search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வங்கி கடன் தவணை முடிவதற்கு முன்பே வீடு விற்பனை
    X

    வங்கி கடன் தவணை முடிவதற்கு முன்பே வீடு விற்பனை

    வங்கியில் வீட்டு கடன் பெற்று கட்டப்பட்ட அல்லது வாங்கப்பட்ட வீடு அல்லது பிளாட் ஆகியவற்றை நிதி நெருக்கடி காரணமாக விற்பனை செய்ய வேண்டிய சூழலில் எவ்விதமான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.
    வங்கியில் வீட்டு கடன் பெற்று கட்டப்பட்ட அல்லது வாங்கப்பட்ட வீடு அல்லது பிளாட் ஆகியவற்றை நிதி நெருக்கடி காரணமாக விற்பனை செய்ய வேண்டிய சூழலில் எவ்விதமான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி ரியல் எஸ்டேட் சட்ட ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ள தகவல்களை இங்கே காணலாம்.

    வீடு விற்பவர் பொறுப்பு

    வீட்டை விற்க விரும்புபவர் சம்பந்தப்பட்ட வங்கிக்கு அனைத்து தகவல்களையும் தெரிவித்து, கடனுக்கான அசல் மற்றும் வட்டி ஆகியவற்றின் நிலுவை, வங்கியில் அளிக்கப்பட்டுள்ள வீட்டுக்கான ஆவணங்கள் குறித்த பட்டியல், நிலுவை கடன் தொகை செலுத்தப்படும் பட்சத்தில் வீட்டுக்கான அனைத்து ஒரிஜினல் ஆவணங்களும் கடன் பெற்றவருக்கு அளிக்க வங்கிக்கு ஆட்சேபணை இல்லை என்ற தகவல்கள் அடங்கிய கடிதத்தை வங்கியிடம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

    வீடு வாங்குபவர் பொறுப்பு

    அவ்வாறு வங்கியிடமிருந்து பெற்ற கடிதங்கள் மற்றும் தன்னிடமுள்ள வீடு தொடர்புடைய அனைத்து பத்திரங்களின் நகல்களையும் வீட்டை வாங்குபவரிடம் வழங்க வேண்டும். வீட்டை வாங்குபவர் மேற்கண்ட ஆவணங்கள் மீது சட்ட ரீதியான ஆலோசனை பெற்று வீட்டின் உரிமையாளருக்கு முன்பணம் கொடுக்கலாம்.

    ஒப்பந்தம் பதிவு

    பின்னர், வீட்டை விற்பவர் மற்றும் வாங்குபவர் இடையே ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, சார்-பதிவாளர் அலுவலகத்தில் அதை முறைப்படி பதிவு செய்யவேண்டும். ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள கால அளவுக்குள் வீட்டுக்கான முழு தொகையையும் பெற்று, வங்கிக்கு நிலுவையாக உள்ள தொகையை செலுத்தி விட்டு, கணக்கு முடிக்கப்பட்டது என்பதற்கு அடையாளமாக, வங்கியிடம் இருந்து சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும்.

    வீடு சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் வங்கியிடமிருந்து பெற்று, அவற்றை வீட்டை வாங்குபவருக்கு கொடுத்து, அவரிடம் இருந்து அதற்குரிய ரசீது ஒன்றையும் பெற்றுக்கொள்வது அவசியம். அதன் பின்னர், வீட்டை விற்பவர், வாங்குபவருக்கு கிரயப் பத்திரம் எழுதி கொடுத்து சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

    வீடு வாங்குபவரது வங்கி கடன்

    வீடு வாங்குபவரும் வங்கியில் கடன் பெற வேண்டும் என்ற நிலையில், அதே வங்கியில் பெறுவதன் மூலம், நடைமுறை சிக்கல்கள் மற்றும் கால தாமதங்கள் தவிர்க்கப்படும். அவ்வாறு இல்லாமல் வேறு வங்கியில் வீட்டு கடன் பெறும் நிலையில் கீழ்க்கண்ட வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

    வங்கி நடைமுறைகள்


    வீட்டை வாங்குபவர் அவரிடம் அளிக்கப்பட்ட முந்தைய வங்கியின் கடிதம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன், புதியதாக கடன் அளிக்கும் வங்கி கேட்கும் ஆதாரங்கள் மற்றும் அதன் கடன் விண்ணப்ப படிவம் ஆகியவற்றை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

    அவற்றின் அடிப்படையில் கடன் தரக்கூடிய வங்கி உரிய பரிசீலனைக்கு பின்னர் கடன் அளிப்பதற்கு ஒப்புதல் வழங்கும். சம்பந்தப்பட்ட ஆவணங்களின் மீது முன்பே ஒரு வங்கியால் பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதால், புதிய வங்கியின் நடைமுறைகள் விரைவில் முடிவடைய வாய்ப்பு உண்டு.

    பத்திரம் பதிவு

    அதன் பின்னர், வீட்டு கடன் தொகையை புதிய வங்கி, முந்தைய வங்கிக்கு நேரிடையாக அளிக்கும். அதன் அடிப்படையில், வீடு சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் புதிய வங்கிக்கு, முந்தைய வங்கியால் அளிக்கப்பட்டு விடும்.

    பின்னர், வீட்டு கடன் அளிக்கும் வங்கி அசல் மற்றும் வட்டி போக மீதம் தொகை இருக்கும் நிலையில் அதை வீட்டை விற்பவருக்கு கொடுத்துவிடும். நிறைவாக, வீட்டை வாங்குபவர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் விற்பனை பத்திரத்தை வழக்கப்படி பதிவு செய்து கொள்ளலாம். 
    Next Story
    ×