசிறியின் தேவை குறைந்து மின்கட்டணத்தையும் குறைக்க முடியும்.

    ஏற்கனவே கட்டிய கட்டிடம் என்றாலும்கூட, அதிக இயற்கை வெளிச்சம் அறைக்குள் வரும் வகையில் சில மாற்றங்களைச் செய்யலாம். அதற்கு கட்டிட என்ஜினீயரிடம் ஆலோசனை பெறுங்கள்.

    ஜன்னல் கண்ணாடிகளின் மீது படியும் தூசியை அடிக்கடி துடைத்து சுத்தம் செய்யுங்கள். இல்லையென்றால் முழு வெளிச்சத்தையும் அறைக்குள் செல்ல விடாமல், ஜன்னலில் உள்ள தூசி படலம் தடுக்கும். அதுமட்டுமல்ல, ஜன்னலில் எந்த வகையான கண்ணாடி பொருத்த வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துங்கள். வண்ண கண்ணாடிகள், அடர்த்தியான மங்கலான வெள்ளைக் கண்ணாடிகள் போன்றவற்றை தவிர்த்து விடுங்கள். தெளிவான கண்ணாடிகள் அதிக வெளிச்சத்தை உள்ளே அனுப்பும்.

    சுவர்களில் பூசும் பெயின்டின் நிறம்கூட மின் கட்டணத்தை அதிகப்படுத்தும் அல்லது குறைக்கும் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், அது உண்மை. அழுத்தமான வண்ணங்களை சுவர்களுக்கு பூசினால், அதன் மீது படும் ஒளியில் கணிசமான பகுதியை அவையே விழுங்கிக்கொண்டுவிடும். வெளிர்நிற வண்ணம் என்றால், அது வெளிச்சத்தை அதிகம் பிரதிபலிக்கும். எனவே, வெளிர்நிற வண்ணம் அடிக்கப்பட்ட சுவர்களைக்கொண்ட அறைக்கு, குறைவான மின்சக்தி கொண்ட பல்புகள் போதுமானது.



    மின்விசிறி தொடர்பாக எல்லோருக்கும் எழும் சந்தேகம் இது. மின்விசிறியின் வேகத்தை குறைத்தால், மின்சாரம் குறைவாக செலவாகுமா? என்பதுதான். இப்போது அதிகம் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் ரெகுலேட்டர்களைப் பொறுத்தவரையில், மின்விசிறியின் வேகத்துக்குத் தகுந்த மாதிரிதான் மின்சாரமும் செலவழியும். எனவே, தேவைப்படும் அளவுக்கான வேகத்தில் மின்விசிறியை சுற்றவிடலாம்.

    எந்த வகை மின்சாதனங்கள் அதிக மின்சாரத்தை செலவழிக்குமோ, அவற்றின்மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு நம் வீட்டிலுள்ள எல்லா மின்சாதனங்களும் இயங்குகின்றன என்று வைத்துக் கொள்வோம். அப்போது டியூப்லைட்டைவிட, குமிழ் பல்பு அதிக மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும்.

    வழக்கமான குமிழ் பல்புகளைக் காட்டிலும் சி.எப்.எல் பல்புகள் நீடித்து உழைக்கின்றன. குறைந்த மின்சக்தியில் அதிக ஒளியைத் தருகின்றன. இப்போது எல்.இ.டி. விளக்குகளும்கூட குறைந்த மின் செலவில் பிரகாசமான வெளிச்சத்தை தருகின்றன. சிறிதளவு கூடுதல் பணத்தை செலவழித்தால், நீண்ட நாளைக்குப் பயன்தரும் இந்த விளக்குகளை வாங்கிவிடலாம்.
    Next Story
    ×