search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களே ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கும் போது கவனம் தேவை
    X

    பெண்களே ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கும் போது கவனம் தேவை

    ஏ.டி.எம். எனப்படும் தானியங்கி பணப் பட்டுவாடா மையங்களில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஏ.டி.எம். மையங்களில் மோசடிக்கு உள்ளாகும் நபர்கள் குறித்த தகவல்கள் சமீபகாலமாக தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. இங்கு நாம் உஷாராக இருந்தால், மோசடிக்கு ஆளாகாமல் தவிர்க்கலாம். இது குறித்து வங்கிகளும் அவ்வப்போது வாடிக்கையாளர்களை எச்சரித்து வருகின்றன.

    ஏ.டி.எம். எனப்படும் தானியங்கி பணப் பட்டுவாடா மையங்களில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று மின்னஞ்சல் வாயிலாக வங்கிகள் தெரிவித்து வருகின்றன.

    செய்ய வேண்டியவை

    உங்கள் ஏ.டி.எம். பணப் பரிவர்த்தனை முழுவதும் ரகசியமாக இருக்க வேண்டும். நீங்கள் ‘பின்’ எண்ணை உள்ளீடு செய்வதை பிறர் பார்க்க அனுமதிக்கக் கூடாது.

    பரிவர்த்தனைகளைச் செய்து முடித்த பின்னர், ஏ.டி.எம். திரையில், மீண்டும் வரவேற்புத் திரை உள்ளதா என உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

    உங்களின் தற்போதைய செல்போன் எண் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அதன் மூலம், உங்களின் அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் அறிவிக்கை (ஸ்டேட்மென்ட்), குறுஞ்செய்திகள் (எஸ்.எம்.எஸ்.) பெறமுடியும்.

    ஏ.டி.எம்-.மில் உங்களைச் சுற்றியுள்ள நபர்களின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்துக் கவனமாக இருங்கள். அறிமுகமில்லாத நபர்கள் உரையாட முயற்சிக்கும்போது எச்சரிக்கை அவசியம்.

    சந்தேகத்துக்கு இடமான வகையில் ஏ.டி.எம்.-மில் ஏதேனும் கூடுதல் கருவிகள் இணைக்கப்பட்டுள்ளதா எனப் பார்க்கவும்.

    உங்களின் ஏ.டி.எம். கார்டு தொலைந்துபோனாலோ அல்லது அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை நடந்திருப்பதாக அறிந்தாலோ, உடனடியாக வங்கிக்கு தகவல் தெரிவியுங்கள்.

    வங்கிப் பரிவர்த்தனை தொடர்பான குறுஞ்செய்திகள், வங்கி அறிவிக்கைகளை தொடர்ந்து சரிபார்க்கவும்.

    ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இல்லாத நிலையிலும், பணம் இல்லை எனத் திரையில் தெரிவிக்கவில்லை எனில், அங்குள்ள தகவல் பலகையில் உள்ள எண்ணில் தொடர்புகொண்டு வங்கிக்குத் தகவல் தெரிவியுங்கள்.

    பணம் எடுத்தவுடன், எவ்வளவு பணம் எடுக்கப்பட்டுள்ளது எனக் குறுஞ்செய்தியை சரிபாருங்கள்.



    செய்யக்கூடாதவை

    ஏ.டி.எம். ‘பின்’ எண்ணை, ஏ.டி.எம். அட்டையின் பின்புறத்திலோ அல்லது மற்றவர் எளிதில் பார்க்கக்கூடிய இடத்திலோ எழுதி வைக்கக்கூடாது. அதை மனதில் பதிய வைத்துக்கொள்வதே நல்லது.

    வங்கியில் இருந்து புதிதாக ஏ.டி.எம். ‘பின்’ எண்ணை பெற்றவுடனும், குறிப்பிட்ட கால இடைவெளிகளிலும் அதை மாற்ற வேண்டும்.

    முன்பின் அறிமுகமில்லாதவர்கள் உங்கள் ஏ.டி.எம். அட்டையைப் பயன்படுத்தவோ, உங்களுக்கு உதவிபுரியவோ அனுமதிக்காதீர்கள்.

    வங்கி ஊழியர்கள், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உள்பட யாரிடமும், ஏ.டி.எம். ‘பின்’ எண்ணை தெரிவிக்கக் கூடாது. வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறும் போலியான அழைப்புகளை பொருட்படுத்த வேண்டாம்.

    பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது, ஏ.டி.எம். கார்டை மறவாமல் எடுத்துவந்து விடுங்கள்.

    ஏ.டி.எம். மையத்தில் அக்கார்டை பயன்படுத்தும்போது செல்போனில் பேசுவது, பிற கவனத்தை மாற்றும் வேலைகளில் ஈடுபடுவதைத் தவிருங்கள்.
    Next Story
    ×