search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களே ஆன்லைன் ஷாப்பிங் செய்கிறீர்களா...?
    X

    பெண்களே ஆன்லைன் ஷாப்பிங் செய்கிறீர்களா...?

    பெண்களே ஆன்லைன் ஷாப்பிங்கில் போலியான பொருட்களைக் கண்டு ஏமாறாமல் புத்திசாலித்தனமாக ஷாப்பிங் செய்வது எப்படி எனப் பார்க்கலாம்...
    தற்போது ‘ஆன்லைன் ஷாப்பிங்’ செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருந்த இடத்தில் இருந்தபடி ‘ஆர்டர்’ கொடுக்கும் வசதி, பில் தொகையை முன்கூட்டியோ அல்லது பொருளைப் பெறும்போதோ அளிக்கும் வசதி போன்றவை வாடிக்கையாளர்களை வசீகரிக்கின்றன.

    எங்கே வசதி இருக்கிறதோ, அங்கே சங்கடமும் ஏற்படத்தானே செய்யும்?

    ‘லாஜிக்கல் சர்வே’ என்ற நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஒரு கருத்துக்கணிப்பில், 38 சதவீதம் பேர் தாங்கள் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் போலியான பொருட்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

    அந்தப் போலியான பொருட்களின் பட்டியலில் வாசனைத் திரவியங்கள், காலணிகள் மற்றும் நாகரிகப் பொருட்களே முன்னிலை வகிக்கின்றன.

    இதுபோன்ற நிலையில், ஆன்லைன் ஷாப்பிங்கில் போலியான பொருட்களைக் கண்டு ஏமாறாமல் புத்திசாலித்தனமாக ஷாப்பிங் செய்வது எப்படி எனப் பார்க்கலாம்...

    பொருட்களை வாங்கும்போது அனைவரும் செய்யும் பொதுவான விஷயம், அந்தப் பொருட்களுக்கான மதிப்பீடுகளை (ரிவியூ) பார்ப்பது. ஆனால் அதனுடன் விற்பனையாளர் மீதான மதிப்பீடுகளையும் பார்க்கவேண்டும். இன்று இணைய வர்த்தக நிறுவனங்கள், பொருட்களை வாங்குபவர்களிடம் தங்கள் அனுபவத்தை மதிப்பிட ரிவியூ செய்யுமாறு கூறுவதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளன.

    இந்த ரிவியூக்கள் மூலம் அந்தப் பொருட்கள் மற்றும் அதன் விற்பனையாளர்களை மதிப்பிட முடியும். மேலும் இவ்வாறு உங்கள் அனுபவத்தை மதிப்பிடுவதன் மூலம் குறைகளை அந்த இணைய நிறுவனத்துக்குத் தெரியப்படுத்த முடியும். ஒரு குறிப்பிட்ட விற்பனையாளர் மீது அதிக எதிர்மறையான விமர்சனங்கள் எழும்போது, அதன் அடிப்படையில் நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

    பொருட்களை விற்பனை செய்யும் திரையில் பொருட்களுக்கு அருகில் ‘Fulfilled by Amazon’ அல்லது ‘Flipkart Assured’ என இருந்தால் அது நம்பகமான பொருள் என்ற தவறான கருத்து நிலவுகிறது. அந்த மூன்றாம் தரப்பு விற்பனையாளர், இணைய நிறுவனத்தின் பொருட்களைக் கொண்டு சேர்க்கும் சேவையைப் பயன்படுத்துவதால் பொருட்களுக்குத் தரும் உத்தரவாதம்தான் இது. எனவே இதைப் பொருட்களின் நம்பகத்தன்மையுடன் சம்பந்தப்படுத்தக்கூடாது.



    ஒரு பிரபலமான நிறுவனத்தின் பொருட்களை வாங்க நினைக்கும்போது, அந்த நிறுவனத்தின் இணையதளத்துக்குச் சென்று அதன் மாடல் எண், அம்சங்கள் மற்றும் பிற விஷயங்களைத் தெரிந்துகொண்டு அந்த இணைய வர்த்தக நிறுவனத்தில் குறிப்பிட்டுள்ளவற்றுடன் ஒப்பிட வேண்டும். ஆனால் அந்தப் பொருட்களுக்குத் தற்போது தேவை அதிகம் இல்லையெனில், அதிகத் தள்ளுபடி வழங்குவதும் வழக்கமானதுதான்.

    நீங்கள் ஒரு பொருளை ஏற்கனவே வாங்கியிருந்து அதைப் பரிசோதிக்க விரும்பினால், ‘லோகோ’ சரியான இடத்தில் உள்ளதா என்பது போன்ற நுணுக்கமான விஷயங்களைச் சரிபார்க்கலாம். அப்பொருள் செல்போனாக இருக்கும்பட்சத்தில், ஐ.எம்.இ.ஐ. எண்ணைச் சரிபார்க்கலாம். பொருட்களில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் உடனே அதைத் திருப்பி அனுப்பிப் பணத்தைத் திரும்பப் பெறலாம். ஆனால் இது, உங்களால் சேதப்படுத்தப்பட்ட பொருட்களுக்குப் பொருந்தாது.

    மின்னணுப் பொருட்கள் போன்ற சிலவற்றுக்கு மட்டும் பொதுவாக திரும்பப்பெறும் காலவரம்பு 10 முதல் 15 நாட்கள் எனக் குறுகியதாக இருக்கும். இதில் 15 நாட்கள் என்பது நீங்கள் பொருளை பதிவு செய்த நாளிலேயே துவங்கி விடும், அது உங்களிடம் வந்து சேர்ந்த நாளில் இருந்து துவங்காது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    பொருள் உங்களிடம் வந்து சேர 5 நாட்கள் ஆகி, நீங்கள் 10 நாட்கள் பயன்படுத்தி 15-வது நாளில் செயல்படாமல் போகிறது என்றால், அந்தப் பொருளுக்கு ஓராண்டு உத்தரவாதம் இருந்தாலும் இணைய வர்த்தக நிறுவனம் அதற்குப் பொறுப்பேற்காது. நீங்கள் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரை நேரிடையாகத் தொடர்புகொண்டு மாற்றித்தரக் கோரவேண்டும். அது போலியான பொருளாக இருக்கும்பட்சத்தில், அந்நிறுவனமும் உங்களுக்கு உதவாது.

    சமீபத்தில் புதிதாக வெளியான ஒரு பொருளை அதிகத் தள்ளுபடிக்குத் தருகிறார்கள் என்றால் அது போலியாக இருக்கவே வாய்ப்பு அதிகம். உதாரணமாக, ‘ஸ்போர்ட்ஸ் ஷூ’ போன்றவற்றில், அச்சுஅசலாக உண்மையானதைப் போலவே காட்சியளிக்கும் போலிகளை, சிறப்புத் தள்ளுபடியில் பாதி விலைக்குத் தருவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கலாம்.

    ஏற்கனவே கூறியபடி, ஒரு மாடல் காலாவதியாகி விட்டால் அதை விற்றுத்தீர்க்க தள்ளுபடி அளிக்கப்படலாம். ஆனால் அது அரிதானதுதான்.

    ஆக, ‘ஆன்லைன் ஷாப்பிங்’கில் அதிக கவனத்துடன் ஈடுபட வேண்டும்.

    ‘அதிரடி தள்ளுபடி’ என்றாலே உஷாராகிவிடுங்கள்! 
    Next Story
    ×